தனித்துவமான டெரகோட்டா நகைகள்!



பண்டிகை  காலங்களில் ஆடை, ஆபரணங்களும், அலங்காரங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டிகை கொண்டாட்டத்தின் ஊடே, நமக்குப் பிடித்தமான உடைகளையும் அதற்கேற்றாற் போல நகைகளையும் அணிந்து அழகுப்படுத்திக் கொள்வோம். சேலை, சல்வார், இண்டோ-வெஸ்டர்ன், வெஸ்டர்ன் போன்ற எந்த வகை ஆடைகளாக இருந்தாலும் அதற்கான தனிப்பட்ட ஆபரணங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள் கொண்டாட்ட காலங்களில் தாங்கள் அணியும் நகைகள் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல பலவகையான நகைகள் உள்ளன. நாம் விரும்பி அணிகின்ற நகைகள் தனித்துவமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்தானே. 
நன்கு சுத்திகரிக்கப்பட்ட மென்மையான களிமண் கொண்டு தயாரிக்கப்படும் டெரகோட்டா நகைகள் வழக்கமான நகைகளை விடவும் தனித்துவமான தோற்றத்தில் நேர்த்தியாகவும் நுணுக்கமான வடிவங்களிலும் தயாரித்து வியக்க வைத்து வருகிறார் கோவையை சேர்ந்த டெரகோட்டா நகை வடிவமைப்பாளரும் ஷிகா கிரியேஷன்ஸ் நிறுவனருமான ஸ்மிரிதி.

“தீப ஒளி திருநாளன்று நாம் ஏற்றி வைக்கும் அகல் விளக்குகளும் களிமண்ணால் செய்யப்படுபவைதான். நம் முன்னோர்கள் சுவாமி சிலைகள் முதற்கொண்டு அனைத்து பொருட்களையும் இந்த களிமண்ணை பயன்படுத்தியே செய்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்டு சுடப்பட்ட களிமண்ணே டெரகோட்டா. இதில் சிற்பங்கள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என பல்வேறு வகையினை தயாரிக்கலாம். அதன் வரிசையில் தற்போது நகைகளும் இடம் பெற்றுள்ளன. 

களிமண்ணால் செய்யப்படுவதால், நாம் விரும்பும் கலை வடிவங்களில் அதனை அமைக்க முடியும். ஃபேஷன் உலகில் பல புது தயாரிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும், பழமை வாய்ந்த டெரகோட்டா நகைகளும் காலத்திற்கேற்ப பல பரிமாணங்களில் தயாரிக்கப்படுவதால் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. இந்த ஃபாஸ்ட் ஃபேஷன் உலகில் டெரகோட்டா நகைகளை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு நிறைய காரணங்களும் உள்ளன. 

டெரகோட்டா நகைகள்இயற்கையாகவே கிடைக்கும் களிமண்ணை பயன்படுத்தி செய்யப்படுபவை என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நிலத்தன்மை கொண்டதாகவும் உள்ளன. ஒவ்வொரு நகையும் முற்றிலும் கைகளால் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தொழிலக கழிவுகளும் ஏற்படப்போவதில்லை. பயன்பாட்டிற்கு பின்னர் மண்ணிற்கு எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாமல் இவை மக்கும் தன்மைக்கொண்டவை. 

இயற்கையான பொருளிலிருந்து தயாரிக்கப்படுவதால் நகைகளை அணியும் போது எந்த வகை அலர்ஜியும் ஏற்படுத்தாது. டெரகோட்டா நகைகள் நம் இந்திய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நம் இந்தியர்கள் இதனை பயன்படுத்தியுள்ளனர். 

ஐந்தாயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த கைவினைப் பொருட்களை பல்வேறு நுட்பங்களுடன் தயாரிக்கலாம். இவற்றை தீபாவளி, நவராத்திரி, துர்கா பூஜை போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமின்றி கல்லூரி மாணவிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஸ்டைலாகவும் வடிவமைத்துக் கொள்கிறார்கள். 

டெரகோட்டா நகைகள் மிகவும் இலகுவானது. நீண்ட நேரம் அணிந்திருந்தாலும்  லேசான எடையுடன் அழகான தோற்றம் கொண்டவையாக இருக்கும்” எனும் ஸ்மிரிதி, கொரோனா கால ஊரடங்கின் போது டெரகோட்டா நகை தயாரிப்பில் ஈடுபட்டு, அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். 

“நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே எனக்கு டெரகோட்டா நகை தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, அதை கற்றுக்கொண்டேன். தொடர்ந்து நகை தயாரிப்பில் ஈடுபட்ட நான் படித்துக்கொண்டிருக்கும் போதே டெரகோட்டா நகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆன்லைன் மூலம் தொடங்கினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காலத்தில் டெரகோட்டா தயாரிப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தேன். ஷிகா கிரியேஷன்ஸ் எனும் பிராண்டை தொடங்கி 9 வருடங்கள் ஆகிறது.

மாணவராக இருக்கும் போதே தொழில்முனைவோர் ஆனதால் உலகளவிலும் மற்ற அமைப்புகள் சார்பாகவும் பல விருதுகள் கிடைத்தன. நகை தயாரிப்பினை  சிறுவயது முதலே தொடங்கியதால் பல வருட அனுபவம் எனக்கு கிடைத்தது. பெண்களுக்கு டெரகோட்டா நகை தயாரிக்கும் பயிற்சியினை அளித்து வருகிறேன். 

நேரடி பயிற்சி வகுப்புகளின் போது நகை தயாரிப்பு முறைகளை கற்றுக்கொடுப்பேன். முதலில் அவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்... எவ்வளவு நாள் நீடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிப்பேன். மிகவும் நுணுக்கமான வடிவங்களிலும் நகை தயாரிக்க வேண்டியிருக்கும் என்பதால் அதிக கவனமும் பொறுமையும் தேவை. 

சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெண்களுக்கு இலவச பயிற்சியும் அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் நகைகளை தயாரித்து சிறிய அளவில் தொழில் செய்து வருகின்றனர். என் நிறுவனத்தில் நகை தயாரிக்கும் குழுவில் 15 பெண் கைவினைக் கலைஞர்கள் உள்ளனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தற்போது பலரும் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத நிலைத்தன்மையுடன் உள்ள பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு ஆர்வமுள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் நிலத்தன்மையை கடைபிடித்து வருகின்றனர். 

அதிகளவு தீங்கினை ஏற்படுத்தாத பொருட்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். டெரகோட்டா நகைகள் ஈகோ ஃப்ரெண்ட்லி மட்டுமல்ல, தனித்துவமான ஸ்டைல் மற்றும் அழகான தோற்றத்தை அளிப்பதாலும் பலராலும் விரும்பப்படுகின்றன” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“பெரும்பாலான பெண்கள் ஆன்டிக், டெம்பிள் கலெ க் ஷன்ஸ் போன்ற பாரம்பரியமான டிசைன்களை விரும்புவார்கள். தற்போதுள்ள இளம்பெண்கள் சிறிய அளவிலான நகைகளை விரும்புகின்றனர். தங்களுக்கென பிரத்யேகமான ஒரு ஸ்டைல் இருக்க வேண்டுமென்றே நினைக்கின்றனர். 

அதனால் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு நகைகளையும் செய்து தருகிறோம். டிரெண்டிற்கு தகுந்தாற்போல பலவிதமான டிசைன்களில் டெரகோட்டா நகைகளை தயாரித்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் ஆடைகளை புகைப்படங்களாக அனுப்பி அதற்கேற்ற நிறத்திலும் டிசைனிலும் செய்து தரும்படி கேட்பார்கள்.

நாங்களும் சில ஆலோசனைகளையும் தருவோம். இவ்வாறு அவர்களுக்கு விருப்பமான நகைகளை முழுமையான தோற்றத்தில் தயாரித்து வழங்குகிறோம். நகைகள் மட்டுமின்றி டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்ட 3D பிரின்ட் போட்டோ ஃபிரேம், கஸ்டமைஸ்டு கிஃப்ட் மற்றும் வீட்டு அலங்காரப்  பொருட்கள் போன்றவற்றையும் தயாரிக்கிறோம். 

இன்றைய ஃபேஷன் உலகில் மக்கள் பலரும் தாங்கள் அணிகின்ற ஆடைகள் மற்றும் அணிகலன்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் ஏதோவொரு விஷயத்தை சொல்ல வருவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் டெரகோட்டா நகைகள் சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கைவினைக் கலைஞர்களை போற்றுவதாகவும் ஆதரிப்பதாகவும் வெளிப்படுகிறது. 

என் வாடிக்கையாளர் ஒருவர் 9 வருடங்களாக நான் தயாரித்து கொடுத்த டெரகோட்டா நகைகளை பத்திரமாக வைத்திருப்பதாக சொன்னார். சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் இந்த வகை நகைகளை நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்க செய்யலாம். அதிகளவு தண்ணீரில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாசனை திரவியங்கள் நகைகளின் மேல் படாமல் பாதுகாக்க வேண்டும். 

மிருதுவான உறையில் நகைகளை பராமரிக்க வேண்டும். களிமண் சுடப்பட்டு தயாரிக்கப்பட்டதால் வலிமையாக இருக்கும். இருப்பினும் கீழே விழுந்தால் உடைய வாய்ப்புள்ளது. 

நன்கு உலர்ந்த மிருதுவான துணியினால் நகைகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும். இந்த தீபாவளிக்கு பாரம்பரியம் மற்றும் டிரெண்டிங்கான டிசைன்களில் டெரகோட்டா நகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இந்த தீபாவளியை கொண்டாடுவோம்” என்றார்.

ரம்யா ரங்கநாதன்