காசா அகதிகளுக்கு உதவிய இந்தியப் பெண்!



காசாவில் யுத்தம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் லட்சக் கணக்கான காசா மக்கள் இஸ்ரேல் குண்டு வீச்சால் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காசாவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அகதிகளாக துரத்தப்படுகிறார்கள்.  

அகதிகளாக இவர்கள் செல்லும் இடங்களில் கூடாரம் அடித்து தங்கினாலும் உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை. உணவுப் பொருட்கள் மற்றும் குடிக்க தண்ணீர் இரண்டையும் 
இந்த மக்களுக்கு விநியோகம் செய்ய இஸ்ரேல் தடுத்து வருகிறது. பசி, பட்டினி, தாகம்... ஒருவர் வாழ அத்தியாவசியமான இம்மூன்றுமே காசா மக்களை அழிக்கும் கருவிகளாக மாறியுள்ளன. ஒரு துண்டு ரொட்டி, ஒரு சொட்டு குடிநீர் கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.  

இந்த அவலங்களைக் கண்டு பெரும்பாலான நாடுகளில் காசா மக்களுக்காக பேரணிகள் நடக்கின்றன. தன்னார்வத் தொண்டர்கள் பலர் சிறிய கப்பல்களில் உணவுப் பொருட்களை கடல் வழி கொண்டு வந்தாலும், அவர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.  உதவிகள் செய்ய நினைத்தாலும் எப்படி அனுப்புவது? யாருக்கு அனுப்புவது? அனுப்பினாலும் போய் சேருமா என்ற அனுதாபங்கள் மற்ற நாட்டு மக்களிடம் ஏற்பட்டது. 
இதை எல்லாம் கடந்து, இந்திய மக்களின் பிரதிநிதியாக மாறினார்  கொச்சி பச்சாளத்தைச் சேர்ந்த ஸ்ரீரேஷ்மி. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வாடும் காசா மக்களுக்கு வெளிநாட்டில் வாழும் தன் நண்பர்கள் மூலம் நிதியினை திரட்டி அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரினை கொச்சியில் இருந்தபடியே அவர்களுக்கு கிடைக்க செய்து உதவியுள்ளார்.
‘‘வாடிய பயிரைக் காணுகிற போது மனம் வாடாதவர்கள் கூட, சிறு குழந்தைகள் பசியால், பட்டினியால், குடிநீர் கிடைக்காமல் தவிப்பதை பார்க்கும் போது பரிதவித்துப் போவார்கள். அப்படித்தான் நானும் கலங்கினேன். தாய் மண்ணிலிருந்து அகதிகளாக நடந்து, ஊர்வலமாகப் போவது எத்தனை அவலம். 

இவர்களின் நிலையைக் கண்டு அனுதாபப்படுவதுடன் நின்றுவிடக் கூடாது என்று நினைத்தேன். முதலில் வெளிநாட்டில் வசிக்கும் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு நிதியினை திரட்டினேன். அதன் மூலம் இவர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்க திட்டமிட்டேன். 

இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களோ, குடி நீரோ, பணமோ நேரடியாக காசாவுக்கு அனுப்ப முடியாது. அதனால் வளைகுடா நாடுகளில் வாழும் எங்களைப் போல உதவும் மனதுள்ள மக்களை தொடர்பு கொண்டோம். அவர்கள் மூலம் எங்களால் முடிந்த பணம் மற்றும் 3000 லிட்டர் அடங்கிய தண்ணீர் டிரக்கை அனுப்பி வைத்தோம். 

இதன் மூலம் அகதிகளாக அங்கிருக்கும் குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய முடிந்தது. பல தடைகளைத் தாண்டி தங்களுக்கு யார் உதவி செய்தார்கள் என்று கேட்டறிந்து தெரிந்து கொண்ட அந்த மக்கள் ‘நன்றி’ தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அவைதான் வைரலானது.

அகதிகளாக அங்கு வாழும் இந்த மக்கள் தங்கி இருக்கும் இடத்தில் எந்தவித ஓடையோ, ஆறோ அல்லது சிறிய குளம் கூட கிடையாது. ஒரு நாளைக்கு இவர்களுக்கு 6000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. போரின் காரணமாக அந்தப் பகுதி மிகவும் மாசடைந்து குழந்தைகள் மஞ்சள் காமாலை, பேதி மற்றும் சருமத் தொற்று போன்ற பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். பண உதவியை விட இவர்கள் வசிக்கும் இடத்திற்கு தண்ணீரினை கொண்டு செல்வதுதான் பெரிய சேலஞ்சாக இருந்தது. 

அங்குள்ள ஒரு டிரக் உரிமையாளர் ஒருவர் தண்ணீர் கொண்டு செல்ல சம்மதித்தார். அதற்கான செலவினை நாங்க ஏற்றுக் கொண்டோம். தற்போது இந்தப் பகுதியில் வசித்து வரும் இவர்கள் இன்னும் எவ்வளவு காலம் அங்கு தங்கி இருப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சொல்லப்போனால் அவர்கள் வேறு இடத்திற்கு போகவும் வழி இல்லாமல் இருக்கிறார்கள். நான் இதை அரசியலாக பார்க்கவில்லை. அவர்களின் துன்பத்தினை போக்க நினைத்தேன். அவ்வளவுதான்’’ என்றார் ஸ்ரீரேஷ்மி.

கண்ணம்மா