மெனோபாஸிற்கு எளிய தீர்வு, ஆரோக்கிய வாழ்க்கை முறை!
மெனோபாஸ், பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான செயல்முறை. இதில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்றுவிடும். கருப்பைகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திக் கொள்வதால் இது நிகழ்கிறது. 45 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இது இயல்பாக நிகழக்கூடியது. ஆனால், இன்று பல பெண்களுக்கு அது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இயற்கையாக நிகழக்கூடிய மெனோபாஸினை பெண்கள் எவ்வாறு கையாளலாம் என்று ஆலோசனை அளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் சுபஸ்ரீ.
‘‘பெண்களின் வாழ்நாளில் 45 வயதிற்கு மேல் கருப்பைகளின் செயல்பாடு குறைந்து, இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்தி முற்றிலும் தடைபட்டுவிடும். அதைத்தான் மெனோபாஸ் என்று குறிப்பிடுவோம். பொதுவாக இந்தத் தருணத்தில் பெண்கள் ஹாட் பிளாஷஸ், தூக்கமின்மை, பிறப்புறுப்பில் வறட்சி காரணமாக ஏற்படும் அரிப்பு, பதட்டம், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகளை சந்திப்பார்கள்.
இந்த நேரத்தில் அதிகப்படியாக வியர்வை வெளியாகும், எலும்புகள் பலவீனமாகும். அதனால் இடுப்பு, கால்முட்டி, கைமுட்டிகளில் வலி ஏற்படும். தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைந்துபோகும். இவை யாவும் மெனோபாஸின் போது ஏற்படும் அறிகுறிகள். இதனை நாம் எளிதாக கடந்துவிடலாம். ஆனால், அதனை சமாளிக்க முடியாமல் பல பெண்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். மெனோபாஸ் பெண்களுக்கு இன்று நிகழும் நிகழ்வு கிடையாது. பாட்டி, அம்மா காலத்தில் இருந்தே இந்த நிலையினை ஒவ்வொரு பெண்ணும் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சந்திக்காத மனஉளைச்சலை இன்றைய தலைமுறையினர் ஏன் சந்திக்கிறார்கள். நம் அம்மா காலத்தில் அவர்களின் உலகம் குடும்பமாக இருந்தது. பிள்ளைகள், கணவருக்கு என்ன வேண்டும் என்பதிலேயே தங்களின் முழு கவனத்தை செலுத்தி வந்தார்கள்.
ஆனால், இன்றைய பெண்களின் நிலை வேறு. வேலைக்குச் செல்கிறார்கள், வீட்டையும் பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் தனக்கென்று தனிப்பட்ட நேரம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும், தங்களுக்குள் ஏற்படும் சின்ன மாற்றத்திற்கும் ஏன் எதற்கு என்று சிந்திக்கிறார்கள். அதைப் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். அதுவே அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது இயற்கையாக பெண்களுக்கு நிகழக்கூடியது. அதை எளிதாக கடந்துவிட முடியும்’’ என்றவர், மெனோபாஸ் குறித்து விவரித்தார்.
‘‘ஒரு வருடம் முழுக்க மாதவிடாய் வரவில்லை என்றால் அவர்கள் மெனோபாஸ் நிலையில் உள்ளார்கள் என்பது அர்த்தம். அதன் பிறகு மகப்பேறு நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
சிலருக்கு மாதவிடாய் நிற்கும் தருவாயில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஏற்படும். அதுவும் நார்மல் தான். அவர்கள் மெனோபாஸின் ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள். ஈஸ்ட்ரோஜென் (estrogen) மற்றும் புரோஜெஸ்ட்ரோன் (progesterone) ஹார்மோனின் அளவு குறைந்தால் மெனோபாஸ் ஏற்படும்.
கருமுட்டையினை நீக்கினாலும் மெனோபாஸ் ஏற்படும். ஒரு சிலருக்கு புற்றுநோய்க்கான கீமோ மற்றும் ரேடியேஷன் சிகிச்சை காரணமாகவும் ஏற்படும். கருத்தரிப்பு மாத்திரை எடுப்பதால் கருமுட்டைகளின் அளவு குறையும். அந்த சமயத்தில் சிலருக்கு 40 வயதிற்கு முன்பே மெனோபாஸ் ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் கருமுட்டையை நீக்கிவிட்டால் தங்களுக்கு மாதவிடாய் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு கருமுட்டை என்பது அவர்களின் ஆரோக்கியத்தின் பாதுகாப்பு கேடயம்.
அதனால் தான் ஆண்களைவிட பெண்கள் இதய பிரச்னையால் அதிகளவில் பாதிப்படையமாட்டார்கள். கருமுட்டை நீக்குவதால், ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும். இதயம் சம்பந்தமான பிரச்னை அதிகரிக்கும். எலும்புகள் வலுவிழக்கும். சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும்.
அடுத்து முக்கியமாக சிறுநீர் கசிவு பிரச்னையை சந்திப்பார்கள். தும்மினாலும், இருமினாலும் சிறுநீர் கசியும். அவர்களால் தங்களின் சிறுநீர்ப்பையினை கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள முடியாது. அடுத்து முக்கியமானது தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறையும். உடல் எடை அதிகரிக்கும். ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு திடீரென்று மாதவிடாய் ஏற்பட்டால் அது நார்மலான விஷயமில்லை.
அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு பாலிப்ஸ் அல்லது ஃபைப்ராய்டு பிரச்னைகள் இருக்கும். அதனாலும் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்’’ என்றவர், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டிற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விவரித்தார்.
‘‘பெண்களின் உடலில் FSH மற்றும் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன்கள் இருக்கும். மெனோபாஸ் காலத்தில் FSH அதிகமாகும். ஈஸ்ட்ரோஜென் குறையும். இதனை சரி செய்ய ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் உள்ளன. அதன் மூலம் ஈஸ்ட்ரோஜனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், அதைத் தொடர்ந்து எடுத்து வந்தால் சிலருக்கு கல்லீரல் பாதிப்படையலாம். அல்லது பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாத்திரைகளை மருத்துவரிடம் முழுமையாக பரிசோதனை செய்த பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்கள், இதயம் மற்றும் வலிப்பு பிரச்னை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ள கூடாது.
மாத்திரைகள், ஊசிகள் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை கடைபிடிப்பது அவசியம். அதன் மூலம் மெனோபாஸினால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது. பெல்விக் பயிற்சிகள் சிறுநீர் கசிவினை கட்டுப்படுத்த உதவும்.
அதாவது, ஆசன வாய்ப்பகுதியினை இழுத்துப் பிடித்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும். நாளடைவில் சிறுநீர் கசிவு குறையும். கால்சியம் சத்து நிறைந்த உணவினை சாப்பிடலாம். கால்சியம் மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனையுடன் எடுக்கலாம். தினசரி உடற்பயிற்சி ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்’’ என்று ஆலோசனை வழங்கினார் மகப்பேறு நிபுணர் டாக்டர் சுப.
நிஷா
|