சீனர்களுக்கு தமிழ் கற்றுத் தரும் இந்திய பரதக் கலைஞர்!
தமிழ் அமைப்புகளின் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கதை சொல்லி, எழுத்தாளர், கவிதாயினி, நடனக் கலைஞர் என பன்முகம் கொண்டவர் சங்கீதா. தமிழகத்தை ேசர்ந்த இவர் தற்போது சிங்கப்பூர், பொங்கோல் பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள சீனப் பெண்களுக்கு தமிழ் கற்றுத் தந்து வருவது மட்டுமில்லாமல், அவர்களுக்கு நடனமும் பயிற்றுவித்து வருகிறார். ‘‘என்னிடம் பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிவதற்கு முன்பிருந்தே தமிழர்களின் உழைப்பு அங்குண்டு. அதனால் சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ நான்கு மொழிகளில் தமிழ் ஒன்றாக இருக்கிறது. இங்கு நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழ் மொழிக்காக ஒரு மாதம் முழுதும் விழா கொண்டாடுகிறார்கள். எம்.ஆர்.டி போன்ற இடங்களில் ஆங்கிலம், சீன மொழிகளுடன் தமிழிலும் அறிவிப்பு வெளியாகும். அதனால் சீனர்களுக்கும் தமிழ் மொழி மேல் ஒரு ஆர்வம் எப்போதுமே இருக்கும். நான் பேச்சாளர் என்று தெரிந்ததும், என்னிடம் அவர்கள் கேட்டது எங்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க முடியுமா? என்பதுதான். நானும் ஆர்வமாக கற்றுக் கொடுத்தேன். அடிப்படை வார்த்தைகளான வணக்கம், நன்றி, வாங்க, உட்காருங்கள், சாப்பிடுங்கள்... அது போல உணவு வகைகள், கல்வி சார்ந்த விஷயங்கள், பண மதிப்பு, ஷாப்பிங் பொருட்கள் என எல்லாவற்றையும் வேகமாக கற்றுக்கொண்டார்கள்’’ என்றவர் நடனப் பயிற்சி குறித்தும் விவரித்தார்.
‘‘நான் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர். சீனர்களுக்கு தமிழ் மேல் மட்டுமில்லை... இந்திய நடனத்தின் மேலும் விருப்பம் இருந்தது. குறிப்பாக பரதத்தினை தமிழ் பாடல்களில் சொல்லித் தர கேட்பார்கள். அவர்களுக்கு நான் நடனம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
ஒரு நாள் அக்வா ஏரோபிக்ஸ் வகுப்பு முடிந்த பிறகு அதற்காக ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்தும் போது தமிழ் பாட்டு ப்ளே ஆயிடுச்சு. தண்ணீரில் நின்று கொண்டு ஆக்வா ஏரோபிக்ஸ் செய்து கொண்டிருந்தவர்கள் அந்தப் பாட்டைக் கேட்டதும் அப்படியே நடனமாட ஆரம்பித்தார்கள். நானும் வெளியே இருந்து முழுப் பாட்டுக்கான நடன அசைவுகளை ஆடிக் காண்பித்தேன். அதைப் பார்த்து தங்களுக்கும் பரதம் சொல்லித்தர கேட்டார்கள். வாரத்தில் ஒருநாள் பரத வகுப்பு எடுக்கிறேன். அதில் இரண்டு சீனப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகமும், சிங்கப்பூரும் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கில் திருக்குறள் பாடலுக்கு நடனமாடினோம்’’ என்றவர், நடன ஆசிரியராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சி தொகுப்பது மற்றும் மேடைப் பேச்சு, கதை சொல்வது பற்றி விவரித்தார்.
‘‘முதலில் கதைகள்தான் சொல்லி வந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சியினை நானே தொகுத்து கதையும் சொல்வேன். அதைப் பார்த்த பலரும் ரேடியோவில் தொகுப்பாளர் பேசுவது போல் இருப்பதாக கூறினார்கள். அப்படித்தான் எனக்கு நிகழ்ச்சியினை ெதாகுக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இன்று வரை 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தொகுத்திருக்கிறேன். ஆனால், அந்தப் பணி அவ்வளவு எளிதல்ல. ஒரு நிகழ்ச்சி துவங்கும் முன் அதற்கான எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். நடந்து முடிந்த பின்பும், பார்வையாளர்கள் மனதில் சுகமான நினைவுகளாக பதிய வைக்க வேண்டும்.
அதே போல் கதை சொல்லும் போது கதாபாத்திரத்திற்கு ஏற்ப பல குரல்களில் பேசுவேன். குதிரை கனைப்பது, யானை பிளிர்வது என உயிரோட்டமாக என் கதைகள் இருக்கும். அப்போதுதான் கதையினை காதால் கேட்டாலும், காட்சியினை கண் முன் கொண்டு வர முடியும். என்னுடைய கதைகள் சொல்லல் நிகழ்ச்சியின் தலைப்பு ‘கதைக்குள் விதை’ என்பதுதான். உலகில் ஒவ்வொரு மூலையிலும் பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கு.
அதை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம். அதே போல் ஆழ் மன உணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய கதைப் புத்தகங்களை தேர்வு செய்து படிக்கிறேன்.
உதாரணத்துக்கு ரஷ்ய புத்தகங்களில் உள்ள கதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கதையும் ஒரு விதை. தனி மனித ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் இவையெல்லாம் கதையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறேன்.
கல்லூரியில் நான் ஆல்ரவுண்டர். தமிழ் பேச்சு, கவிதைப் போட்டி, கருத்தரங்கு, ஆய்வுக் கட்டுரைகள் என அனைத்திலும் கலந்து கொள்வேன். மெடிக்கல் நுண்ணுயிரியல் துறையில் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்கு எனக்கு மாநில அளவிலான பரிசு கிடைத்தது.
அதே போல் நுண்ணுயிரிகள் மூலமாக டைஃபாய்டு நோய் எவ்வாறு பரவுகிறது குறித்தும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அதற்காக அங்கீகாரமும் கிடைத்துள்ளது’’ என்றவர், பெண்கள் தடைகளை தாண்டி வெளியே வர வேண்டும் என்று ஆலோசனை அளித்தார். ‘‘பெண்கள் குடும்பத்தில் மட்டுமில்லை சமூகத்தில் இருந்தும் ஏதாவது ஒரு தடையினை சந்திக்கிறார்கள். அதை முதலில் தாண்ட கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறமை பெண்களிடம் உள்ளது. நீங்களே உங்களைப் பற்றி தாழ்வாக நினைப்பதை நிறுத்துங்கள். உலகம் உங்களை உயர்வாக பார்க்கத்தான் ஆசைப்படுகிறது.
நீங்கள் சாதிக்கும் போது, உங்களை ஆதரிக்கிற பல நல்ல உள்ளங்களும் இந்த உலகத்தில் உள்ளனர். எத்தனையோ சாதனையாளர்கள் பல தடைகளை கடந்துதான் இந்த நிலையினை அடைந்திருக்கிறார்கள். நான் இந்த நிலையை அடைய என் குடும்பத்தினர் தந்த ஊக்கம் மற்றும் ஒத்துழைப்புதான் காரணம்’’ என்றவர், சிறந்த பன்முகத் திறமையாளர், சிறந்த மாணவர் விருது, தங்க மங்கை, தமிழ்ச் செம்மல் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
பொ.ஜெயச்சந்திரன்
|