நீங்கதான் முதலாளியம்மா!



எல்லா வீடுகளிலும் எல்லா நாட்களிலும் தேவை இருக்கிற பொருட்கள் இவை இரண்டும். பெண்களின் தனிப்பட்ட உபயோகத்துக்கும், பூஜை தேவைகளுக்கும் பயன்படுகிற மஞ்சள், குங்குமத்தை அதிக செலவின்றி வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரித்துக் கொள்ளலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கஜலட்சுமி.

 தான் சார்ந்த சுய உதவிக் குழுக்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கும், கடைகளுக்கும் மஞ்சள்- குங்குமம் தயாரித்து விற்பனை செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் இவர்.

மஞ்சள் குங்குமம் தயாரிப்பு

கஜலட்சுமி

‘சுய உதவிக்குழுவில சேர்ந்ததும், ஏதோ ஒரு தொழில் கத்துக்கணும்கிற ஆர்வத்துலதான் இதைக் கத்துக்கிட்டேன். ஆனா, இன்னிக்கு என் வாழ்க்கைக்கே இதுதான் ஆதாரமா இருக்கு. மஞ்சள், குங்குமத்தோட மகிமையைப் பத்தி நான் புதுசா ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை.

இப்பல்லாம் மஞ்சள் உபயோகிக்கிற பழக்கமே மறைஞ்சிட்டு வருது. மஞ்சளைப் போல மிகச் சிறந்த கிருமிநாசினி வேற இல்லை. மஞ்சள் பூசிக் குளிச்சா சருமப் பிரச்னைகள் வராது. சருமத்துல அதிகப்படியான ரோம வளர்ச்சி இருக்காது. உடம்புல இயற்கையான ஒரு வாசனை இருக்கும். ஆனாலும், நாகரிகம் என்ற பேர்ல இந்தக் காலத்துப் பெண்கள் மஞ்சளைத் தவிர்க்கிறாங்க.

குங்குமம் வைக்கிற பழக்கமும் மாறி, ஸ்டிக்கர் பொட்டு வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கடைகள்ல கிடைக்கிற மஞ்சளும் குங்குமமும் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்துது. அரிப்பைக் கொடுக்குது. காரணம், அதுல சேர்க்கப்படற கெமிக்கல். வீட்ல நாமே தயாரிக்கிற மஞ்சள், குங்குமத்துல கெமிக்கல் கலப்பில்லாம செய்ய முடியும். செயற்கையான வாசனை தேவையில்லை. சொந்த உபயோகத்துக்கு மட்டுமில்லாம, இந்த ரெண்டையும் தயாரிச்சு பிசினஸாகவும் பண்ணி லாபம் பார்க்கலாம்Ó என்கிறார் கஜலட்சுமி.

‘‘பூஜைக்கான மஞ்சள், உடலில் பூசிக் குளிக்கிற கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் 2 வகை களையும் பூஜைக்கான குங்குமத்தையும் தயாரிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. சிவப்பு, மெரூன், பச்சை என விருப்பமான கலர்ல குங்குமம் தயாரிக்கலாம். அலர்ஜியை ஏற்படுத்தாத தரமான கலர் பயன்படுத்தலாம்.

வாசனைக்கு ஜவ்வாது மட்டும் சேர்க்கிறதால அதுவும் சருமத்தைப் பாதிக்காது. மண் சட்டியில தயாரிக்கிறதால 6 மாசம் வரைக்கும் வாசனையோ, மணமோ குறையாம அப்படியே இருக்கும். வெளியில 1 கிலோ குங்குமத்தை 240 ரூபாய்க்கு கொடுக்கிறாங்க. அதையே நாம 200 ரூபாய்க்குக் கொடுக்கலாம். 50 சதவிகிதம் லாபம் பார்க்கலாம்’’ என்கிறவரிடம் 2 வகையான மஞ்சள் மற்றும் குங்குமம் தயாரிப்பை ஒரே நாள் பயிற்சியில் 300 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.

(80560 42112)

கடைகள்ல கிடைக்கிற மஞ்சளும் குங்குமமும் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்துது. அரிப்பைக் கொடுக்குது. காரணம், அதுல சேர்க்கப்படற கெமிக்கல்...

மிதக்கும் ரங்கோலி

பூமாதேவி

நவராத்திரியில் தொடங்கி, தீபாவளி, மார்கழி, தை என இனி வரிசையாக கோலங்களின் திருவிழாக்கள் காத்திருக்கின்றன. வீட்டின் வாசல்களையும் உள் பகுதிகளையும் விதம் விதமான கோலங்களால் அழகுப்படுத்திப் பார்க்க நினைக்கிறவர்களுக்கு மிதக்கும் ரங்கோலி கோலங்கள் நிச்சயம் பிடிக்கும்.‘‘மிதக்கும் ரங்கோலினு பேர். ஆனாலும், இதை கோலமாகவும் பயன்படுத்தலாம். வீட்டை அழகுப்படுத்தற சுவர் அலங்காரமாகவோ, பூஜை அலமாரியை அலங்கரிக்கிற ஸ்டிக்கராகவோ, ஃப்ரிட்ஜ்ல ஒட்டவோ, ஹேண்ட் பேக், பர்ஸ்ல அழகுக்காக ஒட்டவோ... இப்படிப் பல விதங்கள்லயும் பயன்படுத்தலாம்...’’ என்கிறார் கைவினைக் கலைஞர் பூமாதேவி.

‘‘நவராத்திரி நேரத்துல கொலுப்படிகளுக்கு முன்னாடி தினம் ஒரு கோலம் போட்டு அழகு பார்க்கிறது வழக்கம். அந்த வகையில இந்த வருஷம் ஃப்ளோட்டிங் ரங்கோலினு சொல்லப்படற இந்த மிதக்கும் ரங்கோலி கோலங்கள் பிரபலமாகப் போகுது. ஒரு தட்டுலயோ, கிண்ணத்துலயோ தண்ணீர் வச்சு, அதுக்கு மேல இந்த ரங்கோலி கோலங்களை மிதக்க விடலாம். நிறமற்ற அந்தத் தண்ணீருக்கு மேல, பளபளப்பான, அலங்காரமான கோலம் மிதக்கிறப்ப வீடே ஜொலிக்கும். கொலுவோட அழகு பலமடங்கு கூடும்...’’ மிதக்கும் ரங்கோலியின் சிறப்புகளை அடுக்கும் பூமா, 500 முதல் 1,000 ரூபாய் முதலீட்டில் இந்தக் கலையைக் கற்றுத் தொழில் தொடங்க நம்பிக்கை தருகிறார்.

‘‘பெல்ட் அல்லது ஃபோம் ஷீட், விதம் விதமான மணிகள், ஸ்டோன்ஸ், பசை, நூல்னு இதுக்கான தேவைகள் ரொம்பக் கம்மி. கோலம் போடத் தெரிஞ்சவங்கதான் இதைப் பண்ண முடியும்னு இல்லை. யார் வேணாலும் பண்ணலாம். வட்டம், சதுரம், செவ்வகம், திலகம், மாங்காய், ஓவல்னு விருப்பமான எந்த ஷேப்லயும் இந்தக் கோலத்தை டிசைன் பண்ண முடியும். கற்பனைக்குத்தான் இதுல பெரிய வேலையே. எந்தப் பொருளை வச்சு, எப்படி அழகாக்கப் போறோம்கிறது அவங்கவங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது.

ஒரு மணி நேரத்துல 15 முதல் 20 கோலங்களை டிசைன் பண்ணிட லாம். அளவையும் அலங்காரத்தையும் பொறுத்து 50 ரூபாய்லேருந்து 200 ரூபாய் வரைக்கும் விலை வச்சு விற்கலாம். நவராத்திரி சீசன்ல மொத்தமா ஆர்டர் கிடைக்கும். மத்த நாட்கள்ல இதை டபுள் சைட் ஸ்டிக்கர் ஒட்டி, சுவர்லயும் ஃப்ரிட்ஜ்லயும் ஹேண்ட்பேக்லயும் ஒட்டற வகையில மாத்தி விற்கலாம். குறைஞ்ச உழைப்பு மற்றும் மூலதனத்துல 50 சதவிகித லாபம் பார்க்க வைக்கிற பிசினஸ் இது’’ என்கிற பூமாதேவியிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 விதமான மிதக்கும் ரங்கோலி கோலங்களைக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 500 ரூபாய்.  (98410 19293.)

நவராத்திரி சீசன்ல மொத்தமா ஆர்டர் கிடைக்கும். மத்த நாட்கள்ல இதை டபுள் சைட் ஸ்டிக்கர் ஒட்டி, சுவர்லயும் ஃப்ரிட்ஜ்லயும் ஹேண்ட்பேக்லயும் ஒட்டற வகையில மாத்தி விற்கலாம்...

செயற்கைப் பூக்கள¢

மணிமேகலை

மணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் நிறமிருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படிப் பார்த்தாலும் பூக்கள் அழகுதானே... ஒரே ஒரு ஒற்றை ரோஜாவோ, மலர்ந்து சிரிக்கிற மல்லிகையோ எந்த வெற்றிடத்தையும் அழகாக்கி விடும். விதம் விதமான பூக்களால் வருடத்தின் எல்லா நாட்களும் வீட்டை அழகு சொட்ட வைத்திருக்க விரும்புவோருக்கு செயற்கைப் பூக்கள் சரியான சாய்ஸ். நிஜப் பூக்களை மிஞ்சும் அழகில் செயற்கைப் பூக்கள் தயாரிப்பதில் நிபுணி மணிமேகலை!

‘‘இயற்கையான பூக்களுக்கு சீசன் உண்டுங்கிறதால எல்லா நாளும் கிடைக்காது. செயற்கை பூக்கள் அப்படியில்லை. ஒருமுறை செய்து வச்சுக்கிட்டோம்னா வருஷம் முழுக்க மாத்தி மாத்தி அலங்கரிச்சு அழகு பார்க்கலாம். ரோஜா, தாமரை, கார்னேஷன், சூரியகாந்தி, மல்லி, டூலிப்ஸ்னு இயற்கையா கிடைக்கிற எல்லாப் பூக்களையுமே செயற்கையா பண்ண முடியும்’’ என்கிறார் மணிமேகலை. செயற்கைப் பூக்களை உருவாக்குகிற பிசினஸுக்கு வெறும் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானதாம்.

‘‘கிரேப் பேப்பர், ஆர்கண்டி, கிராஃப்ட் பேப்பர், டிஷ்யூ பேப்பர், ஸ்டாக்கிங், சாட்டின் துணி, கோல்டன் ஒயர், பிளாஸ்டிக் ரிப்பன், பேப்பர் கப், கேக் கப், ஃப்ளோரல் டேப், 10ம் நம்பர் நூல், கட்டிங் பிளேயர், செயற்கை இலைகள்...

இவைதான் தேவையான பொருட்கள். கைவினைக் கலைகளுக்கான பொருட்கள் விற்கற கடைகள்லயே எல்லாம் கிடைக்கும். சிலதை ஒற்றைப் பூக்களா பண்ணலாம். சிலதை கொத்துக் கொத்தா பண்ணினாதான் அழகு. இன்னும் சிலதை கூடையில செட் பண்ணலாம்.

பொக்கேவா ரெடி பண்ணலாம். பீங்கான் ஜாடியில செட் பண்ணலாம். பூக்களோட ஒரிஜினல் கலர்லயே கொண்டு வரலாம். நவராத்திரி, பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு வீட்டை அலங்காரம் பண்ண டேப் ஒட்டித் தொங்கவிடலாம். இதுலயே மகரந்தம் வைக்கிற இடத்துல சீரியல் லைட் செட் பண்ணி ஒளிர விட்டா, இன்னும் அழகா இருக்கும். இந்த செயற்கைப் பூக்கள் எத்தனை வருஷங்களானாலும் அப்படியே இருக்கும்.

 தூசி தட்டி உபயோகிக்கலாம். கண்ணாடி பேப்பரை சுத்தி வச்சா புது மெருகு அப்படியே இருக்கும். ஒரு நாளைக்கு 8 பூக்கூடைகள் ரெடி பண்ணலாம். ஒரு கூடைக்கு 10 முதல் 12 பூக்கள் கணக்கு. அலங்காரத்துக்கும் அன்பளிப்புக்கும் ஏத்த இந்த செயற்கைப் பூக்கள் தயாரிப்பு 50 சதவிகித லாபத்தைக் கொடுக்கும்’’ என்கிற மணிமேகலையிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 விதமான பூக்களைக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 500 ரூபாய். ( 98846 12156) செயற்கைப் பூக்கள் எத்தனை வருஷங்களானாலும் அப்படியே இருக்கும். தூசி தட்டி உபயோகிக்கலாம். கண்ணாடி பேப்பரை சுத்தி வச்சா புது மெருகு அப்படியே இருக்கும்...

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்