என் மனைவி





கே.பாக்யராஜ் என்கிற கதைசொல்லிக்கு நிகர் எவருமில்லை என்று சொல்வார்கள்... உண்மை தான்! ‘என் மனைவி’க்காக தன் மனைவி பூர்ணிமா பற்றி அவர் பகிர்ந்துகொண்டபோது, பாக்யராஜின் திரைப்படங்களைப் போலவே நகைச்சுவை இழையோட இருந்தது ஒவ்வொரு சம்பவமும்... கூடவே மனசைத் தொட்ட நிகழ்வுகளும்...

‘‘தாய்க்குப் பின் தாரம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு நிறைய அனுபவ மொழிகளைக் கேட்டிருப்போம். நிஜ வாழ்க்கையில அதையெல்லாம் அனுபவப்பூர்வமா உணரும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது...’’
- அவருக்கே உரித்தான டிரேட் மார்க் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் பாக்யராஜ்...
‘‘பூர்ணிமாவுக்கும் எனக்குமான அந்த முதல் சந்திப்பு இப்பவும் எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அவங்க பாம்பேலேருந்து தமிழ்ப் படங்கள் பண்ண இங்கே வந்திருந்த நேரம். என்னைப் பத்தி கேள்விப்பட்டு, என் படங்கள் பிடிச்சுப் போய், என்னை சந்திக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் ஒரு பிரிவியூ தியேட்டர்லேருந்து வெளியே வர்றேன்... அறிமுகப்படுத்திக்கிட்டு, ‘படபட’ன்னு இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. நமக்கு இங்கிலீஷ் தகராறு. ‘ஓ.கே... சீ யு...’ன்னு ரெண்டே வார்த்தைகளோட முடிச்சிக்கிட்டுப் போயிட்டேன். ‘ரொம்பத் திமிரு பிடிச்ச ஆள் போல...’ன்னு என்னைப் பத்தி அவங்களுக்குள்ள ஒரு தப்பான அபிப்ராயத்தை அந்த சம்பவம் உண்டாக்கிடுச்சுன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிஞ்சது!’’



அப்புறம்னா? எப்புறம்?
‘‘டார்லிங்... டார்லிங்... டார்லிங்... படத்துக்காக ஹீரோயின் தேடிட்டிருந்தப்ப, பூர்ணிமா ஞாபகத்துக்கு வந்தாங்க. அந்த கேரக்டருக்கு அவங்க பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு. அதனால அவங்களை வர வச்சு கதை சொன்னேன். அப்ப நான் அவங்கக்கிட்ட கலகலப்பாப் பேசினதைப் பார்த்துட்டு, ‘அன்னிக்கு சரியா பேசாம இன்சல்ட் பண்ணீங்களே...’ன்னு கேட்டாங்க. ‘நீ இங்கிலீஷ்லயே ஆரம்பிச்சு, படபடன்னு பேசிட்டே போனே... இப்ப பேசுற மாதிரி அப்ப தமிழ்ல பேசியிருந்தா, நின்னு நிதானமா நிறைய பேசியிருப்பேன்’னு தப்பிச்சு ஓடினதுக்கான காரணத்தைச் சொன்னதும் சிரிச்சாங்க. அப்புறம்தான் அவங்களுக்கு என்மேல நம்பிக்கையே வந்தது...’’

நம்பிக்கை வந்தது! சரி... அந்த நம்பிக்கைதான் காதலானதா? இப்படி நாம் கேட்கவில்லை. நம் பார்வையின் அர்த்தம் புரிந்து அவரே விளக்குகிறார்...
‘‘அந்தப் படம் பண்றபோது எனக்கும் பூர்ணிமாவுக்கும், ஒரு டைரக்டருக்கும் ஹீரோயினுக்குமான உறவுதான் இருந்தது. தவிர அப்ப என்னோட முதல் மனைவி பிரவீணா இருந்ததால, எனக்கு எந்தப் பெண் மேலேயும் எந்த ஐடியாவும் தோணினதில்லை...’’

‘‘ஒரு கட்டத்துல பிரவீணாவும் பூர்ணிமாவும் ரொம்ப நெருங்கிப் பழக ஆரம்பிச்சிட்டாங்க. ஜூலை 27 எனக்கும் பிரவீணாவுக்கும் கல்யாணநாள். அன்னிக்குத்தான் பூர்ணிமாவுக்கு பிறந்தநாள். இது ரொம்ப நாள் வரை எனக்குத் தெரியாது. ஒருமுறை எங்க கல்யாண நாளன்னிக்கு நானும் பிரவீணாவும் வெளியூர்ல இருந்தோம். அப்ப ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டாங்க. ‘வெளியூருக்கு வந்தும்கூட ரெண்டுபேரும் பேசிக்கிறீங்களே... என்ன விஷயம்’னு பிரவீணாகிட்ட கேட்டப்பதான், இந்த விஷயமே எனக்கு தெரிஞ்சது...’’

கலகலப்பாக பேசிக் கொண்டே வந்த பாக்யராஜின் குரலில் இப்போது கலகலப்பு காணாமல் போகிறது. நமக்கு காரணம் புரிகிறது.

‘‘யாரும் எதிர்பார்க்காத நேரத்துல திடீர்னு பிரவீணாவுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. எவ்வளவோ போராடியும் அவங்களைக் காப்பாத்த முடியலை. பிரவீணா போனதும் எனக்கு உலகமே இருண்டு போன மாதிரி இருந்தது...’’

பிரவீணாவின் மறைவு பற்றிப் பேசும்போது பாக்யராஜின் முகத்தில் சோகத்தின் சுவடுகள். சட்டென சகஜமாகி, தன் அடிமன வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேச்சைத் தொடர்கிறார்...

‘‘எனக்கு அம்மா, அப்பா கிடையாது. ஒரேயொரு அண்ணன் மட்டும்தான். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அண்ணனும் சொந்தக்காரங்களும் தொல்லை பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கோ அப்படி எந்த எண்ணமும் இல்லை. நடந்த விஷயங்களை மறக்கணும்னு பாம்பே, கோவான்னு சுத்திக்கிட்டே இருந்தேன். மனசுக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள்... குழப்பங்கள்... சினிமாவுல ஜெயிக்கிறதும், உச்சத்துக்குப் போறதும் எல்லோருக்கும் அமையறதில்லை. எனக்கு அது கிடைச்சது. பெத்தவங்களும் இல்லை. கட்டினவளும் இல்லை. கட்டுப்படுத்த யாருமே இல்லாட்டா, என் வாழ்க்கை வேற திசையை நோக்கிப் போயிடுமோன்னு முதல் முறையா மனசுக்குள்ள சின்னதா ஒரு பயம் எட்டிப் பார்த்தது...’’

கண்ணாடியை கழற்றி துடைத்துக் கொள்கிறார். மறுபடி அணிந்து கொள்கிறார். இடைப்பட்ட நொடியில் கவனிக்கிறோம். அவரது கண்கள் கலங்கித் தெரிகின்றன.
‘‘கால்கட்டு போட்டுக்கிறதுன்னு அப்பதான் முடிவு பண்ணினேன். மாசக்கணக்குல சுத்திட்டு, மறுபடி பாம்பே வந்தேன். அங்க ஒரு ஹோட்டல்ல தங்கினேன். எனக்கும் பூர்ணிமாவுக்கும் ஒரே பி.ஆர்.ஓ.

அவரை யதேச்சையா அங்கே சந்திச்சேன். அவரோட பேசிட்டிருக்கிறப்ப, பூர்ணிமா அடுத்த நாள் பாரிஸ் போறதாகவும், அவங்களை வழியனுப்ப வந்திருக்கிறதாகவும் சொன்னார். பூர்ணிமாகிட்டேயும், நான் பாம்பே வந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருக்கார். ‘நம்மூருக்கு வந்துட்டு, நம்ம வீட்டுக்கு வராமப் போனா எப்படி’ன்னு பூர்ணிமாவும் அவங்கம்மாவும் என்னை அவங்க வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டாங்க... போனேன்.

அது ஒரு நவராத்திரி டைம். பூர்ணிமா என்னை மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கேருந்து அக்கம்பக்கத்துல எல்லா வீடுகள்லேயும் ‘தாண்டியா’ ஆடறதைக் காட்டி, அதைப் பத்தி எனக்கு விளக்கிட்டிருந்தாங்க. அப்பாவித்தனமான அந்தப் பேச்சும், கள்ளம் கபடம் இல்லாத மனசும் என் மனசைத் தொட்டது. இந்தப் பொண்ணு நமக்குப் பொருத்தமா இருக்குமோன்னு மனசுல தோணுச்சு.

அவங்க அப்ப பீக்ல இருந்த டைம்... எப்படி கேட்கறதுன்னு தயக்கத்தோடவே கிளம்பினேன். கார் பக்கத்துல வந்துட்டேன். காரை ஸ்டார்ட் பண்றப்ப, ‘பாரிஸ் போனதும், மெட்ராசுக்கு போன் பண்ணு’ன்னேன். அவங்களுக்கு செம ஷாக்.

மெட்ராஸ் வந்து அவங்க போனை எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தேன்... அவங்களும் நாலஞ்சு முறை போன் பண்ணியிருக்காங்க. அவங்க போன் பண்றப்பல்லாம் நான் பிசியா இருந்திருக்கேன். என் அசிஸ்டென்ட் போன் எடுத்திருக்கான். இந்த விஷயம் எதுவுமே எனக்குத் தெரியாது.

ஒரு வாரம் கழிச்சு, ‘சார் ஒரு வாரமா உங்களோட ரசிகை ஒருத்தங்க, பாரிஸ் கார்னர்லேருந்து போன் பண்ணிட்டே இருக்காங்க... பிசியா இருக்காரு, அப்புறம் பேசுங்க’ன்னு சொல்லிட்டேன்னு சாவகாசமா என்கிட்ட விஷயத்தைச் சொன்னான். ‘அடப்பாவி... அந்த போனுக்குத்தான்டா காத்திட்டிருக்கேன்... என் வாழ்க்கையில முக்கியமான கட்டமாச்சேடா... அது பாரிஸ் கார்னர்லேருந்து வரலைடா...

பாரிஸ்லேருந்து’ன்னு சொன்னேன்.

மறுபடி போன் வந்தப்ப, மிஸ் பண்ணலை. எந்த அழைப்புக்காக காத்திட்டிருந்தேனோ, அது வந்ததும் என்ன பேசறதுன்னே தெரியலை. ‘ஷூட்டிங்கெல்லாம் நல்லாப் போகுதா... சாப்பிட்டியா... எப்ப வர்றே’ன்னு தேவையில்லாததை எல்லாம் பேசிட்டு வச்சிட்டேன். ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு ஒரே கேள்விதான் கேட்கணும். ஏற்கனவே காதலிச்சு, கல்யாணம் பண்ணினவன் நான்.

அதனால காதல் டயலாக் எல்லாம் பேசப் போறதில்லை. ஆனாலும், சினிமால ரொம்ப ஈசியா நடக்கற அந்த விஷயம், நிஜத்துல எனக்கு வரலை.

அப்புறம் அவங்க இந்தியா வந்ததும், ஒருவழியா தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, மனசுல இருந்ததைக் கேட்டுட்டேன். ‘அம்மாகிட்ட பேசுங்க’ன்னாங்க. அம்மாகிட்ட கேட்டப்ப, அப்பாகிட்ட பேசச் சொன்னாங்க. அப்பா, தம்பியை கை காட்டினார். தாத்தா, பாட்டின்னு எல்லார்கிட்டேயும் பேசினேன். எல்லோரோட சம்மதத்தோடவும் எங்க கல்யாணம் நல்லபடியா நடந்தது.

கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் போகவெல்லாம் நேரமில்லை. ரெண்டு குழந்தைங்க பிறந்த பிறகுதான் ஹனிமூன். அப்படி நாங்க போன இடம் பாரிஸ்... அங்க போக ஒரு காரணம் இருந்தது.

கல்யாணத்துக்கு முன்னாடி பாரிஸ் கிளம்பின பூர்ணிமாவை, மெட்ராசுக்கு போன் பண்ணச் சொல்லி அனுப்பினேன் இல்லியா? அப்பவே அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு. இவர் எதுக்கு அங்கேருந்து மெட்ராசுக்கு போன் பண்ணச் சொல்றாரு? அப்படி நம்மகிட்ட பேச என்ன விஷயம் இருக்கும்னு யோசிச்சிருக்காங்க. ஒருவேளை நான் பிரபோஸ் பண்ணி, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா, கல்யாணத்துக்குப் பிறகு அவர்கூட சேர்ந்து வந்து மெழுகுவர்த்தி ஏத்தறேன்னு வேண்டிக்கிட்டாங்களாம்.

பாரிஸ்ல உள்ள அந்த சர்ச்ல, மனசுல எதையாவது நினைச்சுக்கிட்டு, மெழுகுவர்த்தி ஏத்தினா அப்படியே நடக்குமாம். பாரிஸ் போய், அந்த சர்ச்ல வச்சு இந்த விஷயத்தை பூர்ணிமா சொன்னப்ப நெகிழ்ந்து போயிட்டேன்.

கல்யாணமான அன்னிலேருந்து, இன்னி வரைக்கும் என்னை வழி நடத்தறது பூர்ணிமாதான். எனக்கு என்ன தேவை, என்ன பிடிக்கும்னு அவங்களுக்குத்தான் சரியாத் தெரியும்.
ஷூட்டிங் முடிஞ்சு வரும்போது, பிள்ளைங்களைக் கூட்டிட்டு, ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்துடுன்னு சொல்ற அளவுக்குத்தான் என் பாசம் இருந்தது. ஆனா, காருக்குள்ளே ஏறினதும், பின் சீட்ல ரெண்டு கிஃப்ட் பாக்கெட் ரெடியா இருக்கும். ‘குழந்தைங்களுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கீங்களா’ன்னு என்னைப் பார்த்து கண்ணைக் காட்டுவாங்க. ‘என்ன கிஃப்ட்டுப்பா’ன்னு பசங்க கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது. ‘சஸ்பென்ஸ்... நீங்களே பிரிச்சுப் பாருங்க’ன்னு சொல்லி சமாளிப்பேன். பிள்ளைங்களுக்கும் எனக்குமான அந்த நெருக்கத்தை வளர்த்ததுல பூர்ணிமாவுக்கு பெரிய பங்கு உண்டு.

அத்தனை சக்ஸஸ் படங்கள் கொடுத்தும், பிசியான ஹீரோயினா இருந்தும், கல்யாணத்துக்குப் பிறகு தன்னை அப்படியே பக்கா ஹவுஸ்வொயிஃபா மாத்திக்கிட்டவங்க பூர்ணிமா. ரொம்ப பொசசிவ். ‘மவுன கீதங்கள்’ படத்துல வர்ற சரிதா கேரக்டரைவிட அதிக பொசசிவ்! அவங்களுக்குன்னு நேரம் ஒதுக்கிறதில்லைங்கிறதுதான் அவங்களோட மிகப்பெரிய மனக்குறை. என்னோட வேலைச்சுமை அப்படி!

‘பாக்யா’ பத்திரிகை ஆரம்பிச்சிருந்த நேரம்... ராத்திரி பத்து மணி வரைக்கும் சினிமா டிஸ்கஷன் போகும். அதுக்கப்புறம் ராத்திரி ஒரு மணி வரைக்கும் பத்திரிகை வேலை... ஒருநாள் பெட்ல உட்கார்ந்துக்கிட்டு, வாசகர் கடிதங்கள் படிச்சிட்டிருந்தேன். பூர்ணிமா பக்கத்துல படுத்திருந்தாங்க. ஒரு லெட்டரை எடுத்து வாசிக்க ஆரம்பிச்ச எனக்கு ஷாக்... ‘டியர் ஹஸ்பென்ட்... உங்க சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியுது. பத்திரிகைக்கு நேரம் ஒதுக்க முடியுது. மனைவின்னு ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டீங்களா...’ன்னு போச்சு அந்த லெட்டர்.

சட்டுனு திரும்பினா, என்னையே பார்த்துக்கிட்டிருக்காங்க பூர்ணிமா. என்னோட தவறை நினைச்சு வருத்தப்பட்டு, மனசார ‘ஸாரி’ கேட்டேன். மனசு நிறைய அன்பு இருந்தாலும், அதை வெளிப்படுத்தத் தெரியாது எனக்கு. கிஃப்ட் வாங்கித் தர்றது, சர்ப்ரைஸ் பண்றதெல்லாம் எனக்கு வராது.

பிரவீணா என்னை ‘ராஜா’ன்னு கூப்பிடுவாங்க. அதைக் குறிக்கிற மாதிரி ‘ஆர்’னு போட்ட ஒரு மோதிரத்தை ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பட டைம்ல எனக்குக் கொடுத்தாங்க. ஆனா, ‘தாவணிக் கனவுகள்’ பண்றப்ப, அந்த மோதிரத்தைத் தொலைச்சிட்டேன். சென்டிமென்ட்டான அந்த விஷயம் என்னை பாதிச்சிடக்கூடாதேன்னு, வைரக்கல் வச்சு, அதே மாதிரி ஒரு மோதிரத்தை எனக்குப் போட்டாங்க பூர்ணிமா. யோசிச்சுப் பார்த்தா, பதிலுக்கு நான் அவங்களுக்கு எதுவுமே செய்யலையேன்னு தோணுது. பூர்ணிமா எந்தளவுக்கு சாஃப்ட் கேரக்டரோ, அந்தளவுக்கு மன தைரியம் கொண்டவங்க. அவங்க பார்க்காத கஷ்டங்கள் இல்லை. ஆனா, எல்லாத்தையும் தாண்டி, போராடி, எழுந்து நிக்கிற சக்தி

அவங்களுக்கு அதிகம். எல்லா வீடுகளைப் போலவும், எங்களுக்குள்ளேயும் அடிக்கடி சின்னச்சின்ன சண்டைகள் வரும். பிரவீணா என்கிட்ட சண்டை போடுவாங்க. பூர்ணிமா சட்டுன்னு அழுதுடுவாங்க.



‘சண்டை போட்டாலாவது கொஞ்ச நேரம் காரசாரமாப் பேசலாம்... இப்படி அழுதா, நான் என்னம்மா செய்ய’ன்னு சரண்டர் ஆயிடுவேன். இந்த உலகத்துலேயே பெரிய நீர்வீழ்ச்சி, பெண்களோட கண்ணீர்னு சும்மாவா சொன்னாங்க!

பூர்ணிமாவுக்கு நன்றிக்கடனைத் திருப்பிச் செய்ய, எனக்கு இந்த ஒரு ஜென்மம் பத்தாது. இன்னும் ரெண்டு பிறவி வேணும். பூர்ணிமாவுக்கு அவங்கப்பான்னா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான, பர்ஃபெக்ட்டான மனிதர். எல்லாத்தையும் விட குடும்பத்தை, குழந்தைங்களை அளவு கடந்து நேசிக்கிற மனிதர். எங்களுக்குள்ள சின்னதா ஏதாவது சண்டை வந்தாலும், உடனே பூர்ணிமா அவங்கப்பாவை நினைச்சு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல ஆபீஸ் வேலை... சாயந்திரம் வேலை முடிஞ்சு
வந்ததும் ஸ்கூட்டர்ல தியேட்டர் போய் சினிமா பார்க்கிறது... கணவரோட சேர்ந்து சாப்பிடறதுன்னு மாமூலான மிடில் கிளாஸ் குடும்பத்து வாழ்க்கை, பூர்ணிமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, நான் பாக்யராஜா இருக்கிறதால, அது சாத்தியமாகாத விஷயம். ஒரு மிடில் கிளாஸ் ஹஸ்பெண்டா, இன்னொரு பிறவி எடுத்து, அவங்க ஆசைப்படி அவங்களுக்காகவே வாழணும்.

சமீபத்துல கேரளா போயிருந்தோம்... ஒரு கோயில்லேருந்து, இன்னொரு கோயிலுக்குப் போகணும். நடந்து போற தூரம்தான். அதனால கார் எடுக்கலை. நடக்க ஆரம்பிச்சதும், மழை தூற ஆரம்பிச்சது.

பக்கத்துலேயே ஒரு கடையில குடை வாங்கி, ஒரே குடைக்குள்ளே நானும் பூர்ணிமாவும் மட்டும் நடந்தோம்... அந்த மழை நிக்கவே கூடாதுன்னு ரெண்டு பேர் மனசும் ஏங்கினது. ரொம்ப சிலிர்ப்பான அனுபவமா இருந்தது. பூர்ணிமா முகத்தில சந்தோஷத்தைப் பார்க்கணுமே... அந்த மாதிரித் தருணங்கள்தான் வாழ்க்கையை இன்னும் ரசனையாகவும் சுவாரஸ்யமாகவும் வழி நடத்திட்டிருக்கு!’’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாக்யராஜ் படம் பார்த்த மாதிரி மனதை நிறையச் செய்கிறது அவரது பேட்டி!
- ஆர்.வைதேகி

என் குழந்தைகள்!
சரண்யா, சாந்தனு... ரெண்டு பேருமே அம்மா செல்லம். என்னைவிட, அவங்களுக்கு அவங்கம்மாகிட்ட கொஞ்சம் கூடுதல் அட்டாச்மென்ட்! பையன் ஏதாவது தப்பு பண்ணினா, எப்பவாவது திட்டுவேன்.

அதுவே அவனுக்குப் பொறுக்காது. ‘உங்களுக்கு அம்முலுதான் செல்லம்... அவளை ஏதாவது சொல்றீங்களா’ன்னு சண்டை போடுவான். ‘அவ பொண்ணுடா... திட்ட முடியாது. நீ பையன்... திட்டினாலும் மறந்துடுவே’ன்னு ஒவ்வொரு முறையும் சமாதானம் சொல்வேன். பையனுக்கு சின்ன வயசுலயே சினிமா ஆசை இருந்தது. ஆசைப்படியே நடிக்க வந்தான். பொண்ணு நடிக்க மாட்டான்னு நினைச்சிட்டிருந்தப்ப, அவளுக்கும் அந்த ஆசை இருக்கிறது தெரிஞ்சது. ‘பாரிஜாதம்’னு அவளுக்காகவே ஒரு படம் டைரக்ட் பண்ணினேன். அப்புறம் என்னவோ தொடர்ந்து நடிக்கிற ஐடியா இல்லை.

ஜுவல்லரி டிசைனிங், ஃபேஷன் டிசைனிங்னு அவங்க ஆர்வம் வேற பக்கம் திரும்பிருச்சு. பையனோட கம்பேர் பண்ணினா, பொண்ணு எனக்கு ஒரு பர்சன்ட் செல்லம் அதிகம்னுதான் சொல்லணும்.

நான் சினிமாவுக்கு வந்தப்ப அனுபவிச்ச கஷ்டநஷ்டங்களோ, பசி, பட்டினி அனுபவமோ என் பையனுக்கு இல்லை. பாக்யராஜ் பையனா பிறந்ததால தப்பிச்சான். அடுத்த வருஷம் அவனுக்கு சினிமால நல்ல இடம் கிடைக்கும்னு எதிர்பார்க்கறேன். ஒரு அப்பாவா அதானே எனக்கும் பெருமை!