பழக்க வழக்கங்கள் தரும் நோய்கள்...



தீர்வு தரும் இயன்முறை மருத்துவம்!

‘நம் தினசரி பழக்க வழக்கங்கள் அனைத்தும் சரியானவைதானா? அதில் எந்தப் பிழையும் இல்லையா?’ என்றால் அது உண்மை இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் பழக்க வழக்கங்களில்  நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நாம் சில தவறுகளை செய்வோம். அதேபோல நமக்கு கிடைக்கும் செய்திகளை வைத்து நாம் புதுப்புது பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வோம். அது தவறாகவும் இருக்கலாம். 
அதேபோல முன்னரே நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் இருந்த நல்ல விஷயங்களை தவறு என நினைத்து ஒதுக்கி இருப்போம். ஆனால், சில பழக்க வழக்கங்களினால் நோய்கள் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். இதனை தெரிந்து கொண்டால் நாம் முக்கால்வாசி நோய்களை தடுத்திட முடியும்.

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான நோய்கள் ‘நான் கம்யூனிக்கபில் டிசிஸ்’ (Non-Communicable Disease) என்று மருத்துவத்தில் சொல்வார்கள். அதாவது, தொற்று இல்லாத நோய்கள். இதில் பெரும் பங்கு வகிக்கும் நோய்களின் காரணமாக இருப்பது நமது பழக்க வழக்கம்தான். எனவே, நாம் சரி என நினைத்து அல்லது தவறு எனத் தெரிந்து செய்யும் சில பழக்கங்களையும், அதனால் வரும் நோய்களையும் தெரிந்து கொள்ளலாம். இதை எப்படி தடுப்பது? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன?
 
பழக்க வழக்கங்கள்...

* ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு (தின்பண்டங்கள்) உண்ணும் பழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டிருப்பது.

* நவீன ஒப்பனைப் பொருட்களில் உள்ள ஒரு சில ரசாயனங்கள் கேடு விளைவிக்கக்கூடியவை எனத் தெரியாமல் தினசரி உபயோகிப்பது.

* உடலுக்கு, பாத்திரங்களுக்கு, துணிகளுக்கு என பயன்படுத்தும் அனைத்து விதமான சோப்புகளில் உள்ள சில ரசாயனங்கள் பாதிப்பினை ஏற்படுத்துவது.

* நாம் கடைகளில் வாங்கும் கருப்பு மை அச்சிட்ட ரசீதுகளில் (Bills) உள்ள ரசாயனங்கள் பெரிய ஆபத்தை உண்டாக்குவது என்பதை உணராமல் இருப்பது.

* மதுபானம் அருந்தவில்லை என்றால் அது ஒரு தவறு என்பது போல நம் நண்பர்கள் நினைப்பதால் நாம் அவர்களின் விருப்பத்திற்காக மதுபானம் அருந்தி இதுவே பழக்கமாக மாறி வாரத்திற்கு ஒரு முறையாவது மதுபானம் அருந்தும் நபர்களும் இருக்கிறார்கள்.

* இரவு உணவு உண்பது என்பது பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இரவு பத்து மணி முதல் காலை நான்கு மணி வரை கூட கடைகள் திறந்திருக்கின்றன. நாமும் உண்கிறோம்.

* ஒரு திருமணத்திற்கு சென்றால் தேவையான உணவுகளையோ அல்லது அளவான உணவுகளையோ சாப்பிட மறுக்கிறோம். நமக்குப் பிடித்திருக்கிறது அல்லது அந்த நேரம் உணவின் மீது ஆர்வம் அதிகம் ஆவதால் நாம் நிறைய உணவுகளை கட்டுப்பாடில்லாமல் உண்கிறோம்.

* ஒரு நாளைக்கு குறைந்தது மூன்றில் இருந்து ஆறு முறை தேநீர் பருகும் நபர்களும் இருக்கின்றார்கள். ஒவ்வொரு முறை அருந்தும் போதும் அதனை நிறைய அளவில் எடுத்துக் கொள்வதும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

* தினசரி பல காலங்களாக செய்து வந்த சாதாரண விஷயங்களுக்குக் கூட எந்திரங்களை எதிர்பார்க்கிறோம். உதாரணமாக நாம் வீட்டை கையால் பெருக்குவதற்கு பதிலாக ரோபோட்டிக் சாதனங்களை பயன்படுத்துகிறோம்.

* நமக்கு நடைப்பயிற்சியின் பயன்கள் தெரிந்தும் குறைந்தது வாரத்திற்கு நான்கு நாட்கள் கூட நடக்க மறுக்கிறோம். அல்லது கடமைக்கென மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்குள்ளாகவே நடக்க விரும்புகிறோம்.

* ஒரு சிலர் அதிக நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து உடற்பயிற்சிகள் செய்தால் அதில் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று நினைத்து தங்களது ஒரு நாளின் பெரும் பகுதியை உடற்
பயிற்சிக்கூடத்தில் கழிக்கிறார்கள்.

* விரத நேரங்களில் இனிப்பு வகைகளை (பழங்கள், பால், பழச்சாறுகள்) உண்பது.

* ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து இரவு மட்டும் உணவு உண்பது.

* பலருக்கும் இரவுத் தூக்கம் என்பது வெகுவாக குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு தொலைபேசி என்பது ஒரு முழு முதல் காரணமாக சொல்லலாம். இப்போது இருக்கும் இளைஞர்கள் விடிகாலையில்தான் தூங்கச் செல்கிறார்கள்.

* நாம் சிறு வயதில் இருக்கும் போது நம் பெற்றோர் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என சோறினை அதிகமாகக் கொடுப்பார்கள். ஆனால், காய்கறிகளை குறைவாக உட்கொள்வோம். இதே பழக்கம்தான் இன்று வரை நாம் பின்பற்றுகிறோம்.

* நாம் பயன்படுத்தும் கரண்டிகளிலேயே வித்தியாசங்கள் இருக்கிறது. நாம் காய்கறிக்காக பயன்படுத்துவது சிறிதாகவும், சாப்பாடு மற்றும் குழம்பிற்காக  பயன்
படுத்தும் கரண்டிகள் பெரிதாகவும் இருக்கிறது.

* ஏதேனும் ஒரு பொழுதுபோக்கிலோ அல்லது நம் பாரம்பரியம் சார்ந்த எதிலும் இயங்காமல், எதிலும் ஒரு தொடர் பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ளாமல் பணி, வீடு, கைப்பேசி என இருப்பது ஒரு கட்டத்தில் வெறுப்பை உருவாக்குகிறது.

* நெய், தேங்காய், பருப்பு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால் அதனை தீமை என தவிர்ப்பது.

* மாலை நேரங்களில் தேநீர் உடன் பிஸ்கெட், பன், பிரெட் என இனிப்பான உணவுகளை உட்கொள்வது.

* சிறிது நேரம் வெயிலில் வந்தாலே சன் ஸ்கிரீன் (Sun Screen) போட்டுக் கொள்வது அவசியம் எனப் பலரும் நினைக்கிறார்கள்.

* தரையில் அமர்வதை ஒரு பழக்கமாகவே இன்று யாரும் வைத்திருப்பதில்லை. உணவு அருந்த மேசை, உட்கார சோபா, படுப்பதற்கு கட்டில் என எப்பொழுதும் நாம் ஏதேனும் ஒரு தளவாடங்களை (Furnitures) உபயோகிக்கிறோம்.

* பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் அல்லது வேறு ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் நபர்கள் தங்களுக்கான போதுமான ஊட்டச்சத்து மாத்திரைகளையும் மருந்துகளையும் எடுப்பது தவறு என எடுக்கத் தயங்குகிறார்கள்.

* மாதவிடாய் நேரத்தில் சோடா அருந்துவது, காரசார உணவினை அருந்துவது.

* தண்ணீரை தேவையான அளவிற்கு அருந்துவதில்லை. ஒரு சிலரோ வெளி இடங்களில் இருந்தால் காலை முதல் இரவு வரை தண்ணீர் அருந்தாமல் இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்ற பின்தான் அருந்துவார்கள்.

ஏற்படக்கூடிய நோய்கள்...

* முறையற்ற மாதவிடாய்.

* கர்ப்பம் தரிக்க தாமதமாவது.

* நாளமில்லா சுரப்பிகளில்(Endocrine glands) ஏற்படும் சிக்கல்கள்.

* ஹார்மோன் குறைபாடுகள்.

* இரண்டாவது குழந்தை கருத்தரிக்க தாமதமாவது.

* கொழுப்பேறிய கல்லீரல் (Fatty Liver), பி.சி.ஓ.டி (PCOD), இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin Resistance), இதய அடைப்பு, இதயம் பலவீனம் ஆவது, சர்க்கரை நோய், பக்கவாதம், தினமும் அயற்சியாகக் காணப்படுவது, நம் முகத்திலும் உடம்பிலும் எளிதாக வயோதிகம் தெரிவது, உடல் பருமன், தன்னிறைவு இல்லாத உணர்வு என உடல் மற்றும் மன அளவில் நீண்ட பட்டியல் இடும் அளவில் பாதிப்புகள் ஏற்படும்.

தடுக்கும் வழிகள்...

* நாம் சரி என நினைத்து ஆரம்பம் முதல் சில விஷயங்களை செய்வோம். ஆனால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தவறானதாக இருக்கும். அதனை உடனே தவிர்க்க வேண்டும்.

* அதேபோல நாம் பல பழக்க வழக்கங்களை தவிர்த்திருப்போம். ஆனால், அதில் அர்த்தம் இருக்கும். அதனை உடனே தொடங்க வேண்டும்.

* வாழ்வியல் மற்றும் உணவு முறைகளில் மாற்றங்கள்.

* மனிதர்களுடன் பேசுவது.

* நம்மைச் சுற்றி வணிகம் சார்ந்த உலகம்தான் இயங்குகிறது. அதில் தினமும் புதுப்புது பொருட்களை காண்பிப்பார்கள். அதையெல்லாம் நாம் உபயோகிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதற்கு மயங்கி நிறைய விஷயங்களை செய்கிறோம். அதனை தவிர்க்க வேண்டும். சில விஷயங்களில் நாம் பழமைவாதியாக இருப்பதில் தவறில்லை.

இயன்முறை மருத்துவரின் பங்கு...

உடற்பயிற்சியினை முழுமையாக முற்றிலுமாக தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு இயன்முறை மருத்துவரின் தேவை என்பது கட்டாயம். நாம் செய்யும் உடற்பயிற்சிகளில் தசை வலிமை பயிற்சி (Strengthening Exercises), தசை தளர்வு பயிற்சி (Stretching Exercises), தாங்கும் ஆற்றல் பயிற்சி (Cardiac Endurance Exercises) எனப் பல வகைகள் உண்டு.இதில் எது நமக்குத் தேவைப்படுகிறது, எது நம்மால் செய்ய முடியும், எவ்வளவு எண்ணிக்கையில் செய்ய வேண்டும் என நம் தசைகளை பரிசோதித்து முடிவு செய்து இயன்முறை மருத்துவர் பரிந்துரை செய்வார்கள்.

 பழக்க வழக்கங்களில் திருத்தம்...

‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்று சொல்வார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை நாம் தினமும் நடைமுறைப்படுத்தி பழகப் பழக அந்த விஷயம் நம் மூளையில் ஆழமாகப் பதிந்து அதற்கான தேர்ச்சியை பெறுவோம். இதுவே நாம் ஒரு நெறியான பழக்க வழக்கத்தை மேற்கொள்ளவில்லை எனில், அது எதிர்காலத்தில் நம்முடைய பழக்க வழக்கங்களை பெரிதும் பாதித்து, நம்மை நோய்க்குள் ஆழ்த்தும்.

உதாரணமாக, பல பிரபலங்களும், மக்களும் இப்போது நாற்பது வயதிலேயே இறப்பதை பார்க்கிறோம். இதன் காரணம், இருபது வயதிற்கு மேலாவது கட்டாயம் உடல் நலனை பாதுகாக்க பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதே. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்று சொல்வார்கள். அதன்படி நம் பிள்ளைகளுக்குத் தேவையான பழக்க வழக்கங்களை மட்டுமே கற்றுக்கொடுப்போம்.

மொத்தத்தில் கொரோனா, காலரா போன்ற தொற்று வியாதிகளை  நம்மால் வராமல் தடுக்க முடியாது. அதனை ஒரு கூட்டு முயற்சியாக மட்டுமே செய்ய முடியும். ஆனால், மேலே சொன்ன நோய்கள் அனைத்தும் ‘நாமே உருவாக்கிய நோய்கள்’ (Self Made Diseases) என்பதால் அதனை நாம் முற்றிலும் தடுக்க முடியும். அப்படியே வந்துவிட்டாலும், அதிலிருந்து எளிதில் மீள முடியும். உடற்பயிற்சிகளை செய்வதாலும், வாழ்வியல் மாற்றங்களை, பழக்க வழக்கங்களை திருத்திக் கொள்வதாலும் நோய்கள் இல்லாமல் வாழ முடியும்.

கோமதி இசைக்கர் இயன்முறை  மருத்துவர்