ஃபேஷன் உலகம் என்னை விடாமல் துரத்தியது!
பெண்களை உற்சாகமாக வைக்க ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொருந்தும். சின்னக் குழந்தைகள் புத்தாடை அணிந்தால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தன் புத்தாடையை காண்பித்து குதூகலிப்பார்கள். பெரியவர்களும் கண்ணாடி முன் நின்று தங்களை ரசிப்பார்கள். ஜென் ஜீ தலைமுறையினர் செல்ஃபி எடுத்து தங்களின் சந்தோஷத்தை பகிர்வார்கள்.
 ஆடைகள் பொறுத்தவரை திருமணம், பிறந்தநாள், வேலைக்குச் செல்லும் போது என அந்தந்த இடத்திற்கு ஏற்ப மாறுபடும். அதுவும் பண்டிகை காலம் வந்துவிட்டால் போதும்... அன்றைய டிரெண்டிங் உடைகள் என்னவென்று தேடிப் போய் வாங்குவதில் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வருடா வருடம் பண்டிகை வரும் போது டிசைன்களின் புதுமையை கூட்டிதான் ஒவ்வொரு ஜவுளி கடைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். அதில் திருமுல்லைவாயலில் ‘ஷீல்ஸ் ஸ்டைல்ஸ்’ துணிக்கடையில் தீபாவளி டிரெண்டிங் ஆடை விற்பனையில் கலக்கி வரும் சகாய ஷீலாவை சந்தித்த போது…  ‘‘எனக்கு சொந்த ஊர் காரைக்குடி என்றாலும் பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னைதான். பயோடெக்னாலஜியில் இளங்கலை மற்றும் முதுகலையில் கோல்டு மெடலிஸ்ட். அதன் பிறகு பேராசிரியராக வேலை பார்த்தேன். திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் என்னால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை.
அப்போது கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் என்னுடைய வேலையில் பெரிய இடைவேளை ஏற்பட்டது. அதனால் என் கணவர் செய்து வந்த பைக் டீலர் பிசினஸில் 13 வருடம் நானும் ஒரு பார்ட்னராக இருந்தேன். என்னதான் நான் பிசினஸில் ஈடுபட்டாலும் எனக்கு என்று தனிப்பட்ட தொழில் செய்ய விரும்பினேன். அப்படித்தான் ஃபேஷன் துறையை தேர்வு செய்தேன்’’ என்றவருக்கு சிறு வயது முதலே ஃபேஷன் துறை மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்ததாக கூறினார். ‘‘எனக்கு எப்போதும் அன்றுள்ள டிரெண்டிங் உடைகளை அணிய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதனால் ஒவ்வொரு உடைகளையும் தேடிப் பார்த்து வாங்குவேன். நான் அணியும் ஆடைகள் வித்தியாசமாக இருப்பதால் பார்ப்பவர்கள் அது குறித்து விசாரிப்பார்கள். அப்போதுதான் இதையே ஏன் ஒரு பிசினஸாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. முதலில் ஆன்லைனில்தான் உடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான், ‘ஷீல்ஸ் ஸ்டைல்ஸ்’ துணிக் கடையைத் திறந்தேன். இங்கு டீனேஜ் பெண்கள் முதல் அனைத்து வயதினருக்கான உடைகள் உள்ளன. ஜெய்ப்பூர், கலம்காரி என அனைத்து காட்டன் உடைகள், செமி காஞ்சி, ஜக்கார்டு சேலைகளும் இங்குள்ளது.
கல்லூரிப் பெண்கள் விரும்பும் ஹேண்ட் எம்ப்ராய்டரி உடைகளும் இங்கு கிடைக்கும். அதில் பெரும்பாலும் நான் விரும்பும் ஆடைகளாகத்தான் இருக்கும். என்னுடைய தேர்வு மக்களுக்கும் பிடித்திருக்கு என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. மேலும், சில உடைகளை நானே டிசைன் செய்து அதே போல் வடிவமைத்தும் வாங்குவேன். மக்கள் அந்த உடைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்த போது அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. என்னுடைய உடைகள் பட்ஜெட் பிரண்ட்லிதான். அதனால்தான் பலரும் இங்கு வருகிறார்கள். கல்லூரிப் பெண்கள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் வரை அனைவருக்குமான குர்திக்கள் மற்றும் புடவைகள் ரூ.400 முதல் ரூ.5000 வரை இங்குள்ளது. டிரெண்டிங்கான ஃபேஷன் உடைகளை குறைந்த விலையில் கொடுப்பதால் பெண்களும் விரும்பி வருகிறார்கள். கலெக் ஷன்ஸ் பொறுத்தவரை பல இடங்களுக்கு சென்று தேடிப் பிடித்து வாங்கி வருகிறேன்.
காரணம், என் உடைகளை அணியும் போது வாடிக்கையாளர்கள் அழகாக தெரிய வேண்டும். கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கி இருந்தாலும், ஃபேஷன் உலகம் என்னை விடாமல் துரத்திக் கொண்டு இருந்தது. என் செயல்களும் அதை சுற்றியே இருந்தன. என் கடைக்கு வரும் வாடிக்கையாளரின் முகத்தில் என் உடையை அணியும் போது உற்சாகத்தை பார்ப்பேன். அவ்வளவு மனநிறைவாக இருக்கும்.
இன்று பெண்கள் பல கனவுகளுடன் களம் இறங்குகிறார்கள். அதை நோக்கி பயணப்பட வேண்டும். குடும்பம், பிள்ளைகள், தொழில் என அனைத்தையும் பெண்களால் மட்டுமே ஒன்றாக சமாளிக்க முடியும். என் ஷோரூமை மேலும் விரிவுப்படுத்தும் எண்ணம் உள்ளது. அந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கிறேன்’’ என்றார் சகாய ஷீலா.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: கணேஷ்
|