வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் புராணக் கதைகள்!



கதை கேட்க யாருக்குதான் பிடிக் காது. சுவாரஸ்யமாக கதைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக புராணக் கதைகள். புத்தகங்களில் படித்திருப்பதால், என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்று கேட்கலாம். 
ஆனால், ஒவ்வொரு கதைக்கும் நம் வாழ்க்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. புராணக் கதைகளையும் நம் வாழ்க்கையையும் ஒற்றுமைப்படுத்தி அதிலுள்ள நெறிமுறைகளை  கதைகள் மூலம் எடுத்து உணர்த்தி வருகிறார் மஹிதா. 

‘வாவ் ஸ்டோரிஸ்-மஹிதா கதா லோகம்’ என்ற பெயரில் இவர் பல இடங்களுக்கு சென்று புராணக் கதைகள் எவ்வாறு நம் வாழ்க்கையுடன் இணைந்திருக்கிறது என்பதை விளக்கி வருகிறார். கடந்த வாரம் சென்னையில் இவரின் கதை சொல்லி நிகழ்வில் அவரை சந்தித்த போது...‘‘அடிப்படையில் நான் நாடகக் கலைஞர். தொடர்பு திறன்கள் குறித்தும் பயிற்சி அளித்து வந்தேன்.
 எனக்கு எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருப்பது பிடிக்கும். நாடகம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள மும்பையில் சிறப்பு பயிற்சி எடுத்தேன்.  அங்குதான் கதை சொல்ல ஆரம்பித்தேன். கோவிட் பாதிப்பால் திருநெல்வேலியில் உள்ள என் கிராமத்திற்கு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு புராணக் கதைகளை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு முறை நான் கதை சொல்வதை என் அம்மா பதிவு செய்தாங்க. 

அவங்க என்னிடம், ‘புத்தகத்தில் இருப்பதை நீ படிச்சு சொல்வதை நான் ஏன் கேட்கணும். நானே படிச்சி தெரிஞ்சுப்பேனே’ என்றார். நான் அம்மாவிடம் ‘இந்தக் கதைகள் என் மனதில் ஆழமாக ஒரு உணர்வினை ஏற்படுத்துகிறது’ என்றேன். அதற்கு அவர், ‘அதை மக்களும் உணர்ந்தால்தான்  கதை கேட்கவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.  

புராணக் கதைகளுக்கு இன்றும் மக்களிடம் தனிப்பட்ட மதிப்பு இருக்கிறது. அதனை நம்மால் ஒதுக்க முடிவதில்லை. காரணம், அதில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளும் இன்றும் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. மார்டர்ன் உலகில் வாழ்ந்தாலும், அதே உணர்வுகளை இன்றும் சுமந்து கொண்டு இருக்கிறோம். உதாரணத்திற்கு சூர்ய தேவனின் மனைவி சரண்யு. சூரிய தேவனின் புத்திசாலித்தனம் மற்றும் உக்கிரத்தினை சரண்யுவால் ஈடுகட்ட முடியவில்லை. 

அதனால் அவனை விட்டு விலகிச் சென்றாள். சூர்ய தேவன் தன் மனைவியின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டான். இதை நம் வாழ்க்கையில் பார்க்கும் போது, ஒரு இல்லத்தில் கணவன்தான் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறான். 

அவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. தன் மனைவிக்காக சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த கதை மூலம் உணர்த்துகிறேன். 

இன்று எத்தனை ஆண்கள் மற்றவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். ஒரு பெண் கணவனிடம் இருந்து தனக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும். இது போன்றவற்றை கதை மூலம் எடுத்து சொல்கிறேன். 

நம் முன்னோர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு என் கதைகள் பாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்றவர் குழந்தைகளுக்கும் கதைகளை சொல்லி வருகிறார்.‘‘குழந்தைகளுக்கு சொல்லும் போது அவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருக்கும். ஒருமுறை நான் என் பேரக்குழந்தைக்கு வாலி, சுக்ரீவன், மாயாவி  அவர்களின் கதையை சொன்னேன். அதில் மாயாவியின் தந்தை துந்துபிக்கு உருவத்தை மாற்றும் சக்தி உண்டு. 

ஆனால், மாயாவி அதை தன் தந்தையிடம் கற்றுக் கொள்ளவில்லை என்றேன். உடனே என் பேரன், ‘அவர் ஏன் தன் அப்பாவைப் போல் இருக்கணும்... அவருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். அவருக்குப் பிடிச்சதை செய்யலாமே’ என்றான். அப்போது தான் எனக்கு இந்த விஷயம் புரிந்தது. நமக்குப் பிடித்ததை ஏன் குழந்தைகள் மேல் திணிக்க வேண்டும். குந்தைகள் என்றாலும் அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். 

அதே சமயம் ஒரு கதை மூலம் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்ல முடியும். கடவுள் பிள்ளையார் பற்றி சொல்லும் போது, அதில் ஆரோக்கியமான உணவுகள் முதல் எவ்வாறு சாப்பிட வேண்டும், உணவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் போன்ற பல விஷயங்களையும் புராணக் கதைகள் மூலம் சொல்லலாம். அதே போல் நல்ல வளர்ப்பு முறைக்கு ராமாயணமே ஒரு பாடம். 

ராவணன், சூர்ப்பனகையினை அவரின் பெற்றோர் நல்ல முறையில் வளர்த்திருந்தால், ராமன் இலங்கை நோக்கி போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. நான் சொந்தமாக எந்தக் கதையும் சொல்வதில்லை. ஆனால், அந்தக் கதையின் மூலம் மக்களிடம் ஒரு முன்னோக்கு பார்வையினை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். கதைகள் மூலம் ஒருவருக்கு போதிக்க வேண்டும் என்றில்லை. 

ஆனால், இந்தக் கதைகள் நம்முடைய எண்ணத்தை முற்றிலும் மாறுபடுத்தும். புராணக் கதைகள் ெபரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டவை. அதில் ஒரு பெண்ணை முன்னிருத்தி பார்த்தால் கதைக் களமே முற்றிலும் மாறுபட்டு இருக்கும்’’ என்றவர் 2020 முதல் கதைகளை சொல்ல ஆரம்பித்துள்ளார்.

‘‘கோவிட் நாளில் இணையம் மூலமாக கதைகளை பதிவு செய்தேன். அதைப் பார்த்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அழைத்தார்கள். அப்போதுதான் என் தோழி உஷா, தற்போது என் பிசினஸ் பார்ட்னரும் அவரே. ஒவ்வொரு இடங்களுக்கு போய் கதை சொல்வதற்கு சென்னையிலேயே சொல்லலாமே என்றாள். 

எனக்கு அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியாது என்றபோது அவளே அதை முன்னெடுத்து செய்தாள். முதல் முறையாக என் வீட்டில் 12 பேருக்கு கதை சொன்னேன். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு தெரிந்தவர்களின் வீட்டில் கதைகளை சொல்லி வருகிறேன். அப்படித்தான் ‘வாவ் ஸ்டோரீஸ் மஹிதா கதா லோகம்’ உருவானது. இப்போது 40 பேருக்கு மேல் வருவதால், வீட்டில் இல்லாமல் வெளி இடங்களில் நாங்க செய்து வருகிறோம். 

எனக்கு புராணக் கதைகள் பிடிக்கும். அதை தெரியாதவர்களுக்கு கொண்டு செல்ல விரும்பினேன். இதுதான் நம்முடைய கலாச்சாரம். நான் அந்தக் கதைகளை ஆன்மீக ரீதியாக பார்ப்பதில்லை. முழுக்க முழுக்க உணர்வுபூர்வமாகத்தான் பார்க்கிறேன். அதற்காக நிறைய புத்தகங்களை படிப்பேன். ஒரு மணி நேர கதைக்கு நான் சுமார் இரண்டு வாரங்கள் அதற்கான ஆய்வில் ஈடுபடுவேன். தற்போது சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் கதை சொல்லி வருகிறேன்.

இதை உலகளவில் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதிகபட்சமாக 100 பார்வையாளர்கள் என்று முடிவு செய்திருக்கிறோம். காரணம், இந்தக் கதைகள் ஒவ்வொருவரையும் இணைக்கக்கூடியது என்பதால் குறைந்த பார்வையாளர்களை டார்கெட் செய்கிறோம்’’ என்றவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 ஷன்மதி