பெண்களால் சாதிக்கவும் முடியும்... ஜெயிக்கவும் முடியும்!
‘‘உலக நுகர்வோர் சந்தையில் என்னுடைய ரோஜா சோப் பெரிய பிராண்டாக மாறி விற்பனையாகும் காலம் வரும்” என்ற லதாவின் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்கும் போது ஒவ்வொரு பெண்களுக்கும் நம்பிக்கையை விதைக்கிறது என்றால் மிகையல்ல..! திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகிலுள்ள கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. ‘ரோஜா மகளிர் சுய உதவிக்குழு’ என்ற பெயரில் இயற்கையான முறையில் பல்வேறு சோப், தைலம், ஹேர் ஆயில், சிறுதானிய சத்துமாவு போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ‘‘எங்களுடையது விவசாயக் குடும்பம். கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும்.  அதன் பிறகு ஆசிரியர் அல்லது வழக்கறிஞராக வேண்டும் என்று எனக்குள் நிறைய கனவு இருந்தது. ஆனால், எட்டாம் வகுப்புக்குப் பிறகு குடும்பச் சூழ்நிலையால் என்னால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. என் கனவுகளை மண்ணில் அப்படியே புதைத்துவிட்டேன். அதன் பிறகு திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை நகர்ந்தது. இருந்தாலும் எனக்கு சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. 2005ல் ஷேர் மார்க்கெட்டில் இறங்கினேன். ஐந்து வருடத்தில் 60 லட்சம் நஷ்டமானது. கடன் அதிகமானது.
அதிலிருந்து மீள நிலத்தை விற்றேன். அப்போது சென்னையில் என் பக்கத்து வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவர் கேரட், பீட்ரூட்டில் இருந்து சோப்பினை தயாரித்து காட்டினார். எனக்கு அதைப் பார்த்ததும் அதையே வேறு பொருட்கள் கொண்டு தயாரித்தால் என்ன என்று யோசனை ஏற்பட்டது.
குப்பைமேனி மற்றும் வேப்பிலை இலை கொண்டு இயற்கையான சோப்புகளை தயாரித்தேன். அதை என் வீட்டின் அருகில் உள்ள பெண்களிடம் கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொன்னேன். அவர்களுக்கு அந்த சோப் மிகவும் பிடித்திருந்தது. பல மருந்துகள் பயன்படுத்தியும் நீங்காத மங்கு இந்த சோப் போட்டதும் சரியானதாக கூறினார்கள். அப்போது இதையே சுய தொழிலாக செய்யலாம் என்று தோன்றியது.
ரோஜா சுய உதவிக் குழுவை அமைத்து, 12 பெண்களை இணைத்தேன். வீட்டில் நான் தயாரிக்கும் சோப்புகளை குழு பெண்களிடம் விற்பனை செய்தேன். குப்பைமேனி, வேப்பிலையுடன் ஓமவள்ளி இலை, கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சம்பழம், தேங்காய் எண்ணெய் கலந்து சோப் தயாரித்தேன்.
அதனைத் தொடர்ந்து ஆவாரம்பூ, மல்லிகைப்பூவையும் அரைத்து சோப்பில் சேர்த்தேன். வாசமாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒருவர் மாற்றி ஒருவர் என பக்கத்து ஊர்களை சேர்ந்த பெண்களும் என்னிடம் சோப் வாங்க ஆரம்பித்தார்கள். தமிழக அரசின் மகளிர் திட்டம் மூலமாக முறைப்படி சோப் மற்றும் சிறுதானிய சத்து மாவுகளை தயாரிப்பது குறித்து பயிற்சியினை மேற்கொண்டு FSSI சான்றிதழும் வாங்கினேன்’’ என்றவர், குப்பைமேனி இலை சோப், மூலிகை சோப், ஆவாரம்பூ வாசனை சோப், பப்பாளி சோப், கற்றாழை சோப் என்று ஐந்து வகை சோப்புகளை தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். ‘‘சோப்புகள் மட்டுமில்லாமல், சிறுதானியங்களில் சத்து மாவுகளும் தயார் செய்ய துவங்கினேன்.
இரண்டு வருடங்கள் சோப் மற்றும் சத்துமாவு பிசினசில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். அதை தயாரிக்க என் குழு உறுப்பினர்களையே பயன்படுத்திக் கொண்டேன். அவர்களுக்கும் இதன் மூலம் ஒரு வருமானம் கிடைப்பதால், எனக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.
‘கோடை கொண்டாட்டம்’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் ஸ்டால் போடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. முதலில் இது போன்ற பொருட்களை சென்னை நகரப் பெண்கள் வாங்க முன்வருவார்களா என்ற தயக்கம் இருந்தது. அதனால், ஒவ்வொரு ரக சோப்பிலும் 50 சோப்புகளை தயாரித்து எடுத்துக் கொண்டு போனேன்.
அதே போல் கஞ்சியினையும் நாங்க அங்கு பவுடராக இல்லாமல் அதை கஞ்சியாக செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க கொடுத்தோம். கஞ்சியை குடிக்க வந்தவர்கள் சோப் குறித்து விசாரித்து வாங்கி சென்றார்கள். இரண்டே நாட்களில் கொண்டு போன அனைத்து சோப்புகளும் விற்பனையாயின. அதனால் மறுபடியும் 500 சோப்புகளை தயாரித்து ரயிலில் அனுப்ப சொன்னேன்.
கண்காட்சி நடந்த 18 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சோப்புகள் விற்பனையாயின. மேலும், கஞ்சியினை ருசித்தவர்கள் அதை வாங்கியும் சென்றார்கள். அந்தக் கண்காட்சியில் அதிகப் பொருட்களை விற்பனை செய்த நிறுவனம் என்று எங்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகுதான் ‘நம்மால் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. கண்காட்சிக்கு வந்தவர்கள், தொடர்ந்து சோப் மற்றும் கஞ்சி மாவு வேண்டும் என்று ஆர்டரும் கொடுத்தார்கள். அதில் ஒரு சிலர் முடி கொட்டாமல் இருக்கவும். பேன் பிரச்னைக்கும் ஷாம்புக்கள் மற்றும் வாஷிங்மெஷினில் பயன்படுத்தப்படும் லிக்விட் சோப்புகளையும் தயாரிக்க சொல்லி கேட்டுக் கொண்டார்கள்.
விற்பனை நன்றாக இருந்ததால், ஊருக்கு வந்தவுடன் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்ட ஷாம்புவினை பல ஆய்வுக்கு பிறகு குப்பைமேனி இலை, வேப்பிலை, கறிவேப்பிலை, கற்றாழை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்து இயற்கை முறையிலான ஷாம்புவினை தயாரித்தேன்.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் குப்பைமேனி இலையைக் கொண்டு ஷாம்பு தயாரித்தது எங்கள் நிறுவனம்தான். இதனை தலைக்கு மட்டுமில்லாமல் உடலிலும் தேய்த்துக் குளிக்கலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் ஷாம்புவை வாங்க ஆரம்பித்தார்கள்’’ என்றவர் 27 வகை மூலிகைகளை கொண்டு ஹேர் ஆயிலை தயாரித்துள்ளார். ‘‘ஹேர்ஆயில் பயன்படுத்தியவர்கள் நரை முடி குறைந்து புதிய முடி வளர்வதாக கூறினார்கள். அதனைத் தொடர்ந்து புதினா, உப்பு, பச்சைக் கற்பூரம், நல்லெண்ணெய் கலந்து மூட்டு வலி தைலம் தயாரித்தோம். அதற்கும் அமோக ஆதரவு கிடைத்தது. மேலும், என்னுடைய வாடிக்கையாளர்களை வாட்ஸப் குழுவில் இணைத்து அதன் மூலம் அவர்களுக்கு எங்களின் பொருட்கள் குறித்து அவ்வப்போது தகவல் அனுப்ப துவங்கினோம்.
என்னுடைய வாடிக்கையாளர்களே என்னிடம் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ரீடைலர்களாக மாறினார்கள். இதன் மூலம் மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். இப்படி வாடிக்கையாளர்கள் கேட்க கேட்க இட்லிப் பொடி, பருப்பு பொடி, நாட்டுச்சர்க்கரை எள்ளு உருண்டை, கம்பு உருண்டையும் தயாரித்தோம். மேலும், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய அரிசிகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி பாக்கெட் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
அரசு மகளிர் திட்டம் மூலமாக கல்லூரிகள், அரசு விழாக்களில் ஸ்டால்கள் அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எங்களின் உணவுப் பொருட்களின் சுவை நன்றாக இருப்பதால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் அரசு விழாக்களில் வழங்க கம்பு உருண்டைகளை எங்களிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு சென்னை, திருச்சி என தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்து வந்தோம். அப்போது காஷ்மீரில் நடைபெற்ற 15 நாள் விழாவில் தமிழ்நாடு முழுக்க மாவட்டத்திற்கு ஒரு சுய உதவிக்குழுவினை தேர்வு செய்தார்கள்.
அதில் எங்களுடைய குழுவும் ஒன்று. அதில் துபாயை சேர்ந்த ஒரு பெண், எங்களின் குப்பைமேனி சோப்பினை மொத்தமாக வாங்கிச் சென்றார். அதே போல் மும்பையில் இருந்து வந்தவர் அங்கு கடை அமைத்து, எங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தமிழகம் முழுதும், பலர் எங்களின் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்’’ என்றவர், முழுக்க முழுக்க இயற்கை மற்றும் ஹேண்ட்மேட் முறையில் பொருட்களை தயாரித்து வருகிறார்.
‘‘ரூபாய் ஐந்தாயிரம் முதலீடாக கொண்டுதான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன். பொருள் தரமாக இருந்தால் கண்டிப்பாக மக்களின் சப்போர்ட் கிடைக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்று சொல்ல வேண்டும். பிசினஸ் வளர்ந்து வருவதால், எங்க பஞ்சாயத்தில் உள்ள சுய உதவிப் பெண்கள் குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அடுத்து உலகம் முழுக்க எங்களின் ெபாருட்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
அதிகம் படிக்கவில்லையே, கிராமத்தில் வசிக்கிறோம். நம்மால் என்ன சாதிக்க முடியும் என்று பெண்கள் மனதளவில் முடங்கி விடாமல், நம்மாலும் முடியும் என்று ஒரு சிறு தொழிலை துவங்க முன்வரவேண்டும். பிரச்னைகள் இல்லாத தொழிலே கிடையாது. அதை எல்லாம் கடந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை மந்திரத்தை நினைவில் வைத்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் தொழிலில் சாதிக்க முடியும்’’ என்றார் லதா.
மதுரை ஆர்.கணேசன்
|