தலைமைச் செயலகம்!
மனம் பேசும் நூல் 4
‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry துறை மன நோய்களை தெளிவு செய்கிற இடமாக, உளவியலாக நமது உடல் சிந்தனைத்திறன் மற்றும் சமூகத்திறனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உளவியல் நிபுணர்கள் (Psychologists) சிகிச்சை அளிக்கிறார்கள்.  அப்படியென்றால் மனநல மருத்துவத்தில் நியூரோ சைக்கியாட்ரி (neuropsychiatry) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறதே? என்ற கேள்வியையும் சிலர் முன் வைக்கின்றனர். எதனால் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது? மனித மூளையில் பிரச்னை ஏற்படுவதாலா? அல்லது நரம்புகளில் பிரச்னை ஏற்படுவதாலா? என்பதில் குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை எனவும் சிலர் தொடர்ச்சியாக கேள்விகளை முன் வைக்கின்றனர்.
இதில் மனநல துறை குறித்து மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. அப்படியெனில், நியூரோ சைக்கியாட்ரி துறை குறித்துதான் தெளிவில்லை. நியூரோ சைக்கியாட்ரி குறித்து தெளிவு பெற, மூளை மற்றும் அதில் இயங்கும் நரம்புகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. நியூரோ சைக்கியாட்ரி குறித்து தெளிவாக உணர, ‘தலைமைச் செயலகம்’ என்ற தலைப்பில் மூளை குறித்தும், மூளையில் இயங்கும் நரம்புகள் குறித்தும், மருத்துவ அறிவியல் தன்மையுடன் எளிதாய் புரிந்து கொள்கிற எளிய நடையில் அருமையான புத்தகத்தை எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ளார். ‘எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்ற பழமொழியின் அடிப்படையில் இப்புத்தகம் நமக்கு விழிப்புணர்வை வழங்குகிறது.
உடல் தெம்பாய் இருக்க ஆரோக்கியமான உணவு முக்கியம். அப்போதுதான் ஆற்றலோடு நாம் செயலாற்ற முடியும். அதேபோல்தான் மூளையும். அப்படியெனில், மூளை
தெம்பாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? உண்மையில் உடலைவிட மூளையே அதிகம் பசியுள்ளது.
மூளைக்கு பசித்தால் சாம்பார் சாதத்தை கொடுக்க முடியுமா? ஆக்சிஜன்தானே மூளைக்கான சாப்பாடு. ஒரு நிமிடத்திற்கு எண்ணூறு மில்லி ரத்தம் மூளைக்கு தேவைப்படுகிறது. அப்படியெனில் நாம் தூங்கினாலும் விழித்திருந்தாலும் குளுக்கோஸ் குளுக்கோஸ் என அலறும் ராட்சதக் குழந்தை இந்த மூளை.
இதில், முதுகுத்தண்டின் ஊடாகச் செல்லும் நமது ஸ்பைனல் கார்ட்தான் போக்குவரத்தாய் மாறி மூளைக்கான செய்தி தொடர்பை தொடர்ந்து அளிக்கும் ஊடகமாய் செயல்படுகிறது.இந்த நியூரல் நெட்வொர்க்கை இப்படியாக நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
அதாவது, நாம் அனைவரும் தினம்தினம் ஒரு சாகசத்தை ஒரு நொடிக்குள் செய்து கொண்டிருக்கிறோம். எப்படியென்றால்? நாம் எதையுமே செய்யாமலே, எதையுமே சிந்திக்காமலே சும்மாவே இருக்கும் போது, நமது நரம்பு செல்லுக்குள் எதிர் மின்சாரம் எனச் சொல்லக்கூடிய சுமார் அறுபது மில்லி வோல்ட் அப்படியே அமைதியாக இருக்கும். ஆனால், நாம் சிந்திக்க முயற்சிக்கும் போதோ அல்லது தசைநாரை இயக்க வேண்டுமென நினைத்தாலோ எதிர் மின்சாரம் குறைந்து, மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். அதாவது, நடப்பது, எழுந்து உட்காருவது, திடீரென்று நடிகர் தனுஷ் நடித்த பாடலை முணுமுணுப்பது போன்ற செயல்களில், இந்த ரசாயன மாற்றங்கள் அனைத்தும் ஒரு மில்லி செகண்டுக்குள் நம் நரம்புகளுக்குள் நடந்து ஒரு நியூரோ சாகசத்தையே நமது மூளையில் தினம்தினம் செய்து கொண்டிருக்கிறது.
என்ன வியப்பாக இருக்கிறதா?
அதாவது, இந்த நியூரோ நெட்வொர்க், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல் உடலுக்குள் செயல்படுகிறது. டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் அதிகமாக மெசேஜ் போனால், உடனே தடுத்து நிறுத்துவது தானே மிக முக்கிய வேலை.
அதாவது, ஐம்புலன்கள் எனப்படும் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், நுகர்தல் இவற்றில் ஏதாவதொன்று அதிகமாக செயல்பட்டாலும் அதை தடை செய்து நிறுத்துவது மூளையில் இருக்கும் தாலமஸ்ஸின் (thalamus) வேலையாகும்.
இன்னும் இதை எளிமையாய் சொல்ல வேண்டுமெனில், நாம் ஆட வேண்டுமென்று முடிவெடுத்தால், உடனே ஆடுவோம். காலை மடக்க வேண்டுமென்றால் உடனே மடக்கி உட்காருவோம்.
இந்த செயல்கள் தாண்டி, மூளைக்குச் செல்லாமலே உடனே செயல்படுத்தக்கூடிய சில துரித காரியங்களான தும்மல், இருமல், ஷாக் அடித்தால் உதறுதல், சூடான பாத்திரத்தை தொட்டால் விரல்களை உதறுவது போன்ற செயல்கள் மூளைக்குச் செல்லும் முன் நடந்துவிடும் துரித செயல்கள். நமது உடலில் இயங்கும் சில விஷயங்களுக்கும், உணர்வுகளுக்கும் மூளை இது போன்ற ஒத்துழைப்பை நமக்கு கொடுக்கிறது.
இன்றைய தகவல் நுட்ப வளர்ச்சியில் முன்பைவிட அதிகமாகப் படிக்கிறோம். இதில் மூளை பாதிப்படைகிறதா எனவும் சிலர் கேட்கின்றனர். மூளை என்பது சுரங்கம் மாதிரி. அள்ள அள்ளக் குறையாதது. நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் போது, மூளையின் எடை கொஞ்சமாகக் கூடுகிறது.
அப்போது நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்களை கட்டுப்படுத்தும் என்சைம் அளவும் அதிகமாகிறது. கற்பதும், அனுபவ அறிவை வளர்ப்பதும் மூளையில் சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. இத்தனை மாறுதல்கள் நமது மூளையில் ஏற்படுகிற போது, அறுநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான உபாதைகளும் மூளையில் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உபாதைகளால் நம்முடைய பெர்சனாலிட்டியில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்ற கேள்வியும் உடனே தோன்றுகிறது.நவீன சைக்காலஜியின் பீஷ்மர் எனப்படும் சிக்மண்ட் பிராய்ட் என்னும் ஆஸ்திரிய நாட்டு மனநல மருத்துவர் கூற்றுப்படி, குழந்தைப் பருவத்திலிருந்து நாம் ஐந்து கட்டங்களைக் கடக்கின்றோம்.
இதில்தான் நம்முடைய பெர்சனாலிட்டி உருவாகுகிறது. இதில் நம் மூளையில், தடுக்கும் செல்கள், அனுமதிக்கும் செல்கள் என இரண்டு வகை உருவாகுகின்றது. தடுக்கும் செல்கள் அதிகமுள்ள நபர்கள் சாதுக்களாகவும், அனுமதிக்கும் செல்கள் அதிகமுள்ள நபர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் இவர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மனோதத்துவ நிபுணர்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் பிரபலமானதே 16PF (Sixteen Personality Factors) டெஸ்ட் என்பது.
மனதின் இருப்பிடம் எதுவென்று யோசிக்கும் போது, ‘நான்’ என்பதைப் பற்றி பேசலாம். ஆனால், இந்த ‘நான்’ என்கிற தன்னுணர்வைத் தேடி பல ஆய்வுகள் நடந்து வருகிறது. நான் என்பது எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் சிந்தனையில் இருந்து என்று பதில் வரும்.
‘நான்’ என்கிற தன் உணர்வு மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் (pineal gland) இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தற்போது reticular formation என்ற மூளையின் உள்ளே உள்ள அடித்தண்டில் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்த ரெடிகுலர் பார்மேஷன் இல்லையெனில் நாம் தூங்கி விடுவோம் அல்லது கோமாவில் படுத்து விடுவோம் எனவும் தெரிவிக்கிறார்கள்.
நியூரோ சைக்காலஜியில் மூளைக்குள் 46 ஜில்லாக்கள் இருப்பதாக பிராட்மன் கூறுகிறார். உதாரணத்திற்கு, மூளையில் 17 வது பகுதி கண் பார்வையைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சேதம் ஏற்படும்போது சிந்தனைத் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனில் எது பழுதடைகிறது என்பது அந்த ஜில்லாவைப் பொறுத்தது.
இதில் செரிபரல் கார்டெக்ஸ் (cerebral cortex) பழுதுபட்டால் அக்னோஸியா(agnosia) ஏற்படும். அக்னோஸியா என்பது தெரிந்த பொருட்களைத் தொட்டுப் பார்த்தும் அடையாளப்படுத்த முடியாத நிலை. ஆனால், கார்டர் டெய்லர் என்பவர் நான் என்கிற நமது சிந்தனை எட்டு வகையான சமாச்சாரங்களில் இருந்து விரிவடைகிறது என்கிறார்.
1. ஒரு பிரச்னையை உணர்வது. 2. அதற்குப் பழக்கப்பட்டபடி உடனே செயல்படாமல் இருப்பது. 3. என்ன தேவை, என்ன செய்ய வேண்டுமென்று அலசுவது. 4. மாற்று சாத்தியக்கூறுகளை ஆராய்வது. 5. ஒரு திட்டம் தயாரிப்பது. 6. அதை செயல்படுத்த உண்டான காரியங்களைத் தேர்ந்தெடுப்பது. 7. விளைவுகளை சமன் செய்து சீர்தூக்குவது. 8. தீர்மானித்த காரியத்தை எதிர்கால உபயோகத்துக்காக ஞாபகத்தில் வைத்துக் கொள்வது.
இப்படியாக ‘நான்’ என்பவனை எட்டு வகையான விஷயங்களிலிருந்தே நாம் வெளிப்படுத்துகிறோம் என்கிறார் இவர்.இப்படியாகத்தான் சைக்காலஜி மற்றும் நியூரோ சைக்காலஜியை சுஜாதா எழுதிய தலைமைச் செயலகம் நமக்கு விவரிக்கிறது. அடுத்தக் கட்டுரையில் நியூரோ சைக்காலஜி குறித்து இன்னும் விரிவாகப் பேச இருக்கிறேன்.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
|