உலகை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை வெளிப்படுத்த கலை உதவுகிறது!



அகில் ஆனந்த்

‘‘எனக்கு பெயின்டிங் சின்ன வயசில் இருந்தே பிடிக்கும். இயற்கையில் நான் பார்க்கும் வடிவங்களை என்னுடைய ஓவியங்களில் பார்க்க ஆரம்பித்தேன். இயற்கையில் மட்டுமில்லாமல் என்னுடைய அன்றாட வாழ்க்கையிலும் நான் அந்த வடிவங்களை பார்த்தேன்’’ என்கிறார் அகில் ஆனந்த். 
பிரபல செஸ் பிளேயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அருணா தம்பதியினரின் மகனான அகில் ஆனந்த் Morphogenesis என்ற ஓவியக் கலை மூலம் அழகிய ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார். தான் வரைந்த ஓவியங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்து மனம் திறந்தார் அகில் ஆனந்த்.
‘‘என்னுடைய ஆர்ட் குரு டயானா சதீஷ். ஒன்பது வயதில் இருந்தே அவரிடம்தான் நான் பயிற்சி எடுத்து வருகிறேன். அவங்கதான் எனக்கு மதுபனி, வேர்லி, செரியல் ஓவியங்களை வரைய சொல்லிக் கொடுத்தாங்க. 
அதனால் என்னுடைய பெரும்பாலான ஓவியங்களில் மதுபனி, கோண்ட், செரியல், பிச்வாய், காளிகாட் மற்றும் வார்லி உள்ளிட்ட இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலை வடிவங்கள் சார்ந்திருக்கும். இந்த பாரம்பரிய நடைமுறைகளில் உள்ள நெறிமுறை மற்றும் செயல்முறைகளை அந்தந்த கலை சார்ந்த கலைஞர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொண்டேன். அவர்களிடம் கற்றுக் கொண்டதை என்னுடைய பார்வையில் வெளிப்படுத்தினேன். 

இயற்கையில் நான் பார்த்த வடிவங்கள், நான் பார்த்த கலைகள் மற்றும் ஜியாமென்டரி வடிவங்களில் உணர்வுகளை கண்டேன். இவை அனைத்தையும் மார்ஃபோஜெனிசெஸ் மூலம் வெளிப்படுத்தினேன். அதில் நிறைய ஓவியங்களை கொண்டு வந்தேன். 

மேலும், அழியும் தருவாயில் உள்ள மிருகங்களையும் என் ஓவியம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறேன். நான் வரைந்த இந்த ஓவியங்களை கண்காட்சியாக வைக்கலாம் என்று என் குரு சொன்னாங்க. 

இது என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சி. எதிர்கால திட்டம் குறித்து நிறைய ஐடியாக்கள் உள்ளன. அதனை ஒவ்வொன்றாக செய்ய இருக்கிறேன். அதில் குறிப்பாக அழியும் நிலையில் உள்ள இனங்களை என் ஓவியம் மூலம் உயிர் கொடுக்க விரும்புகிறேன்’’ என்றார் அகில் ஆனந்த்.

‘‘அகிலுக்கு சின்ன வயசில் இருந்தே ஓவியம் வரைவதில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. குழந்தைகள் வயதில் கையில் பென்சில் கொடுத்தால் தனக்கு தெரிந்ததை வரைவாங்க. அப்படித்தான் அகில் சிறு வயதில் தான் பார்ப்பதை எல்லாம் வரைவார்’’ என்று அகிலின் ஓவியப் பயணம் குறித்து பேசத் துவங்கினார் அவரின் அம்மா அருணா ஆனந்த். 

‘‘ஒருமுறை அகிலை விளையாட பார்க்கிற்கு அழைத்து சென்றோம். சிறிது நேரம்தான் விளையாடினார். பிறகு ஒரு குச்சியைக் கொண்டு மண்ணில் வரைய ஆரம்பித்தார். அப்போது சின்ன பையன் என்பதால் நாங்க முறையாக பயிற்சி எல்லாம் கொடுக்கல. காலப்போக்கில் பள்ளியில் படிக்கும் பாடங்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தார். 

அதன் பிறகுதான் அவருக்கு ஓவியம் மேல் உள்ள ஆர்வம் புரிந்தது. கோவிட் முன்புதான் டயானா அவர்களிடம் முறையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில்தான் கணக்கு சார்ந்த பேட்டர்ன்களை வரைய துவங்கினார். 

கோவிட் என்பதால், ஆன்லைன் மூலம் லோக்கல் ஆர்டிஸ்ட் பலரும் மதுபனி, வார்லி, பிச்வாய் போன்ற ஓவியக் கலைகளை தங்களின் கிராமத்தில் இருந்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாங்க. அந்த பயிற்சி இவருக்கு நிறைய அனுபவத்தை கொடுத்தது. 

இந்தியக் கலை வித்தியாசமானது. புடவையில் இந்த டிசைன்களை பார்க்கும் போது அழகாக இருக்கும். ஆனால், பார்க்க அழகாக இருக்கும் இந்தக் கலையினை உருவாக்குவது 
எளிதல்ல. அவங்க வரைவதை அகில் அப்படியே பார்த்து வரைவார். அவங்க கிராமத்தில் ஒரு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே பெரிய விஷயம். 

சில சமயம் ஷரிகேன் வெளிச்சத்தில்தான் சொல்லிக் கொடுப்பாங்க. அப்போது அகிலுக்கு புரிந்து கொள்ளக் கூடிய வயது இல்லை என்றாலும், அவர்களின் நிலையை உணர்ந்து கொண்டார்.கோவிட் காலத்திற்குப் பிறகு அகிலை நாங்க இந்தக் கலைஞர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

2022ல் கொல்கத்தாவில், ஒரு கிராமத்தில் காலிகாட் கலைஞர்கள் வசித்து வருவது தெரிய வந்தது. அங்கு அகிலை அழைத்து சென்றோம். அவர்களுடன் ஒருநாள் முழுதும் தங்கி இருந்து அவர்கள் ஓவியங்களை வரையும் முறை மற்றும் அதனை விற்பனை செய்வது குறித்து அனைத்தும் தெரிந்து கொண்டார். 

இங்கு நாம் ஓவியங்களை பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர்களுக்கு அதுதான் வாழ்வாதாரம். குடும்பத்தில் உள்ள அனைவரும் வரைவாங்க. தலைமுறை தலைமுறையாக அவர்கள் கலையினை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாங்க. 

அதன் பிறகு இந்தியன் ஆர்ட் குறித்து படித்தார். அப்போதுதான் அவரின் பயிற்சியாளர் ஏன் இவரின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்கக்கூடாதுன்னு கேட்டாங்க. காரணம், ஒரு ஓவியத்தை நாம் அப்படியே வரைவோம். ஆனால் அகில் அப்படி செய்ய மாட்டார். அந்த ஓவியத்தினை அவர் பார்க்கும் விதம் மற்றும் அதற்கான விளக்கம் வேறாக இருக்கும். அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்குன்னு டயானா சொன்னாங்க. அப்படித்தான் இந்தக் கண்காட்சி பயணம் ஆரம்பமானது.

ஒவ்வொரு ஓவியங்களையும் அவர் மிகவும் ஆர்வத்துடன் வரைய ஆரம்பித்தார். முழு ஆண்டு தேர்வு ஒரு பக்கம் இருந்தாலும், கண்காட்சிக்காக ஓவியங்கள் வரைய தனிப்பட்ட நேரத்தினை ஒதுக்கினார். ஒரு ஓவியத்தை  முடிக்கும் வரை அவரின் கவனம் வேறு வேலையில் ஈடுபடாது. 

தன் மனதில் தோன்றியதை உருவமாக வரைந்து முடித்தால்தான் அவருக்கு தூக்கமே வரும். பெற்றோராக நானும் ஆனந்த் அவர்களும் முழு சப்போர்ட்டா இருக்கிறோம். அவருக்குப் பிடித்ததை செய்ய நாங்க முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்’’ என்றவர் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் குறித்து விவரித்தார். 

‘‘ஸ்பின்க்ஸ், ட்யுரிங், டெரிபிக் டைகர், பிந்து போவைன், கணேஷா, மேத்தமெட்டிகல் மேட்சா, அனிமல் சூப்பர் ஹீரோஸ், அன்பைனரி, வித்ருவியன் விக்ரஹா என்ற தலைப்புகளில் அவர் ஓவியங்களை வரைந்திருந்தார். நிறைய டிராப்ட் செய்தார். அவர் ஓவியங்களை முழுமையாக வரைந்த பிறகு அதனை தலைப்புக்கு ஏற்ப பிரித்தோம். 

பொதுவாக ஒரு குழந்தை அழகான ஓவியங்களை வரைய விரும்புவாங்க. ஆனால், அகில் அப்படி கிடையாது. அவர் மனதில் என்ன யோசிக்கிறாரோ அதைத்தான் வரைவார். அங்கதான் மற்றவர்களிடம் இருந்து இவரின் ஓவியங்கள் வித்தியாசப்படுகிறது. 

இவர் தன் பயிற்சியாளரிடம் தான் சரியாக வரைகிறேனா என்று கேட்பார். அதே சமயம் தவறினை அவர்தான் திருத்துவார். மேலும், அவரின் ஓவியங்கள் வண்ணமயமாக இருக்கும். ஒரு ஓவியத்தில் நான்கு முதல் ஐந்து நிறங்களை பயன்படுத்தி இருப்பார். வண்ணங்களின் லேயர் மிக அழகாக இருக்கும். 

ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருப்பதை பார்க்கும் போதே நம்மால் உணர முடியும். எங்கு ஓவியக் கண்காட்சி நடந்தாலும் நாங்க அவரை அங்கு அழைத்து செல்வோம். அதைப் பார்த்து வரைவார். அவருக்கு பிள்ளையார் பிடித்த கடவுள் என்பதால், பிச்வாய், காலிகாட் ஸ்டைலில் வரைந்திருந்தார். மேலும், இந்தியக் கலை மேல் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதுதான் அவரின் தனித்துவம். குறிப்பாக சிவபாலன் ஓவியங்கள் இவருக்கு பிடித்தமானது. 

ஓவியங்கள் ஒரு பக்கம் என்றால் இவரின் செஸ் போர்டு சார்ந்த இன்ஸ்டாலேஷன்ஸ் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. செஸ்சில் குதிரை எவ்வாறு நகரும் என்று ஆனந்த் ஒரு வரைபடம் போட்டுக் கொடுத்தார். அதைப் பார்த்த போது ஒரு பேட்டர்ன் போலதான் இருந்தது. அதை அழகான இன்ஸ்டாலேஷனாக மாற்றி அமைத்திருந்தார். இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை.

 நாம் நினைக்காததை சிந்தித்து செயல்படுத்துவதுதான் அகிலின் ஸ்பெஷாலிட்டி. எதிர்காலத்தில் நிறைய திட்டம் வைத்திருக்கிறார். அழியும் நிலையில் உள்ள மிருகங்களை தன் ஓவியங்களில் உயிர் கொடுக்க வேண்டும். பிரையில் மொழியினை கற்றுக்கொள்ள வேண்டும். 

காரணம், அதுவும் ஒரு வகையான பேட்டர்ன் என்பதால் அதில் கலையை எவ்வாறு இணைக்கலாம் என்று யோசிக்கிறார். பெங்களூரில் ஒருமுறை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியங்களை தொட்டுப் பார்த்து உணர்வது போல் அமைத்திருந்தார்கள். 

அதை விட மேலாக வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறார். சஸ்டெயினபிலிட்டி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வமும் இருக்கு. தொழில் முறையில் வக்கீலாக வேண்டும் என்பது அவரின் விருப்பம். இப்படி நிறைய  எண்ணங்கள் உள்ளது. இப்போது அவர் சிறுவன் என்பதால், ஒரு வயதிற்குப் பிறகு இதுதான் என்னுடைய எதிர்காலம் என்ற பக்குவம் ஏற்படும். அதுவரை அவர் விரும்பியதை ெசய்யட்டுமே’’ என்றார் புன்னகையுடன் அருணா ஆனந்த். 

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்