தற்கொலை?



‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எனக் கூறப்பட்டாலும், இந்த வாழ்வு நாம் எதிர்பார்ப்பது போல எப்போதும் இனிமையாக இருப்பதில்லை. வாழ்க்கையை இனிமையாக வகுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்திக் கொள்வது தனிமனிதனின் கையில்தான் உள்ளது. அது ஒருவகை சாமர்த்தியம் என்று கூடச் சொல்லலாம்.  ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் சந்திக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்தாலே போதும்... வாழ்வதற்கான வழி பிறக்கும்.


தான் நடந்து செல்லக்கூடிய வாழ்க்கைப் பாதை ரோஜா இதழ்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அது முட்களும் கற்களும் நிறைந்ததாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அந்த முட்பாதையை பயணம் செய்யக் கூடிய பாதையாக மாற்ற ஒவ்வொரு மனிதனும் எடுக்கும் முயற்சியே, வாழ்வில் வெற்றியின் எல்லைக்கோட்டை தொட எடுத்து வைக்கும் முதல் அடி.

ஆதாம் ஏவாள் காலம் முதல் இன்று வரை ஜனனமும் மரணமும் மாறாதது. இந்தப் பூவுலகின் மூச்சுக் காற்று பட்டவுடன் ஜனிக்கும் குழந்தையின் முதல் குரல் அழுகை. அது நம்மில் பலருக்கு ஆனந்தத்தைத் தான் தருகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் பல்வேறு இன்னல்களையும் இடர்பாடுகளையும் சந்திக்கும் வாழ்க்கையை வாழ்ந்தாலும் ஒரு புதுவரவு, புது உயிர் இந்தப் பூவுலகுக்கு வருவதை இன்முகத்துடனே வரவேற்கிறான்.

‘உயிர் ஜனிக்கும் தருணத்திலேயே, என்றோ ஒரு நாள் மரணமும் நிச்சயம்’ என்ற எண்ணம் நம் மனதில் அந்தக் கணத்தில் தோன்றுவதில்லை. வாழ்க்கை என்பது எந்த நிலையிலும் வாழ்ந்து பார்ப்பதற்கே. பலர் அந்த எண்ணத்திலேயே அவரவர் வாழ்வின் பாதையை வெற்றிப் பாதையாக மாற்றி பயணம் செய்கிறார்கள்.

நம்மைச் சுற்றி நடைபெறும் தற்கொலைகளைப் பற்றி ஊடகங்கள் வாயிலாகவோ, ஏதேனும் ஒரு வகையிலோ கேள்விப்படும்போது நம் மனம் கனக்கத்தான் செய்கிறது. அவ்வாறு தன் உயிரை சுயமாக மாய்த்துக் கொள்பவர்களில் பலர் இளைய தலைமுறையை சேர்ந்தவர்களாக இருப்பது மனதை தைக்கிறது. இன்றும் வயது முதிர்ந்தவர்களிடம் காணப்படும் துடிப்பு, நம்பிக்கை, மனபலத்தை ஏனோ நம் இளைய தலைமுறை பெறத் தவறிவிட்டது.   

இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இளைஞர்களிடம் - அதுவும் படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் - இந்த வாழ்வின் மீது நம்பிக்கை அற்றுப்போய், உப்பு சப்பில்லாத விஷயங்களுக்காக தங்கள் வாழ்வை தாங்களே போக்கிக்கொள்ள கூடிய உந்துதல் தலை தூக்கி நிற்பதை உணர முடிகிறது. 

‘நேஷனல் க்ரைம் ரிகார்டு பீரே’ நடத்திய ஆய்வு, 15 முதல் 29 வயது வரை இருப்பவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளில், பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. சில மாநிலங்களில் ஆண்களும் பெண்களும் சம விகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.

30 வயதுக்கு மேல் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவில்லாத பாமரனைக் காட்டிலும் படித்தவனிடம்தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் அதிக அளவில் உள்ளதாகவும் அறியப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில்  அதிக அளவில் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

திருமணமாகி குடும்பத்துடன் வாழும் பெண்களை விட தனிமையாக விடப்பட்டிருக்கும் பெண்கள் - அதாவது, விவாகரத்து பெற்ற நிலையில், துணையின் மரணம் சம்பவிக்கும் நிலையில், துணைவனால் கைவிடப்பட்ட நிலையில், காதலித்தவன் ஏமாற்றிய நிலையில் என்று தனித்திருக்கும் பெண்கள் - தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு உந்தப்படுகிறார்கள். திருமணமான பெண்களில், வரதட்சணை கொடுமையாலோ, குடும்ப வன்முறையாலோ பாதிக்கப்படும் போது இவ்வாறான முடிவினை நோக்கிச் செல்கிறார்கள்.

தன் உயிரை துச்சமென மதித்து அதனை போக்கிக் கொள்ளும் எண்ணத்தினை மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை ஏற்படுத்துகின்றன. சில வேளைகளில் தீராத உடல் உபாதை கூட காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் பணத்தேவை, சமுதாய சலசலப்புக்குப் பயந்து செய்யப்படும் தற்கொலைகள் என்று பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். காரணம் எதுவாக இருந்தாலும், தற்கொலை முயற்சி என்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல...

சட்டப்படி தண்டிக்கத் தக்கது மாகும். சமுதாயத்தின் பார்வையிலும், சட்டத்தின் பார்வையிலும் ஏற்புடையதாக இல்லாத ஒரு செயலாக இருந்தும், தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 309ன் படி, தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமே. அதற்கு ஓராண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை உண்டு. எனினும், Gian Kaur Vs State of Punjab வழக்கில், ‘தற்கொலை முயற்சிக்கு
தண்டனை என்பது கட்டாயமல்ல...

அது நீதிமன்றத்தின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது’ என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.  Nagbhsan Batnaik Vs Union of India வழக்கில், ‘இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309 நம் அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறியிருந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நம் அரசியல் அமைப்பு சாசனம் ஷரத்து 21, தனிமனித உயிர் மற்றும் சுதந்திரத்தை காப்பது பற்றி வலியுறுத்துகிறது. அதனால் ஒரு தனி நபருக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை சட்டப்படி எங்கும் வழங்கப்படவில்லை. 

பெரும்பாலான தற்கொலைக்கு தூண்டுதலே காரணமாகிறது. அவ்வாறு ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டுதலாக இருப்பவருக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306ன் படி தண்டனை கொடுக்கப்படும். தற்கொலை முயற்சி செய்பவரைக் காட்டிலும், தற்கொலைக்குத் தூண்டுபவர்களே பிரதான குற்றவாளிகள். அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்க சட்டம் வழி செய்துள்ளது.

அன்பு நெஞ்சங்களே... அழகான வாழ்வு யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை. அது ஒருவரின் பண்பாலும் அன்பாலும் இயல்பாலும் தியாகத்தாலும் தன்னம்பிக்கையாலும் முயற்சியாலும் பெறப்படுவதே! ஓட்டப்பந்தய வீரன் தன் இலக்கை அடைய எவ்வாறு மனதில் உறுதியுடன் எல்லைக் கோட்டை நோக்கி ஓடுகிறானோ, அதுபோல மனிதன் அவன் வாழ்வில் நிர்ணயிக்கும் வெற்றி என்ற எல்லைக் கோட்டை அடைய மன உறுதியுடன் இடைவிடாமல் போராட வேண்டும்.

இதை புகழ் பெற்ற பேச்சாளரும் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் மொழியில் கூறவேண்டுமென்றால், Never give up, Never Never give up! புகழ்பெற்ற சுய முன்னேற்ற குரு Jim Rohn-ன் எறும்பின் தத்துவத்தை (Ant philosophy) பின்பற்றினாலே நேர்மறையான எண்ணங்கள் மறைந்து போகும்.

எறும்பு சாரை சாரையாக ஊர்ந்து செல்லும்போது, எவ்வளவு முறை நாம் விளையாட்டாக கைவிரல் வைத்து தடுத்திருப்போம். அப்போது எல்லாம் அந்த எறும்புகள் மனம் தளராமல் அந்தத் தடையைத் தவிர்த்து வேறு பாதை தேடி பயணம் செய்வதைக் கண்டிருக்கிறோம். அதுபோலவே ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் தடைகளை தாண்ட கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். சுறுசுறுப்புக்கு மறுபெயராக விளங்கும் எறும்பு சற்றும் மனம் தளராமல் கோடை காலம் முழுவதும் மழைக் காலத்துக்கான உணவை சேமிக்கிறது.

மழைக்காலத்தில் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக்கொண்டு பொறுமையாக கோடைகாலத்துக்காக காத்திருக்கிறது. தன் பணியை பலன் ஏதும் எதிர்பார்க்காமல், மற்ற எறும்புடன் தன்னை ஒப்பிடாமல் கருமமே கண்ணாக தன் வாழ்வின் எல்லைக் கோட்டை தொடும் எறும்புகளை பின்பற்றி வாழ மனிதன் பழக வேண்டும்.  எறும்பைப் போல வாழ்ந்தால் வாழ்வு கண்டிப்பாக கரும்பென இனிக்கும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

 வாழ்க்கை வாழ்வதற்கே! தற்கொலை முயற்சி செய்பவரைக் காட்டிலும், தற்கொலைக்குத் தூண்டுபவர்களே பிரதான குற்றவாளிகள். அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்க சட்டம் வழி செய்துள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும், தற்கொலை முயற்சி என்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல... சட்டப்படி தண்டிக்கத்தக்கதுமாகும்.

வழக்கறிஞரும் குடும்பநல  ஆலோசகருமான
ஆதிலட்சுமி லோகமூர்த்தி

எழுத்து வடிவம்: சாஹா