மருத்துவ குணம் நிறைந்த மகத்தான பழங்கள்!




எல்லாப் பழங்களும் சத்து நிறைந்தவை என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. இருப்பினும், கூடுதலாக மருத்துவ குணங்களும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த மரங்களின் பழங்கள் சத்து நிறைந்திருப்பதுடன், மருத்துவ குணம் மிக்கதாகவும் உள்ளன என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், இவற்றில் வளர்ச்சியை கட்டுப் படுத்தி சிறப்பாக பலன் பெறுவதோடு மதிப்பு கூட்டுதலும் செய்ய முடியும் என்கிறார்.

எலுமிச்சைப் பழம்

எலுமிச்சைச் சாறுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் பூசி, கழுவி வர முகப்பொலிவு ஏற்படும்.

*பாரம்பரியமாக வழிபாட்டுக்குப் பயன்பட்டு வரும் சிறந்த மருத்துவ குணம் மிகுந்த பழம் இது... இன்றோ நட்சத்திர விடுதிகளில் கை கழுவ பயன்படுவது வேதனை தரும் ஒரு கலாசார முரண்பாடு.
 
*முட்கள் உள்ள குற்று மரம் என்பதால், வீட்டருகில் வைக்கும் போது கவனம் தேவை. ‘கவாத்து’ செய்வதன் மூலம் உயரத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நல்ல சூரிய ஒளி தேவை.

*வைட்டமின் சி அதிகமுள்ள பழம். வீட்டிலேயே கோடை காலத்தில் குளிர் பானமாகவும் அதிகம் கிடைக்கும் போது ஊறுகாயாகவும் மதிப்புக் கூட்ட முடியும். கோடை காலத்தில் எலுமிச்சை இலைகளை மோரில் கலந்து சுவையை கூட்டுவதோடு, ஆரோக்கிய பானமாகவும் மாற்ற முடியும். எலுமிச்சைச்சாறுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் பூசி, கழுவி வர முகப்பொலிவு ஏற்படும். ஓரிரு சொட்டு சாறை கண் கழுவும் குவளையில் நீரில் இட்டு கண்களை கழுவி வர கோடையில் சிவப்பாக மாறும் கண்களுக்கு தீர்வு கிடைக்கும்.

*நிறைய ரகங்கள் உள்ளன. ஒட்டுச் செடிகள் விரைவில் காய்ப்புக்கு வருவதால் வளர்ப்பவர்களிடையே பிரபலமாக உள்ளது. ஆண்டு முழுவதும் இதற்கு தேவை உண்டு.

கொய்யா

கொய்யா மலச்சிக்கலுக்கு தீர்வு தரும்.

*சமீப காலமாக ‘ஏழைகளின் பழம்’ என்ற நிலை மாறி எல்லோராலும் உண்ணப்படுகிறது. விலையும் உயர்ந்து கிலோ ரூ.70 வரைக்கும் கூட விற்கப்படுகிறது.

*மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் பழம். உள்தோற்ற நிறத்தை வைத்து சிவப்பு மற்றும் வெள்ளை என்றழைத்தாலும் சத்துகள் ஒன்றுதான். பறவைகளுக்குப் பிடித்த பழம்... குறிப்பாக கிளிகள் விரும்பி உண்ணும்.

*20 அடிக்கு மேல் வளர்ச்சியிருந்தாலும், ‘கவாத்து’ மூலம் உயரத்தை 5 அடிக்குள் குறைத்து வருடம் முழுவதும் பழம் பறிக்க இயலும்.

*‘ரத்த சர்க்கரை அளவு குறையும், வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்’ என இலைகளை உண்பவர்களும் வேர், பட்டை போன்றவற்றை கஷாயமிட்டு அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இலைகளை அரைத்து காயங்கள்/புண்கள் மேல் பூசிவர விரைவில் ஆறிவிடும்.

*பாரம்பரிய ரகங்கள் மறைந்து ‘லக்னோ 49’, ‘பனாரஸ்’ போன்ற வட இந்திய ரகங்களும் 1 கிலோ கொய்யா ரகமும் வளர்ப்பவர்களிடையே பிரபலமாக உள்ளது. இந்தப் பழத்திலும் மதிப்புக்கூட்டுதல் செய்து பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது இதன் சாகுபடிக்கு ஏற்றம் தரும் நல்ல முன்னேற்றமே!  

மாதுளை

மருத்துவ குணமிக்க மாதுளை பெண்களுக்குச்  சிறப்பானது.

*அதிக உயரம் செல்லாத குற்று மரம். மருத்துவ குணமிக்க பழம்... குறிப்பாக பெண்களுக்குச் சிறப்பானது. துவர்ப்புடன் கூடிய இனிப்பு இதன் சிறப்பு.

*விதைகளின் கடினத்தன்மை அல்லது மென்தன்மை, பழங்களின் அளவு, சுவை போன்ற காரணிகளால் ரகங்கள் பெயரிடப்படுகின்றன. நிறைய ரகங்கள் இருப்பினும் ‘ஜோதி’, ‘கணேஷ்’, ‘கோ.1’, ‘ஏற்காடு’ போன்ற ரகங்கள் நமக்கு ஏற்றவை.

* வயிற்றுப்போக்கு ஏற்படும் போது இதன் மொட்டுகளை உபயோகிப்பார்கள்.

*நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்ந்த கிளைகளையும் குச்சிகளையும் அகற்றி பராமரிக்க வேண்டும். பழங்களை பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற, பிஞ்சாக இருக்கும் நிலையில் அவற்றுக்கு மெல்லிய உறையிட்டு பூச்சிகள் தாக்காமல் தடுக்க வேண்டும்.

(விதை போடுவோம்!)