சதுரங்க விளையாட்டுச் சிந்தனை



சதுரங்க விளையாட்டு (செஸ்) விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கும். ராஜா - ராணி விளையாட்டில் ராணிக்குத்தான் பவர் அதிகம். ராஜா ஒரு கட்டம் நகர்வார். மறுபடி பின்னுக்கு வருவார். ராஜாவைக் காப்பாற்ற வேண்டியது ராணியே. விளையாட்டுக்கு மட்டுமே பொருந்துகிற விதி அல்ல இது. வாழ்க்கையிலும் அப்படித்தான். ராஜாவின் பார்வை தடம் புரளாமலும் தள்ளாடாமலும் காப்பாற்ற வேண்டியது ராணியே. ராஜாவை இழக்காமல், ராஜ்யத்தை மேம்படுத்தி, என்றும் ராணியாக கிரீடம் சுமக்கும் அந்த லாவகம் ராணிக்களான மனைவியரின் கைகளில்தான் உள்ளது.

விளையாட்டோ, வாழ்க்கையோ... சதுரங்க வேட்டையில் ஜெயிக்க மிகுந்த சாதுர்யமும் மிக அதிகமான பொறுமையும் அவசியம்.சுமித்ராவும் பவித்ராவும் அக்கா - தங்கை. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், 34 வயதில் சுமித்ராவின் கணவர் ஹார்ட் அட்டாக்கில் தவறிப் போக, 10 வயதுப் பெண் குழந்தையுடன் ஆதரவின்றி நின்றார். அக்காவின் நிலைமை சகிக்காமல், அவளையும் அவளது குழந்தையையும் தன்னுடனேயே தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார் பவித்ரா. தனிமையில் விட்டால் அக்காவின் மனநிலை பாதிக்கப்படலாம், தவறான முடிவெடுக்கலாம் என பயந்த தங்கைக்கு, அந்த உதவியே எதிரானது. கணவனை இழந்தவராயிற்றே என அவர் மீது அனைவரின் கரிசனமும் அதிகமானது.

குறிப்பாக பவித்ரா கணவருக்கு அது கொஞ்சம் கூடுதலானது. மனைவியின் அக்கா என்பதை மறந்து, ஆண் துணை இல்லாத பெண் என்கிற நினைப்பில் அவருக்கு கேட்காமலேயே உதவிகள் செய்ய ஆரம்பித்தார். சுமித்ராவுக்கும் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஒரு உறவு தேவைப்படவே, தங்கையின் கணவருடன் நெருக்கமானார். இது மெல்ல மெல்ல தங்கைக்குத் தெரிய வரவே, வீட்டில் பூகம்பம். பிரச்னை பெரிதாக வெடிப்பதற்கு முன், தனிக்குடித்தனம் சென்றார் அக்கா. அத்துடனும் முடியவில்லை பிரச்னை. மனைவியின் அக்கா வீட்டுக்கு அடிக்கடி செல்வதும், உதவிகள் செய்வதுமாக உறவைத் தொடர்ந்தார் தங்கையின் கணவர்.

‘‘அக்காவுக்கு நல்லது பண்ணணும்னுதானே அவளையும் குழந்தையையும் கூப்பிட்டு என்கூட வச்சுக்கிட்டேன்? நான் பண்ணினது தப்பா மேடம்? உதவி பண்ண நினைச்சதுக்கு அக்காவும் என் கணவரும் எனக்குக் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகமா? என் அக்காவை நானா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லலை. நிலைமை புரிஞ்சு அவளாதான் போனா. ஆனாலும், ஒருவேளை அவ என்னைத் தப்பா நினைச்சிருப்பாளோனு கஷ்டமா இருக்கு. ஒருவேளை நான் இந்தப் பிரச்னையைப் பெரிசுப்படுத்தாம விட்டிருக்கலாமோ...

எங்கம்மா-அப்பாகிட்ட சொன்னப்ப, ‘அவளே புருஷனைப் பறிகொடுத்துட்டு பாவமா நிக்கறா... இப்ப போய் இப்படியொரு பிரச்னையைக் கிளப்பி, பெரிசுப்படுத்தாதே... நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்கிறாங்க. வயசான காலத்துல அவங்களாலயும் இந்த விஷயத்துல பஞ்சாயத்து பண்ண முடியாது. நான் என்னதான் பண்றது மேடம்?’’ - ஆத்திரமும் ஆற்றாமையுமாக அழுது தீர்த்தார் பவித்ரா.

ஒரு ஆழ் கிணறு... அல்லது ஆறு... அதில் ஒருவர் தவறி விழுந்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம். இன்னொருவர் அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். ஆபத்தில் சிக்கியவருக்கு உதவத் துடிக்கிற மனது நல்லதுதான். ஆனாலும், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நமக்கு நீச்சல் தெரியுமா? உயிருக்குப் போராடும் அந்த நபர், உயிர் பிழைக்க வேண்டிய துடிப்பில் நம்மை நீந்த விடாமல் தண்ணீருக்குள் அமுக்கி விட்டால் என்ன செய்வது? நம்முடன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? அவர்களது நிலை என்ன? இப்படிப் பல விஷயங்களை யோசித்த பிறகே தண்ணீரில் குதிக்க வேண்டும்.

சுமித்ராவின் நிலை தண்ணீரில் விழுந்தவரைப் போன்று இருந்திருக்கிறது.  இயற்கை  மிகப் பெரிய துரோகம் செய்து விட்டதாக நம்புகிறார். வாழ வேண்டிய வயதில் தன் கணவர் தன்னை விட்டுப் போய் விட்டார். தன் குழந்தைக்கு அப்பா இல்லை. இனி தன்னையும் தன் குழந்தையையும் ஆதரவு கொடுத்துக்  காப்பாற்ற யார் இருக்கிறார்கள் என்கிற கலக்கத்தில் இருந்த வருக்கு,  தங்கையின் கணவர் நீட்டிய ஆதரவுக் கரங்கள் இதமாக இருந்திருக்கின்றன.

 தனக்கு ஒரு நல்லது செய்கிறவருக்கு இணங்கிப் போனால்தான் என்ன என விருப்பத்துக்கு வளைந்து கொடுத்திருக்கிறார்.இதில் தங்கையின் கணவரின் மனநிலையோ வேறு மாதிரி. மனைவியின் அக்கா தன் தயவில் வாழப் போகிற நிர்ப்பந்தம் அவரை அப்படி யோசிக்க வைத்திருக்கலாம். ‘அந்தப் பெண்ணுக்கு நான்தான் உதவப் போகிறேன். நான் ரொம்ப நல்லவன்’ என்கிற எண்ணம். அதன் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிற நான் கொஞ்சம் உரிமையையும் எடுத்துக் கொள்ளலாம் என எண்ணப் பிறழ்வுக்கு விதை போட்டு எல்லை மீறியிருக்கிறார்.
தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றத் துடிக்கிறவரின் மனநிலை பவித்ராவுக்கு.

ஆங்கிலத்தில் ‘எம்பதி’ என்றொரு வார்த்தை சொல்வார்கள். அதாவது, மற்றவரின் நிலையில் நம்மைப் பொருத்திப்  பார்ப்பது. அளவுக்கதிக எம்பதி அப்படி நினைப்பவருக்கே எதிராகத் திரும்பும்.அக்காவின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து, அதன் காரணமாக அளவுக்கதிகமாக பரிதாபப்பட்டிருக்கிறார் தங்கை. அதுதான் தவறு.தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்ற குதிப்பதற்கு முன் ஒருவர் யோசிக்க வேண்டிய தகுதிகளைப் போல, இந்த விஷயத்திலும் தங்கை தன் தகுதிகளை ஆராய்ந்திருக்க வேண்டும்.

அக்காவின் துக்கம் மறையும் வரை, தற்காலிகமாக தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கலாம். அது தற்காலிகமானது மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே அக்காவுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். எம்பதி அதிகமானதன் விளைவாகவே, தன் இருப்பிடம், தன் பொருளாதாரம், தன் உணவு என எல்லாவற்றையும் அக்காவுடன் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறார். அதுவே கணவரும் அந்தப் பட்டியலில் சேர்ந்த போது பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்திருக்கிறார்.

அதிக ஞானத்துடனும் விவேகத்துடனும் அதே நேரம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டும் சூழ்நிலையைக் கையாள வேண்டிய அவசியத்தை பவித்ராவுக்கு உணர்த்தினேன். அக்கா பரிதாபத்துக்குரியவர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, அளவுக்கதிக அன்பும் ஈடுபாடும் கூட ஆபத்தானவையே. ‘‘உங்கள் அக்கா தனிக்குடித்தனம் போனதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதில் குற்ற உணர்வும் வேண்டாம். அதே நேரம் கணவரை அங்கே செல்ல அனுமதிக்காமல், நீங்கள் அடிக்கடி சென்று அக்காவுக்கு உதவியாக இருங்கள். கணவரிடம் முன்னைவிட அதிக அன்புடனும் நெருக்கத்துடனும் இருங்கள்.

அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை அவரிடமே வெளிப்படையாகச் சொல்லுங்கள். ‘சோஷியல் டிஸ்டன்ஸ்’ எனப்படுகிற சமூக இடைவெளியைத் தக்க வைப்பதில் கவனமாக இருங்கள். வாழ்க்கை என்கிற சதுரங்க விளையாட்டில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது ராணியாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது’’ என அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.

பயிற்சி

‘நன்மை செய்ய உனக்குத் திடம் இருக்கும் போது, அதை செய்யத் தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே’ என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு.அதற்கு முன் நன்மை செய்யத் தகுதி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். யாருக்கு உதவ நினைக்கிறோமோ அவரே நாளை நமக்கு எதிரியாவாரா? அந்த உதவியை எத்தனை நாள் செய்வது? எப்போது நிறுத்திக் கொள்வது என எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும்.

சமுதாயத்தில் ஒரு அநீதியை சந்தித்தவருக்கு உதவி செய்ய நினைப்பது மனித குணம். ஆனால், அந்த உதவி செய்யத் தக்கவருக்குத்தான் சென்றடைகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். மனத் தகுதி, உடல் தகுதி, பணத் தகுதி என எல்லாம் இருக்கிறதா எனப் பார்த்த பிறகே உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும். தீயணைப்பு வீரர், தீப்பிடித்த இடத்துக்குச் சென்று காப்பாற்றும் வேலைகளில் இறங்கும் முன், அதற்கான ஆயுதங்கள், உடைகள், தற்காப்பு நடவடிக்கைகள் என எல்லாவற்றுடன்தான் செல்வார். அடுத்தவருக்குச் செய்கிற உதவிகளும் கூட இப்படித்தான்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, அளவுக்கதிக அன்பும் ஈடுபாடும் கூட ஆபத்தானவையே.

டாக்டர் சுபா சார்லஸ்

(சிந்திப்போம்...)
எழுத்து வடிவம்: சாஹா