என் சமையலறையில்!



பொங்கல் ‘கமகம’...
*சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லப் பாகு வைக்க தண்ணீருக்கு பதிலாக இளநீர் ஊற்றிச் செய்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

*அவசரமாக பொங்கல் செய்ய வேண்டியிருக்கிறதா? தேவையான அளவு பாசிப் பருப்பை வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் சேர்த்தால் அட்டகாசமான சுவையுடன் கூடிய பொங்கல் தயார்!

* சர்க்கரைப் பொங்கல் செய்து இறக்கியதும், சிறிதளவு மில்க் மெய்டை ஊற்றினால் சுவை அள்ளும்!

* வெண் பொங்கலில் மிளகு, சீரகத்தை முழுதாகப் போடுவதற்கு பதிலாக வேறு முறையில் செய்யலாம். மிளகையும் வறுத்த முந்திரியையும் போட்டுவிட்டு, சீரகத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, அந்த விழுதைச் சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
 வத்சலா சதாசிவன், சென்னை-64.சுண்டல் ‘சுறுசுறு’...

* சுண்டலை பரிமாறுவதற்கு முன்பாக, அதன் மேல் சிறிது காராபூந்தியைத் தூவலாம். பார்க்க அழகாக இருக்கும். வண்ண வண்ண
காராபூந்தியை உபயோகித்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* கருப்புக் கொண்டைக்கடலை சுண்டலின் மேல் தேங்காய்த் துருவல் தூவினால் பார்க்க அழகு... சுவை தூக்கல்!

* பாசிப் பயறு சுண்டலின் மேல் துருவிய கேரட்டைப் போட்டு அலங்கரித்தால் சுவையோடு கூடிய சத்து! - ஹெச்.அஹமது தஸ்மிலா, கீழக்கரை. கொழுக்கட்டை ஜோர்...

* கொழுக்கட்டை மாவு அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால் சொப்பு செய்வது சிரமம். ஓரங்களில் விரிந்து போகும். அப்படிப்பட்ட நேரங்களில் மாவுடன் சிறிது மைதா மாவு கலந்து சொப்பு செய்தால் நன்றாகப் பிடிக்க வரும்.

* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் சரி பாதி பாலும் ஊற்றவும். அதிலேயே சிறிது ஏலக்காய் தூளையும் கலந்து மாவு கிளறவும். கொழுக்கட்டை வெளிமாவு சப்பென்றில்லாமல் சுவையாக, மணமாக இருக்கும்.

* வெல்லக் கொழுக்கட்டை பூரணம் செய்து இறக்கியவுடன் பொட்டுக்கடலை மாவைத் தூவி உருட்ட வேண்டும். ஆவியில் வேக வைக்கும் போது நீர்த்துப் போகாது... சுவை கூடும்.

* கொழுக்கட்டை மாவில் உப்பு, கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், சிறிது எலுமிச்சைச்சாறு விட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுத்தால் வித்தியாசமான கொழுக்கட்டை தயார்.

* வெல்லக் கொழுக்கட்டை செய்யும் போது, தண்ணீருக்குப் பதில் கருப்பட்டி பாலை ஊற்றி மாவைப் பிசைந்து செய்யலாம். அபார சுவையோடு இருக்கும்.
- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

*கொழுக்கட்டைக்கு பூரணம் கிளறும்போது பாகு அதிகமாகிவிட்டதா? பருப்பு பூரணமாக இருந்தால் கடலை மாவைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும். தேங்காய் பூரணமாக இருந்தால் அரிசி மாவைக் கலக்கவும். பூரணம் கெட்டியாகிவிடும். உதிராமல் உருட்ட வரும்.
ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

அடடே அப்பம்!

* வரகு, தினை, சாமை, கம்பு, சோள ரவை, சிவப்பரிசி குருணை எல்லாவற்றையும் ஒரு கைப்பிடி எடுத்து ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் இரண்டு வாழைப்பழங்களை சேர்த்து அரைக்கவும். அந்த மாவில் தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் சேர்த்து அப்பம் செய்தால் பிரமாதமான சுவையுடன் கூடிய ஆரோக்கிய அப்பம் தயார்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

* அப்பத்தில் வெல்லம் அதிகமாகிவிட்டதா? அப்ப மாவில் இருந்து ஒரு கரண்டி மாவைத் தனியாக எடுக்கவும். அதில் தண்ணீர் விட்டு, கூழ் போல காய்ச்சவும். காய்ச்சியதை அப்ப மாவில் சேர்க்கவும். இப்போது சரியான தித்திப்புச் சுவை கிடைக்கும். - ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை. பலே பாயசம்!

* சேமியா பாயசம் செய்யும் போது, சிறிது வறுத்த அவல் பொரியை சேர்க்கவும். பாயசம் கெட்டியாக இருக்கும். தனி ருசி, மணம் கிடைக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* பாயசம் தயாரிக்கும் போது, பாசிப் பருப்பும் அரிசியும் ஜவ்வரிசியும் நன்றாக வெந்த
பிறகுதான் சர்க்கரை சேர்க்க வேண்டும். - மல்லிகா அன்பழகன், சென்னை-78.