அம்மாதான் என்னுடைய மூன்றாவது கை!



மனிதர்கள் நலமுடன் வாழ இயற்கை பல ஆரோக்கியங்களை நமக்கு கண்முன்னே கொட்டி வைத்துள்ளது. காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் எல்லாம் அவற்றின் அம்சங்களே! ஆனால், நாம்தான் அவற்றை ஓரங்கட்டி வைத்து விட்டு நோய்கள் பெருகிவிட்டது என புலம்பிக் கொண்டிருக்கிறோம். 

வானவில்லில் உள்ள நிறங்களை போல் வண்ணமயமான உணவுகள் கண்ணைப் பறித்தாலும் அவை யாவும் உயிரை பறிக்கவே கூவி கூவி அழைக்கின்றன என்று பலருக்கு புரிவதில்லை. இதற்கான விழிப்புணர்வு ஒரு பக்கம் நடந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நச்சான உணவுகளைத் தேடித்தான் ஓடுகிறார்கள்.

‘‘நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே நாம் கைவிட்ட நல்வாழ்வை மீட்டெடுக்கலாம். அவர்கள் சொல்லிய எளிய உணவு முறைகள் பாதி நோய்களுக்கு எமனாக இருந்துள்ளது’’ என்கிறார் ‘ரேகா ஃபுட்ஸ்’ உரிமையாளர் ரேகா கார்த்திகேயன். இவர் தமிழ் மரபு மாறா பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகார மிக்ஸ்களை விற்பனை செய்வதன் மூலம் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க துணையாக உள்ளார். 
‘‘சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி. எம்.பி.ஏ படித்துவிட்டு சென்னை மற்றும் புதுச்சேரியிலும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கணவர் சென்னையில் வங்கி ஒன்றில் துணை மேலாளராக உள்ளார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கணவருக்கு வங்கி பணி என்பதால் அடிக்கடி டிரான்ஸ்பர் வரும். 

அது மகள்களின் படிப்பை பாதிக்கும் என்பதால் நான் ேவலையை விட்டுவிட்டு சொந்த ஊரிலேயே செட்டிலாகிட்டேன். குழந்தைகளுக்காக என் பணியை விட்டாலும் நான் தனித்துவமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ரீங்காரித்துக் கொண்டு இருந்தது’’ என்று தன் கனவைக் குறித்து பகிர்ந்தார் ரேகா.

‘‘இன்று உணவுமே ரசாயனமாகிவிட்டதால், என் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஸ்நாக்ஸ் அயிட்டங்களை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் யூ டியூப் பார்த்து செய்து கொடுத்தேன். ஹெல்த் மிக்ஸ், குக்கீஸ், ராகி பிரௌனீஸ் செய்தேன். அதை என் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டு நன்றாக இருப்பதாக கூறினார்கள். நான் வெள்ளை சர்க்கரை, மைதா, செயற்கை நிறங்கள், எசன்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எதுவுமே சேர்க்காமல்தான் செய்தேன்.

சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு தான் பயன்படுத்தினேன். யூ டியூப்பில் பார்த்து கற்றுக் கொண்டாலும் அதன் பிறகு நான் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் செய்து தயாரித்தேன்’’ என்றவர் காட்டுயானை, மாப்பிள்ளை சம்பா, பூம்புகார் போன்ற நாட்டுரக அரிசி வகைகளை மட்டுமே கஞ்சி மிக்ஸ்களுக்கு பயன்படுத்துவதாக கூறினார்.

‘‘நான் வீட்டில் செய்ததை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்த போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்து தரச் சொல்லி கேட்டார்கள். குழந்தைகளின் பிறந்த நாட்களுக்கு கேழ்வரகு பிரௌனீஸ் மொத்தமாக கேட்டார்கள். இதுதான் எனக்கான தனித்துவம்னு புரிஞ்சது. 

என் அம்மா ‘நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன், நீ தொடங்கு’ன்னு சொன்னாங்க. அப்படித்தான் ‘ரேகா ஃபுட்ஸ்’ உருவாச்சு. இதனை ஒன்பது மாதத்திற்கு முன்பு தான் ஆரம்பித்தேன். மக்கள் நல்லாதரவை அளித்து வராங்க. என்னைப்போல் கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்கு அல்லது பிசினஸ் செய்ய விரும்பும் பெண்களுக்கு அம்மாக்கள்தான் ‘மூன்றாவது கை’. 

குழந்தைகளுக்கான ஹெல்த் மிக்ஸ், உடல் எடை குறைக்கும் கவுனி கஞ்சி மிக்ஸ், கருப்பு உளுந்து மிக்ஸ், ராகி சாக்கோ மிக்ஸ், களி மிக்ஸ், பாதாம் மிக்ஸ், சூப், இட்லிப் பொடி வகைகள் அனைத்தும் தயாரிக்க தேவையான பொருட்களை நன்கு காயவைத்து அரைத்து அதன் பிறகுதான் பேக்கிங் செய்து விற்பனைக்கு கொடுக்கிறேன். 

அனைத்தும் சுத்தமான முறையில் செய்வதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன். இதைத் தொடர்ந்து அம்மா எனக்கு தயாரித்த வீட்டுத் தேவையான குழம்பு மற்றும் சாம்பார் மசாலா மிக்ஸ்களையும் பிசினஸாக மாற்றிவிட்டேன். 

இதைத் தவிர தெரிஞ்சவங்க வீட்டுல கல்யாணத்திற்கு அவங்க குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு டிரெஸ் ஏற்பாடு செய்து தருகிறேன். இன்னும் நிறைய செய்யலாம் என்று என் குடும்பத்தினர் ஊக்கம் அளித்ததால் அடுத்து அழகுப் பொருட்களிலும் கால் பதிக்க ஆரம்பித்திருக்கிறேன்’’ என்றவர் தற்போது ஹேர் ஆயிலும் விற்பனை செய்வதாக கூறினார்.

 ‘‘என் கணவர் குடும்பத்தை பாதிக்காத எந்தத் தொழில் வேண்டும் என்றாலும் செய்ன்னு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இப்போது பண்டிகை காலத்திற்கு தேவையான அதிரசம் மற்றும் முறுக்கு மிக்ஸ்களும் இயற்கையான முறையில் தயாரித்து வருகிறேன்.

இதில் சுக்கு, ஏலக்காய் கொஞ்சம் அதிகம் சேர்ப்பதால் மணமும் சுவையும் கூடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் என் வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான சமையல் மற்றும் அழகுப் பொருட்களில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு தொழில் செய்ய என்ன படித்திருக்கிறோம் என்பது அவசியம் இல்லை. திறமையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரேகா.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்:ரங்கப்பிள்ளை