ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆளி!
இயற்கை 360°
எடை குறைய வேண்டுமா..? தொப்பை மறைய வேண்டுமா..? முடி வளர வேண்டுமா..? முகம் பொலிவுற வேண்டுமா..? வாழ்க்கை முறை நோய்கள் கட்டுப்படவும் வேண்டுமா..? இப்படி, பற்பல ‘வேண்டுமா?’ அனைத்திற்கும், ‘உள்ளேன் அய்யா..!’ என ஆஜராகும் ஆரோக்கியத்தின் இருப்பிடமான ஆளி விதையுடன் (Flax seeds) இன்றைய இயற்கைப் பயணத்தை ஆரம்பிப்போம்..!
 உலகின் மிகப் பழமையான தாவரங்களில் ஒன்றான Flax seed அல்லது Linseed என்ற ஆளியின் தாவரப்பெயர் Linum usitatissimum. தோன்றிய இடம் ஜியார்ஜியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி. ஆளி, அல்சி, அகஸி, அவிசி கிஞ்சலு, டிஷி என பல்வேறு மாநில மொழிகளில் அழைக்கப்பட்டாலும், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் என்பதே அனைவருக்கும் பரிச்சயமான பெயர்.
உலகின் மிகச்சிறந்த தாவரங்களுள் ஒன்றான ஆளிச்செடி, நீல வண்ணப்பூக்களுடன் அலங்காரச் செடியாகவும், அதன் தண்டு, நார் மற்றும் விதைகள் பிற பயன்பாடுகளுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரப்பெயரில் உள்ள Linum என்பது லத்தீனில் ‘உடுத்தும் துணி’ என்றும், ‘usitatissimum’ என்பது ‘மிகவும் பயனுள்ள’ எனவும் பொருள்படுகிறது.
பெயருக்கேற்ப நூலிழை மற்றும் காகிதம் தயாரிக்க ஆளிச்செடி பயன்படுகிறது என்றால், ஆளி விதைகள், உணவுப்பொருளாகவும், தீவன உணவாகவும், இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும், வார்னிஷ், பெயின்ட் ஆகிய தயாரிப்புகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
எந்தவொரு சுவையும் இல்லாத ஆளி விதையில் பல்வேறு ஆரோக்கியம் அடங்கியுள்ளது எனும் உணவு ஊட்ட வல்லுநர்கள், ஆளி விதையின் ஒவ்வொரு நூறு கிராமிலும், அதிகளவிலான நார்ச்சத்து (40.8g), அதிக புரதச்சத்து (20.3g), அதிக கொழுப்புச்சத்து (37.1g) மற்றும் மாவுச்சத்து (28.9g), கலோரிகள் (530 cal) உள்ளது என்கின்றனர். இதில் உள்ள கொழுப்பு மற்றும் புரதங்களில் உடலுக்குத் தேவைப்படும் கொழுப்பு அமிலங்களும், அமினோ அமிலங்களும் அதிகம் உள்ளது என்பதே இதன் கூடுதல் சிறப்பு.
இத்துடன் கால்சியம், ஃபாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்ட கனிமச் சத்துகளும், கரோட்டீன், தையமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பயோடின், ஃபோலிக் அமிலம், கால்சிஃபெரால், டோக்கோஃபிரால் உள்ளிட்ட வைட்டமின்களும் தேவையான அளவில் உள்ளன.
தாவர உணவுப் பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (54%), ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் (18%) மற்றும் ஒமேகா 6 (6%) என நிறைவுறா கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்ட அரிய தானியம் என்பதாலேயே, மாமிசம் தவிர்ப்பவர்களுக்கு உன்னதமான உணவாய் திகழ்கிறது.
தவிர, லிக்னன் (Lignan) என்ற முக்கியமான ஃபீனாலிக் தாவரச்சத்து அதிகளவிலும், ஃபெரூலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம், ஃப்ளாவான்- C, ஃப்ளாவான்- O, சின்னமிக் அமிலம் என பல்வேறு தாவரச் சத்துகள் குறைந்த அளவிலும் காணப்படுகிறது. இவைகள் அழற்சி எதிர்ப்புப் பண்பு மிக்கவை என்றாலும், ஆளி விதையில் 800 மடங்கு உள்ள லிக்னன் ‘Phytoestrogen’, அதாவது, பெண்மைக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஊக்குவிக்கும் குணத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சத்துகள் இதில் நிறைந்து இருப்பதாலேயே, ஆளி விதையை ‘முழுமையான உணவு’ என்றும், ‘சூப்பர் ஃபுட்’ என்றும், ‘மந்திர விதைகள்’ என்றும் ஊட்டவியல் நிபுணர்கள் கொண்டாடுகின்றனர்.
பொன் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மொறுமொறுப்புடனும் மண்மணத்துடனும் இருக்கும் ஆளி விதைகளில் லிக்னன் உள்ளிட்ட மேற்சொன்ன தாவரச்சத்துகள் அனைத்தும் இருந்தாலும், எண்ணெய் சுவையுடன் உள்ள மஞ்சள் நிற விதைகளில் லினோலிக் அமிலம் (ALA) எனும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இன்னும் அதிகம் காணப்படுகிறது. எந்த நிறம் என்றாலும், ஆளி விதைகளின் அதிக Omega-3 fatty acid, complex carbohydrates மற்றும் low glycemic index, இதயத்தைப் பாதுகாப்பதுடன், மூளையின் திறனை அதிகரிக்கிறது. அப்படியே கொழுப்பையும் கரைக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன், பக்கவாதம், தைராய்டு நோய், மூட்டு வலி, எலும்புப்புரை, தோல் நோய்கள், கல்லீரல் நோய் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களுக்கும் ஆளி விதை அருமருந்தாகிறது.
ஆளியில் உள்ள அதிக நார்ச்சத்து உடல் பருமனைக் குறைக்க உதவுவதோடு, செரிமானத்தையும் கூட்டி, பெருங்குடல் அழற்சி நோய்கள், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், மூலநோயைத் தவிர்க்க உதவுகிறது. சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன. உயிரணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டி தாய்ப்பால் சுரப்பதையும் அதிகரிக்கின்றன. தோலின் சுருக்கங்களைக் குறைத்து, வயோதிகத்தை திருப்ப உதவுவதுடன், தழும்புகள் மறையவும், முடி வளரவும் பெருமளவு உதவுகின்றன.ஆளி விதையில் உள்ள அதிக லிக்னன் (Lignan), தனது Phyto estrogenic தன்மையால் பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்க உதவுகிறது.
பிசிஓடி நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன், மாத சுழற்சியின் போது ஏற்படும், பி.எம்.எஸ். (Premenstrual syndrome) அழுத்தத்தையும் குறைக்க ஒருபக்கம் உதவுகிறது என்றால், மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளான ஹாட் ஃப்ளஷஸ், சிறுநீர் உபாதைகளைக் குறைக்க மறுபக்கம் உதவுகிறது.
மேலும், ஹார்மோன்கள் தொடர்புடைய புற்றுநோய்களான கர்ப்பப்பை, மார்பகம், குடல், சினைப்பை, ப்ராஸ்டேட் புற்றுநோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுவதாக முதல்நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றாலும், பக்கவிளைவுகளே இல்லாத தாவரமும் இதுவல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதில் உள்ள ஃபைடிக் அமிலம் மற்றும் க்ளைக்கோ-சயிட்கள் உணவு உறிஞ்சலைத் தடுக்கக்கூடும். அதிகப்படியான க்ளைக்கோ-சயிட்கள், உயிருக்கே ஆபத்தான ஹைட்ரஜன் சயனைடு (Hydrogen cyanide) விஷத்தைக்கூட உற்பத்தி செய்யக்கூடும் என்பதால், வறுத்து அல்லது ஊற வைத்து உட்கொள்வதே நல்லது என்கின்றனர்.
நீர் உறிஞ்சும் தன்மை மிக்க இந்த ஆளி விதைகளை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்று உப்புசம், நீர்த்தன்மை குறைதல், செரிமானமின்மை, ஒவ்வாமை, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மிதமாக உட்கொள்ள வேண்டும் எனவும், ஆளி விதையை உபயோகிக்கும்போது தண்ணீர் அதிகம் பருகவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
30,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது ஆளி என்றுகூறும் வரலாற்றுக் குறிப்புகள், ஜியார்ஜியாவின் ஜூட்ஜூவானா குகைகளில் ஆளி நார்கள் முதலில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இயேசுநாதரின் போர்வை லினன் நாரில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறது. பிறகு கயிறு, பேண்டேஜ், அணையாடைகள் என இந்த நார்களின் பயன்பாடு விரிவடைந்தது.
உறுதியும் அழகும் மிகுந்த இந்த நார்களிலிருந்து விலை மதிப்பு மிக்க ஆடைகள், ரூபாய் நோட்டு, ரோலிங் பேப்பர், டீ-பேக் என தற்சமயம் லினனின் பயன்பாடுகள் நீள்கின்றன. லின்சீட் ஆயில் எனும் ஆளி எண்ணெய் சமையலுக்கும், லினோலியம், வார்னிஷ் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகள் உடுப்புகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் தயாரிக்க மட்டுமே பயன்பட்ட ஆளி விதைகளின் பயன்பாடு பிற்பாடுதான் கண்டறியப்பட்டுள்ளது. செரிமானத்திற்கான மருந்து என்று ஹிப்போகிராட்டிஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, சுஷ்ருத மற்றும் சாரக சம்ஹிதைகளில் ஆளி விதைகளின் நோய் நீக்கும் பண்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஃப்ரெஞ்சு மன்னர் சார்லி, ஆளி விதைகளை தினமும் உட்கொள்ளுமாறு தன் மக்களுக்கு சட்டம் கூட இயற்றியுள்ளார்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடப்படும் இந்த விதைகள், விதைத்ததிலிருந்து பூக்கள் பூத்த 30 நாட்களில் அறுவடைக்கு வருகின்றன. மிதமான வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் இந்தக் குத்துச்செடிகளை கனடா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் விதைகளுக்காகவும், லினன் நூல் தயாரிக்கவும் அதிகம் பயிரிடுகின்றன. நமது நாட்டில், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இவை பயிரிடப்படுகின்றன. ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும்போது அது சுரக்கும் பால் உணவிலும் அதிக சத்துகள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்து அப்படியே உட்கொள்ளலாம். அல்லது பொடித்து, பிற உணவுகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். ஊற வைத்து, அரைத்துப் பயன்படுத்தும் போது முழுப் பயன்களும் கிடைக்கும் என்பதால், இதன் மாவை தண்ணீரில் கரைத்து அல்லது தயிர், பழச்சாறு, இட்லி மாவில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
அமெரிக்கர்கள் ஆளி விதையின் பயன்களை நன்கு அறிந்ததாலேயே, ரொட்டி, பன், கேக், க்ராக்கர்ஸ், மஃபின், பான்கேக், பாரிட்ஜ், சாலட், ஸ்மூத்தி, யோகர்ட் என அவர்களின் ஒவ்வொரு உணவுடனும் கலந்து உட்கொள்கின்றனர்.இத்தனை ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் அற்புத ஆளி எனும் ஃப்ளாக்ஸ் விதைகளை ‘மந்திர விதைகள்’ எனக் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை..!
‘‘கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைச்சவனுக்கு எள்ளு... எல்லோருக்கும் ஆளி..!” என்பது இனி நம் புதுமொழியாகட்டும்!
(இயற்கைப் பயணம் நீளும்!)
|