காயல் எழுத்தாளர் தமயந்தி



எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்ட படைப்பாளி தமயந்தி. அவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘காயல்’. படம் உருவான விதம், படம் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம், நடிகர்கள் தேர்வு, இயக்குநராய் அவரது  முயற்சி குறித்தெல்லாம் பேசியதில்...

* ‘காயல்’ படம் கதை குறித்து..?

வாழ்க்கையோடு நெருக்கமான ஆனால், தமிழ் சினிமா உலகத்திற்கு தூரமாக இருக்கிற படம் இது.‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என பண்டரிபாயை ரஜினி தூக்கிக்கொண்டு வருகிற தமிழ் சினிமாக் காட்சிகளைத்தான் நாம் பார்த்திருப்போம். அம்மாக்கள் எல்லோரும் இங்கே ஒட்டு மொத்தமாக அந்த அளவுக்கு நல்லவர்களும் இல்லை... அக்மார்க் அம்மாக்களும் இல்லை. அம்மாக்களால் நிலைகுலைந்து போன குழந்தைகளின் வாழ்க்கையும் இருக்கிறது. 

ஆண்கள் எப்போதும் மீசையை முறுக்கிக் கொண்டு, அரிவாளைத் தூக்கிக்கொண்டு, ‘ஏய் என் சாதி ஆளு’ என வெட்டுகிற காட்சிகளைத்தான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

சாதிக்குள் சைலண்டாய் காய்களை நகர்த்துகிற பெண்கள் குறித்து நாம் பேசுவதே இல்லை.ஆணவக் கொலைகளைச் நிகழ்த்துவதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கிறார்கள்.  ‘அவனை வெட்டீட்டு வரலைனா முடிய நான் சீவ மாட்டேன்னு’ சொல்லுகிற பெண்களையும் எனக்குத் தெரியும். 

என் அம்மா பரிசுத்தமானவள்... பெண்கள் எல்லாம் நல்லவுங்க வல்லவுங்க எனப் புனிதப்படுத்துதல் இங்கே தொடர்கிறது. அம்மாக்களைப் பற்றி நம்மலே சொல்லலைன்னா வேறு யார் சொல்லப் போறா? நமக்குப் பிடித்த மாதிரி நம்முடைய முகத்தை அணிந்து கொண்டு, வாழக்கூடிய வாழ்க்கையை வாழ வீடே ஒத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த சமூகத்தை நோக்கி எப்படி கை நீட்ட முடியும். இந்தக் கலாச்சார பம்மாத்து உடைக்கப்பட வேண்டும் என்பதை சொல்ல முயன்ற படமே இது.

புனித பிம்பங்களை கட்டமைக்காமலே சுய ஜென்டரை விமர்சனம் செய்ய நினைத்தேன். சுய சாதி மறுப்புதான் மிகச் சிறந்த விடுதலை எனவும் நினைக்கிறேன். படத்தில் பைட், காமெடி போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. 

* படத்திற்கு ‘காயல்’ என்று ஏன் பெயர் வைத்தீர்கள்..?

காயல் என்பது பிரிவு. பிரிவு சார்ந்த கதை இது. மேலும், காயல் என்பது கடலின் உபரி நீரையும் குறிப்பது. கடலோர நிலப்பரப்பு படம் முழுவதும் தொடர்பில் இருக்கும். கூடுதலாக படத்தில் கடலும் ஒரு கதாபாத்திரம். 

புதுச்சேரியில் தொடங்கி தனுஷ்கோடி வரை ஏழு ஊர்களின் கடலோர நிலப்பரப்பு பயணத்தில் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும். ஒவ்வொரு காட்சியிலும் கடல் வேறு வேறு வண்ணங்களில் காட்சி தரும். அவ்வளவு அழகு கடலில் இருக்கிறது. தமிழ் படங்களில் நமது நிலப்பரப்புகளை நாம் சரியாகக் காட்சிப்படுத்தவில்லை என்றே சொல்வேன். 

* நடிகர்கள் தேர்வு குறித்து..?

நடிகர்கள் தேர்வை தயாரிப்பாளர் என்னிடமே ஒப்படைத்துவிட்டார். இந்தப் படத்தின் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடிகை அனுமோலிடம் சொல்லியிருந்தேன். நான்தான் அம்மா கேரக்டரில் நடிப்பேன் என்று அப்போதே அவர் சொல்லியிருந்தார். நான் படம் பண்ணும்போது பிஸியாக இருந்தவர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மாதம் என் கூடவே இருந்தார்.

கதை எழுதும் போதே தேன்மொழி கேரக்டருக்கு காயத்ரி சங்கரை முடிவு செய்திருந்தேன். இறுக்கமான முகத்துடன், குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்து கொண்டு, அதே நேரம் போராட்டம் பண்ணும் பெண்ணாக நடிப்பை வெளிப்படுத்த காயத்ரியை தவிர வேறு யாரையும் எனக்குத் தோன்றவில்லை.

நடிகர் லிங்கேஷை நேரில் பார்த்து நான் கதை சொன்ன போது, எனது கதையை அவர் உள்வாங்கிய விதம் பிடித்திருந்தது. படத்தில் நடித்திருக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு பாடகி. பல ஸ்டுடியோவில் பாட்டு எழுதும் போது அவரை பார்த்திருக்கிறேன். எப்போதும் துள்ளலோடு துறுதுறுவென வலம் வருபவர். நடக்கும்போதே வழுக்கிக்கொண்டு செல்பவர். மனநல மருத்துவர் கேரக்டரை ரமேஷ் திலக்தான் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஏசிபி கேரக்டருக்கு ஐசக் சரியெனப்பட்டது.

* படம் வெளியாகத் தாமதமானது குறித்து..?

படத்தை வாங்குவதற்கான விநியோகஸ்தர்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. படம் எடுத்து முடிக்கும் வரைதான் அது என்னுடைய படம். முடித்த பிறகு அது வர்த்தக ரீதியான விஷயமாக மாறும். படத்தைப் பார்த்தவர்கள் படம் மெதுவாக நகர்வதாகவும், மலையாளப் படத்தைப் பார்ப்பது போன்று இருப்பதாகவும், கமர்ஷியலாக இல்லையெனவும் தெரிவித்தார்கள். எனவே படத்தை பலமுறை ரீ எடிட் செய்ய வேண்டிய நிலை இருந்தது. 

இது எனக்கு ஒரு நிச்சயமற்ற தன்மையை கொடுத்துக் கொண்டே இருந்தது. ராமலட்சுமி என பெயரிட்டு வளர்க்கப்பட்ட ஆடு இன்னொருவர் வீட்டுக்கு சென்றதும் வேறொரு பெயருக்கு மாறுவது மாதிரிதான் இதுவும். என்னுடைய பார்வையில் இருந்து கொஞ்சம் விலகி பலமுறை ரீ எடிட் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுக்குப் பிறகே படம் வெளிவந்திருக்கிறது. என்டர்டெய்மென்ட் தேவைதான் என்றாலும், நல்ல படங்களை ஆதரிக்காத திரைத்துறையின் வர்த்தக போக்கு கவலை அளிக்கிறது.

* திரைத்துறையில் இயக்குநராக பெண்கள் சாதிக்க முயற்சிக்கிற வலியை பதிவு செய்ய முடியுமா?

நிச்சயமாக. ஒரு பெண் இயக்குநராக ஜெயிப்பது யுத்தக் களத்தில் நிற்பது மாதிரியான சிரமம். ஆண் 20 வயதில் சாதிப்பதை, பெண்ணால் 40 வயதில்தான் செய்யவே முடிகிறது. இதற்காக நிறைய சவால்களை சந்திக்க நேருகிறது. 

பல நேரங்களில் இது சோர்வைத் தரும். நிறைய நேரம் நமது திறமை மீதே நாம் குறைந்த மதிப்பீடு கொள்ளக்கூடிய ரணங்களைக் கொடுப்பார்கள். சரியான படம்தான்  நாம் எடுத்திருக்கோமா? சரியாகத்தான் எடுத்திருக்கோமா? போன்ற கேள்விகளை எல்லாம் தோன்றச் செய்வார்கள். பெண் என்பதால் படம் எடுப்பது எப்படி என நமக்கு வகுப்பு எடுப்பார்கள்.

முதலில் திறமை இல்லை என்பார்கள். ‘இந்த அம்மாவெல்லாம் எதுக்கு படம் எடுக்க வரணும், இது என்னத்த சாதிக்கப் போகுது’ என காதுபடவே பேசுவார்கள். ஆனாலும், ‘பேக்கப் சொல்லாமல் ஷாட்டை வை’ எனக் களத்தில் நின்றேன். 

ஆண்களுக்கு மத்தியில் அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்டினால்தான் களத்தில் நிற்க முடியும் போல எனத் தோன்றியது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவில் வந்தார். படத்தை எடுத்து முடிப்பதுதான் இதெற்கெல்லாம் பதிலடி என முடிவு செய்தேன். யாரெல்லாம் சொன்னார்களோ அவர்களே படம் முடியும் போது என்னிடம் வந்து கை கொடுத்தார்கள். 

 செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்