இனிது இனிது வாழ்தல் இனிது!



‘Comparison is the thief of joy’ என்கிறார் தியோடர் ரூஸ்வெல்ட்.அடுத்தவருடன் ஒப்பிடப்படுவதை குழந்தைகள் கூட விரும்புவதில்லை. அப்படியிருக்கையில், கணவன் - மனைவிக்கிடையே ஒப்பீடு தலை தூக்கலாமா? பெரும்பாலான திருமண உறவுகளில் விரிசலுக்கான முதல் கோடு விழவே இந்த ஒப்பீடுதான் காரணமாகிறது!

தனக்குக் கிடைக்காத அல்லது தன்னால் அடைய முடியாத விஷயங்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பேசும் போது திருமண உறவில் மகிழ்ச்சி மறைந்து போவதைத் தவிர்க்க முடியாது.
தாம்பத்தியத்தில் நாளுக்கு நாள் அன்பு கூட வேண்டும் என்றும் வெற்றிகரமான மணவாழ்க்கையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றும் விரும்புகிற எந்த தம்பதியரும், தன் துணையை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள்.

ஒப்பிட்டுப் பேசுகிற இந்தப் பழக்கத்தால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. மாறாக அதில் துணையைப் பற்றிய அநாகரிகமான விமர்சனங்களும் குறைகளுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒப்பிடப்படுவதால் துணைக்குத் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.

ஷாலினியும் பாலாஜியும் உறவினர்கள்.  ஷாலினி படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் வேலை பார்க்கப் போய் விட்டார். பாலாஜிக்கு இந்தியாவில் வேலை. இருவருக்கும் திருமணம் நிச்சயமானது. பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஷாலினி யின் நடை, உடை, பாவனைகளில் மட்டுமின்றி, பேச்சு, சிரிப்பு என எல்லாவற்றிலும் அமெரிக்க வாசனை தூக்கலாக இருந்ததை பாலாஜி உணர்ந்தார். திருமணமான நாள் முதல் மனைவியின் பக்கத்தில் கூட நெருங்க முடியாமல் தவித்தார் பாலாஜி. அந்தரங்க நேரத்தில் கூட அந்நியமாகத் தெரிந்த மனைவியின் பாஷையும் நாகரிகமும் அவரை உறுத்தியிருக்கிறது.

‘அவளை என்னால மனைவி மாதிரியே நினைக்க முடியல. ஏதோ என்னோட முதலாளி மாதிரி தெரியறா...’ என பாலாஜியும்,  பாலாஜியை கணவராக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை பற்றி ஷாலினியும் தனித்தனியே என்னிடம் புலம்பினார்கள்.‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு மனைவி அமையணும்? என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கக் கூடக் கூச்சமா இருக்கு... நான் கற்பனை பண்ணி வச்சிருந்த மனைவிக்கும் இவளுக்கும் கொஞ்சமும் பொருத்தமே இல்லை’’ என்றார் பாலாஜி.‘‘ஃபாரின்ல நான் பார்த்த ஆம்பிளைங்க எப்படி இருப்பாங்க தெரியுமா? இவன் சரியான பத்தாம்பசலி. எனக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவன்’’ என்றார் ஷாலினி.

இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னைக்குக் காரணம் கலாசார வேறுபாடு. அது அத்தனை சுலபத்தில் தீர்க்க முடிவதல்ல. இருவருக்கும் புரிதல் இல்லை. இந்த உறவு சரிவராது என்கிற முன்தீர்மானத்துக்கு இருவரும் ஏற்கனவே வந்துவிட்டதால், விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். இவர்கள் இருவருக்கும் மனதில் துணையைப் பற்றிய ஒப்பீடு மறைந்திருந்ததும் பிரிவுக்கான இன்னொரு முக்கிய காரணம்.பொதுவாக இத்தகைய மனநிலை உள்ளவர்களுக்குக் கீழ்க்கண்ட எண்ண ஓட்டங்கள் இருக்கும்.

* நான் தவறான இடத்தில் இருக்கிறேன்.
* நான் தோற்றுவிடுவேன்.
* என்னைப் பற்றி என் துணைக்கு  நல்ல அபிப்ராயங்கள் இல்லை.
* நான் இந்தச் செயலுக்குத் தகுதி அற்றவன்(ள்).

இப்படியான எண்ண சுழற்சிகளின் விளைவாக, அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். குடும்பத்தில் மட்டுமின்றி, வேலை, வெளியிடங்களிலும் இதன் பிரதிபலிப்பைப் பார்க்கலாம். இது ஒரு சுழல் போல சுற்றியடித்து, உறவை மோசமாக்கும்.துணையைப் பற்றிய ஒப்பீட்டில் தோற்றத்துக்கும் முக்கிய இடம் உண்டு. அதிலும் இருவரில் ஒருவர் அழகிலும் ஆளுமையிலும் மேம்பட்டவராகவும், இன்னொருவர் இரண்டிலும் சுமாரானவராகவும் இருக்கும் பட்சத்தில் இந்த தோற்ற ஒப்பீடுஇருவருக்கும் இடையில் பூதாகரமாக வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தன் துணையைவிட தான் அழகிலும் அறிவிலும் குறைந்தவர் என உணர்கிற அல்லது துணையைவிட தானே சிறந்தவர் என உணர்கிற கணவனோ, மனைவியோ தம் தரத்தை தாமே குறைத்துக் கொள்வார்கள். ஒப்பிடுதலை விலக்கி, அன்னியோன்யம் வளர்க்க நினைக்கும் தம்பதியருக்கு சில பயிற்சிகள்...

* எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் அதிக மகிழ்ச்சியைத் தரும். சிலதில் திறமை அதிகமிருக்கும். அத்தகைய விஷயங்களைக் கண்டுபிடித்து அவற்றில் கவனத்தை அதிகரிக்கலாம். டி.வி. பார்ப்பது, சமைப்பது, சேர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்வது என இது எதுவாகவும் இருக்கலாம்.

* வாழ்க்கையில் எந்தப் பகுதிகள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன, அவற்றுக்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பாருங்கள். சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறியவையாக இருக்கலாம். உதாரணத்துக்கு திருமணத்துக்கு முன் வேலைக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை, திருமணத்துக்குப் பிறகும் வேலையைத் தொடர அனுமதிப்பதாக முதலில் கணவர் சொல்லியிருப்பார். திருமணமான பிறகு அதைத் தடுக்கலாம்.

கணவர் அனுமதித்தாலும் மாமனார்-மாமியாருக்கு அதில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். இந்த நிலையில் அந்த மனைவி என்ன செய்வார்?
கணவரிடம் மனம் விட்டுப் பேசி, இருவருக்கும் சாதகமான ஒரு தீர்வு பற்றி யோசிக்கலாம். மாமனார், மாமியார் தடுக்கிறார்கள் என்றால் தனிக்குடித்தனம் போவதைப் பற்றி யோசிக்கலாம். இப்படி எதுவுமே சரி வராத போது, வீட்டிலிருந்த படியே செய்யக்கூடிய ஏதேனும் தொழில் பற்றி யோசிக்கலாம்.

* வாழ்க்கையில் இதுவரை சாதித்தது என்ன? சாதிக்க வேண்டும் என நினைத்தது என்ன? இரண்டுக்குமான தூரம் எவ்வளவு? அதை அடைய இன்னும் எப்படிப்பட்ட முயற்சிகள் வேண்டும் என கணவனும் மனைவியும் சேர்ந்து யோசிக்கலாம். இருவருக்குமான நெருக்கத்தையும் இந்தக் கோணத்தில் அணுகலாம். உதாரணத்துக்கு இருவருக்குமான அன்னியோன்யம் 10க்கு 4 என்று இருந்தால், அதை 10க்கு 10 ஆக மாற்ற என்ன செய்யலாம் என யோசித்து அதை நோக்கிய முயற்சிகளை எடுக்கலாம்.

* நெகட்டிவான உணர்வுகளையும் சூழலையும் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்கப் பழக வேண்டும். சில உறவுகளோ, நண்பர்களோ அல்லது சில விஷயங்களைப் பற்றிய விவாதமோ இருவருக்கும் அதிருப்தியைக் கொடுத்தாலோ, நிம்மதியைக் குலைத்தாலோ, அவற்றை ஒதுக்கி வைப்பதில் தவறில்லை. தாம்பத்தியத்தில் நாளுக்கு நாள் அன்பு கூட வேண்டும் என்றும்  வெற்றிகரமான மணவாழ்க்கையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்றும் விரும்புகிற எந்த தம்பதியும், தன் துணையை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள்.

(வாழ்வோம்!)

எழுத்து வடிவம்: மனஸ்வினி
படங்கள் நன்றி: மது இந்தியா போட்டோகிராபி
www.facebook.com/mariposachicophotography