சின்ன இடத்தை பெரிதுபடுத்திக் காட்டுவதே எங்களின் ஸ்ட்ரெங்த்!
வீட்டைக் கட்டுனோமா, பெயின்டை அடித்தோமா, புது வீட்டில் குடியேறினோமா என்றிருந்த நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கி, இன்று சின்ன சைஸ் வீட்டையும், அழகாய் மாற்றுகிற இன்டீரியர் டிசைன் கான்செப்டிற்குள் பலரும் வந்துவிட்டனர். ஒரு வீட்டின் வரவேற்பு அறைக்குள் நுழைந்ததுமே, நாம் சந்திக்கப் போகும் நபர் எந்தத் துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்லாமலே கணிக்கும் அளவுக்கு, அவரது பெர்சனாலிட்டியை ரிஃப்ளெக்ட் செய்கிற அளவுக்கு, இன்டீரியர் டிசைனிங் துறை இன்று பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எல்லோர் வீட்டிலும் இருக்கின்ற ஒன்று என் வீட்டில் இருக்கக் கூடாது. என் வீடு, எனக்குப் பிடித்த கான்செப்ட்டில், தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்கிற வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கொடுக்கும் கான்செப்ட்டை, கிரியேட்டிவ் தளத்தில் நின்று, ஆர்வத்தை தூண்டும் விதமாக, பிரமிப்புடன் செய்து தருபவர்கள் செந்தில் குமார்-சுசித்ரா இணையர். சுசித்ராவிடம் முதலில் பேசியதில்...
 ‘‘எனக்கும் இந்தத் துறைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எனது கணவர் இந்தத் துறையில் இருப்பதால் நானும் அவருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினேன்’’ எனப் புன்னகைத்த சுசித்ரா, தனது கணவருடன் இணைந்து “ஆரா கிரியேட்டிவ் இன்டீரியர்ஸ்” என்ற பெயரில், கோவையில் இன்டீரியர் டிசைனிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
‘‘சின்ன இடத்தையும் பெரிது படுத்திக் காட்டுவதுதான் எங்களின் ஸ்ட்ரெங்த்’’ என்கிற சுசித்ரா, பினான்ஸ் அண்ட் எச்.ஆரில் எம்.பி.ஏ முடித்து ஐசிடபிள்யூஎ-வில் இன்டர் முடித்திருப்பதால், கணவர் செந்திலுக்கு பேக்போனாய் இருந்து, நிறுவனத்தின் மேனேஜ்மென்ட், சர்வீஸ் டெலிவரி, கிளையன்ட் ரிலேஷன்ஷிப், பினான்ஸ் என அனைத்தையும் கையாளுவதாய் தெரிவிக்கிறார்.
‘‘செந்தில் கும்பகோணம் ஆர்ட்ஸ் கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் முடித்தவர். பி.எஃப்.ஏ முடித்தவர்கள் பெரும்பாலும் சினிமாத் துறை சார்ந்து ஆர்ட் டைரக் ஷன், சினிமாட்டோகிராஃபர்ஸ், ஆர்ட் அசிஸ்டென்ட் என கிரியேட்டிவ் துறைக்குள்தான் பயணிப்பார்கள். ஆனால், செந்தில் படிக்கும்போதே அவரின் தந்தை திடீரென இறந்துவிட, ஒரே இரவில் குடும்பத்தின் மொத்த பொறுப்பும் செந்திலின் தோள்களுக்கு மாறி இருக்கிறது.
செந்திலின் விருப்பம் நிறைவேறாமல் போனாலும், திரைப் படத் துறையில் செட் போடும் அவர் கனவு மனதுக்குள் கனன்று கொண்டே இருக்க, அதுவே அவரை இன்டீரியர் டிசைன் துறைக்கு மாற்றியிருக்கிறது’’ என்றவர், கணவரின் இன்டீரியர் டிசைன் துறை சார்ந்து விரிவாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘ஆர்ட் டைரக் ஷனில் செட் போட்டால் படம் முடிந்ததும் கலைத்து விடுவார்கள். ஆனால், வீடுகளில் நாங்கள் செய்கிற இன்டீரியர் நிலைத்திருக்கும் என்றவர், இப்போதெல்லாம் வீடு பெரிதாக வேண்டாம். வீட்டிற்குள் அக்ஸஸ் பண்ணத் தேவையான அனைத்தும் எனக்கு வீட்டுக்குள் இருக்கணும் எனக் கேட்கிறார்கள்.
வீடு என்பது ஃபீலிங்கான அட்மாஸ்பியரா, ரிலாக்ஷடா, ரெஜுமேட்டிக்காக, ரெஃப்ரெஷிங்கா இருக்கணும் என்ற சிந்தனை இன்றைய தலைமுறைக்கு வந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகான வொர்க் ஃப்ரெம் ஹோம் கான்செப்ட்டில், வீடு சலிக்காமல் இருக்க வேண்டுமெனவும் நினைக்க ஆரம்பித்து விட்டதால், வீட்டையும், பணி செய்யும் அறையையும் இன்டீரியர் செய்து, வொர்க் ஃப்ரெம் ஹோம் கான்செப்டை ஜாலியாக என்ஜாய் செய்ய நினைக்கிறார்கள்.
எனவே, தாங்கள் பயன்படுத்துகிற பொருட்கள் ஆர்டிஷ்டிக்கா இருக்க நினைப்பதுடன், எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியேறும் எமிக்ஷன், உடல் நலத்தை பாதிக்காத அளவு வீட்டின் உள்கட்டமைப்பை பிளான்டேஷனுடன் மாற்றவும் நினைக்கிறார்கள். சமீபத்தில் எம்.பி. சு.வெங்கடேஷன் அவர்களின் வீட்டை நாங்கள் இன்டீரியர் செய்து கொடுத்தோம். அவருக்கு “சாகித்ய அகாடமி” விருதைப் பெற்றுத் தந்த புத்தகமான “காவல் கோட்டம்” புத்தகத்தை பிரதிபலிக்கிற மாதிரி, அவர் சார்ந்த விஷயங்கள் சிலவற்றை தீமாய் கொண்டு வந்து, கண்களை உறுத்தாத அளவுக்கான கான்செப்டை வரவேற்பறையில் செய்து கொடுத்தோம்’’ என்றவர், செந்தில் செய்கிற கான்செப்ட் எல்லாமே ஏன், எதற்கு என்கிற தேடலை ஏற்படுத்துகிற உரையாடல் ஒன்றினை உங்களோடு நிகழ்த்திக்கொண்டே இருக்கும் என்கிறார் இவர் அழுத்தமாக.
‘‘ பெரிய பட்ஜெட் புராஜெக்ட் எனில் இன்டீரியர் A to Z பர்னிச்சரில் தொடங்கி வீட்டுக்குத் தேவையான அத்தனையும் செய்து கொடுத்துவிடுவோம். சில கஸ்டமைஸ்ட் புராஜக்ட்டும் இதில் உண்டு. இரண்டே மாதத்தில் முடித்துக் கொடுத்த சில இன்டீரியரும் உண்டு, இரண்டு வருடம் செய்த வேலைகளும் உண்டு.
நீங்கள் கொடுக்கும் இடம் மற்றும் கான்செப்ட் பொறுத்தே இவை முடிவாகும். கோவையில் தற்போது ஒரு வீட்டை இத்தாலியன் கான்செப்டை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, பெரிய புராஜெக்ட் இன்டீரியராகச் செய்து வருகிறோம்’’ என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் சுசித்ராவின் கணவர் செந்தில் குமார்.
‘‘சொந்த வாழ்க்கையில் நடந்த ஒருசில மாற்றங்களால், ஆர்ட் டைரக் ஷனுக்குள் நுழைய முடியாமல் போனாலும், தேடல்கள் என்னிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சினிமாவில் கிரியேட்டிவ் சைடில் இருந்து, ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர், பேனர் எனவும் பணியாற்றினேன்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் லோகோ நான் செய்த சிக்னேச்சர் கிரியேஷனில் ஒன்று’’ என்கிற செந்தில், ஆர்க்கிடெக்டுக்கும் இன்ஜினீயருக்கும் இல்லாத ஒரு ஆர்ட் டச் எங்கள் இன்டீரியர் பணியில் இருக்க வேண்டும் எனவும், அது முழுக்க முழுக்க ஆர்டிஸ்டிக்காக இருக்க வேண்டும் எனவும் நினைத்தேன்’’ என்கிறார். ‘‘இன்டீரியர் தொடர்பாகவும், ஆர்க்கிடெக்ட் தொடர்பாகவும் எது நடந்தாலும், அது சிங்கப்பூர், துபாய் என எந்த நாட்டில் நடந்தாலும் தவறாமல் பங்கேற்பதுடன், மெட்டீரியல் டெவலப்மென்ட், ஆட்டோமேட்டிக் விஷயங்கள் என என்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பேன்.
லட்சங்களில் தொடங்கிய எங்களின் இன்டீரியர் பயணம் இன்று கோடிகளைத் தொட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தளவுக்கு மிகப் பெரிய புராஜக்டுகளையும் எடுத்து செய்து வருகிறோம். கோவை மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் எனவும் எங்கள் இன்டீரியர் பணியை விரிவாக்கியுள்ளோம்.
இந்தத் துறைக்குள் கால் பதித்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இந்த இடைவெளியில் ஆர்ட் டைரக் ஷனும் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது’’ என தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டிய செந்தில், “வேட்டையன்” படத்தில் “வில்லன் ராணா”வின் போர்ஷன் முழுவதும் நாங்களே டிசைன் செய்து ஆர்ட் டைரக் ஷன் செய்ததுதான். தற்போது மேலும் சில படங்களுக்கும் ஆர்ட் டைரக் ஷன் பணிகளை செய்து வருகிறேன் என்றவர், இயக்குநர் டி.ஜே. ஞானவேல் தனது சகலை என்றவாறு விடைபெற்றார்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: சதீஸ் தனபாலன்
|