ஸ்டார் தோழி



அமுதவல்லி நாராயணன்

கணினிப் பொறியாளர் / இணைய எழுத்தாளர்

நான்: ஒரு மனுஷியாக, தாயாக, தோழியாக  என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருக்கிறேன். என் தாயை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். ஒரு தோழியாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்... பிறர் துன்பத்தில் உழலும் பொழுது இதுவும் கடந்து போகுமென தோள் கொடுக்கிறேன்.பள்ளியும் ஆசிரியர்களும்: 1-5 மெட்ரிகுலேஷன் பள்ளி, 6-10 மாநகராட்சி பள்ளி, 11, 12 கான்வென்ட் என்று பள்ளி படிப்பு. மாநகராட்சி பள்ளி படிப்பு மறக்க இயலாதது. கணிதத்துடனும் அறிவியலுடனும் வாழ்க்கையைப் போதித்த கங்கா மிஸ், லக்ஷ்மி மிஸ், தமிழை நேசிக்கக் கற்றுத் தந்த கல்யாணி மிஸ் மறக்க இயலாதவர்கள்.

இங்கிருந்து கான்வென்ட் போனால் எப்படி இருக்கும்? பட பட என ஆங்கிலம் பேசுபவர்களுக்கு நடுவில் தத்து பித்தென்று  ஆங்கிலம் பேசி,  தாழ்வு மனப்பான்மையுடன் குறுகிய பொழுது  அதை விரட்டிய  நாகலக்ஷ்மி மிஸ் போன்றவர்களால்தான் இன்று நல்லதொரு நிலைமையில் இருக்கிறேன். மனம் விட்டு பேசி தோழமையுடன் பழகிய ஆசிரியர்கள் கிடைத்த தால்தான் ஆர்வத்துடன் படிக்க முடிந்தது. தமிழ் மிஸ் காபி குடிப்பது நல்ல பழக்கம் அல்ல என்று சொன்னதால் காபி குடிப்பதையே விட்டுவிட்டேன்.

வசிக்கும் ஊர்: வாழ்வின் பரிமாணங்களை ரசிக்கும்,  சகிக்கும் பக்குவம் தந்திருக்கிறது சென்னை. 375ம் வருடம் கொண்டாடும் சென்னை பல்வேறு பரிணாமங்களைத் தன்னுள் கொண்டது. தொன்மை மிக்க கோயில்களாகட்டும், ஹைஃபை ஹோட்டல் ஆகட்டும், சென்னை எல்லா விதத்திலும் தனித்தன்மை வாய்ந்தது. மீட்டரே போடாத ஆட்டோ டிரைவர் இருக்கும் இதே சென்னையில்தான்  ‘உனக்கு எது சந்தோஷமோ அதைக் கொடு’ என்று கூறும் ஆட்டோ டிரைவரையும் பார்க்கிறேன்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கேற்ப எத்தனை விதமான மனிதர்கள், தொழில்கள், சமூக ஆர்வலர்கள்... அக்கம் பக்கம் முகம் பார்க்க மாட்டார்கள் என்று கூறும் சென்னையில் அக்கம் பக்கத்தினரின் உதவியை நிறையவே பெற்றிருக்கிறேன்.

சிக்னலில் ஆம்புலன்ஸ் தவிப்பதும், நிமிடங்களில் மைல்களைக் கடந்து உயிர்காக்கப்படுவதும் இங்குதான். டர்டில் வாக், ட்ரீ வாக் என்று இயற்கையின் விந்தைகளை இங்குதான் அறிந்தேன். பரபரப்பும்  பன்முகமும் கொண்ட ஊர்.புத்தகங்கள்: புத்தகங்கள் என்றால் உயிர். இதில் பிடித்தது என்று எதைச் சொல்ல? மனதில் பதிந்தவை ‘தி ரூட்ஸ்’ ஆங்கில நாவல், அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, பாலகுமாரனின் ‘உடையார்’, ராஜம் கிருஷ்ணனின் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்.’

குடும்பம்: அன்பும் பொறுமையும் உடைய கணவர், கல்லாலும் மண்ணாலும் கட்டிய வீட்டை அன்பால் கலகலப்பாக்கி உயிர்ப்போடு வைத்திருக்கும் இரு தேவதைகள்.சமூக அக்கறை: நாள்தோறும் பெருகி வரும் வன்முறை, பெண்கள் மீதான கொடுமைகள், குழந்தைகள் மீதான வரம்பு மீறல்கள்... பார்க்கும் பொழுது மனம் பதைக்கிறது. என்ன செய்ய முடியும் என்ற கேள்வி மனதைத் துளைக்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று எண்ணுகிறேன். அது போக சொல்ல எண்ணும் மற்றொரு விஷயம்
‘சமூகத்துக்கு திருப்பி தருதல்’.

நம்மால் இயலும் அளவு ஏதேனும் உதவிகளை  நாமாகவோ அல்லது சமூக ஆர்வலர்கள் வழியாகவோ செய்வது நிச்சயம் யாருக்கோ உதவும்தானே? என் தோழி சொல்வார், ‘எல்லோரும் அவரவரால் இயன்ற அளவு உதவத்தான் செய்கிறார்கள்’ என்று. அதற்கு அவர் கூறிய உதாரணம், பூக்காரம்மா ஒருவர் சிறுமிக்கு பிய்த்துக் கொடுத்த பூ. மனிதர்கள்: ஒரே உடம்பில் இருக்கும் கை/கால் விரல்கள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. மனிதர்களிடமும் இதுபோல பல குணங்களைக் காணலாம்.

எல்லோரும் ஏதோ ஒரு பாதையைக் கடந்து வந்திருப்பார்கள், முட்களும் வேதனையும் அவரவர்க்கு தெரியும். புன்னகை இல்லை என்பதால் மனிதமற்றுப் போவதில்லை. முகம் கண்டு மதிப்பிடக்கூடாது. ஒத்துப் போனால் பழகி மகிழ லாம். இல்லையென்றாலும் தவறில்லை, புன்னகையுடன் விடை பெற்று  தன் வழி செல்லலாம்.


பிறந்த ஊர் / சொந்தங்கள் / கற்றுக் கொண்டவை:  சிவகாசி சொந்த ஊர். தண்ணீர் சிக்கனத்தை இங்குதான் கற்றுக்கொண்டேன். காலையிலும் மாலையிலும் குழாயில் தண்ணீர் அடித்து, எங்கோ சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து என்று எல்லா அனுபவமும் உண்டு. சுறுசுறுப்பான வேலையாகட்டும், கோலாகலமான  திருவிழா ஆகட்டும் எல்லாமே இங்கு கொண்டாட்டம்தான். என் சிறு வயதில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கட்டு (தீப்பெட்டி) ஒட்டியே தங்கள் குடும்பத்தைக் கரை ஏற்றியுள்ளனர்.

ஊருக்கு செல்லும் நாட்கள் வெகு குறைவே. என்றாலும் எங்கே பார்த்தாலும் அழைத்து நலம் விசாரிக் கும் சொந்தங்கள் கண்டு மனம் பூரித்து விடும். ஊருக்கு சென்று வந்தாலே புத்துணர்வு வருவது இந்த சொந்தங் களால்தான்.  சோதனைகள் வந்தாலும் விடாமல் போராடும் குணத்தை இங்கு நிறைய பேரிடம் காண்கிறேன். சமையல்: அம்மா சமைக்கும் பொழுது, ‘இன்னிக்கு திங்களா..? பருப்பு ரசம்’ என்று கிண்டல் அடிப்போம். இப்பொழுது என் குழந்தைகள் அதை செய்கிறார்கள். தினப்படி சமையல் சத்தாகவும்  குழந்தைகளுக்குப் பிடித்ததாகவும் இருப்பதும் ஒரு சவால்தான். இன்று இணைய உதவியால் குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் எதையும் சமைக்க முடிகிறது.

சமையல் சத்தானதா இல்லையா என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.கடந்து வந்த பாதை: முட்கள் நிறைந்த பாதையும் அல்ல, பூக்கள் தூவிய பாதையும் அல்ல.  உண்மையில் நட்பு மற்றும் உறவுகளின் அன்பால் தான் அந்த பாதையைக் கடக்க முடிந்தது. இன்றும் நடக்க முடிகிறது. எங்கோ மாநகராட்சி பள்ளியில் படித்த நான் இன்று கணினி துறையில் சிறந்து இருக்க முடிவதற்கு முழுக் காரணம் கல்வி போதித்த ஆசிரியர்களும், அரவணைத்து சென்ற பெற்றோருமே. நான் சந்திக்கும் பலரும் இது போன்று எளிய நிலையில் இருந்து உயர்ந்தவர்களே!

 பிடித்த பெண்கள்: அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தந்த அம்மா. சுறுசுறுப்பை அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன். அத்தையின் பொறுமை பிடிக்கும். போராட்டமே வாழ்வாக இருந்தாலும் தளராது உழைப்பதோடு அன்பால் அரவணைக்கும்  வசந்தா அண்ணியைப் பிடிக்கும். வேலைக்கு செல்லும் காலத்தில் ஹாஸ்டலில் பெரும்பான்மையாகப் பார்த்தது 30-50 வயது வரை உள்ள தனித்து போராடிய பெண்கள். அவர்கள்  இன்றும் மனதில் இருக்கின்றனர். வீட்டில் வேலை செய்யும் செல்வி அக்கா படிப்பறிவு அற்றவர்... 2 பையன்கள், ஒரு பெண்...  பொறியியல் படிக்க வைத்துள்ளார். 

பதின்ம வயதிலேயே திருமணம் செய்யும் பெற்றோர் பற்றி நாம் காணும் செய்திகள் பல. ஆனால், இவர் தன் பெண்ணிடம் ‘நீ எவ்ளோ வேணா படி, உடம்புல தெம்பு இருக்கிறவரை நான் படிக்க வைக்கிறேன்’ என்று மேற்படிப்பு படிக்க வைத்தவர். சுட்டால்தான் பொன் சிவக்கும் என்பது போல், சோதனைகளின் பொழுதுதான் பெண்களின் உறுதி வெளிப்படுகிறது.
சிக்னலில் ஆம்புலன்ஸ் தவிப்பதும் நிமிடங்களில் மைல்களைக் கடந்து உயிர்காக்கப்படுவதும் இங்குதான்.

விரிவாக இணையத்தில் படிக்க...
kungumamthozhi.wordpress.com