செம்பருத்தி...செம்பருத்தி!
இயற்கை 360°
‘‘உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை அளித்துள்ள நன்கொடை இது” என்ற வரிகளுடன், அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி லேடி காகா, வைனுக்குப் பதிலாய் ஜோபோ (Zobo) செம்பருத்தி டீயை கையில் ஏந்தி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக... பிளட் பிரஷர், சுகர், முகப்பருவுக்கு செம்பருத்தி டீ உதவுகிறது என இன்ஸ்டாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன் புகைப்படத்தை செம்பருத்தியோடு பகிர, ஓராண்டுக்கு முன் இவைகள் பேசு பொருளானது.
 அமெரிக்காவின் லேடி காகாவும்... தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டாரும் கொண்டாடும் செம்பருத்தியில் என்னதான் இருக்கிறது..? வாருங்கள் இன்றைய இயற்கை 360°யில் செம்பருத்தியோடு பயணிப்போம்.
இல்லங்கள்தோறும் அலங்காரச் செடியாய் வளர்க்கப்படும் செம்பருத்தியின் தாவரப்பெயர் Hibiscus Rosa-sinensis. தோன்றிய இடம் தெற்காசியா. குறிப்பாக சீனா. கிரேக்க மொழியில் Hibiscus என்பது Mallow அல்லது மூலிகை எனப் பொருள்.  Rosa-sinensis என்பது சீன ரோஜாவைக் குறிப்பது. இந்த சீன ரோஜா ஆங்கிலத்தில், Roselle, Shoe flower, Rose mallow, China rose, Zobo, Tropical mallow என்றும், பிற மாநிலங்களில் ரக்த புஷ்பம், ருத்ரபுஷ்பம், ஜப புஷ்பம், ஜசூட், ஜஸ்வந்த், செம்பருத்தி, மந்தாரை, செவ்வரத்தை, செம்பரத்தை என்றும் அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பம் சப்பாத்து என்கின்றனர்.
 Hbiscus எனும் செம்பருத்திக் குடும்பம், ஏறத்தாழ 300 வகை செடிகளை உள்ளடக்கியது. இதில் இல்லங்களில் காணப்படும் செம்பருத்தியின் இயல்பான நிறம் சிவப்பு என்றாலும், மரபணு மாற்றம் மூலம், மஞ்சள், வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு நிறங்களிலும், மஞ்சள்-சிவப்பு, ஊதா-சிவப்பு என இரட்டை நிறங்கள் கலந்த ஹைப்ரிட் செம்பருத்தி வகைகளும் உலகெங்கிலும் தென்படுகின்றன. மேற்கத்தியர்கள் கொண்டாடும் ஜோபோ, ஆப்ரிக்க சாப்டாரிஃபா வகையைச் சார்ந்தது.
செம்பருத்தியின் பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை எனும் இயற்கை மருத்துவர்கள், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்திகளில், மருத்துவ குணங்கள் கூடுதலாய் இருப்பதால் ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுகிறது என்கின்றனர். அதேபோல் குசாப்டாரிஃபா வகை செம்பருத்தி, அதன் பிரத்யேக நிறம், சுவை மற்றும் அரிய மருத்துவ குணங்களால் அதிகப் பயன்பாட்டில் உள்ளது என்பதுடன், உலகெங்கிலும் அதிக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட செம்பருத்தியாக உள்ளது.
கிராமத்து ரோஜா எனப்படும் செம்பருத்தி சக்திவாய்ந்த, விலைமதிப்பற்ற மூலிகை என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட செம்பருத்தி பூவில், கரோட்டினாய்டுகள்(Carotenoids), ஆன்த்தோ-சயனின்கள்(Anthocyanins), ஃப்ளாவனால்கள்(Flavonols), ஃபீனாலிக் அமிலம் (Phenolic acid), மாலிக் அமிலம்(Malic acid), க்வர்செடின்(Quercetin) உள்ளிட்ட பல ஹைட்ரோ-கார்பன்கள், கிளைக்கோசைடுகள், சப்பானின்கள், டானின்கள், டெர்பனாயிட்கள் போன்ற தாவரச் சத்துகளும், கால்சியம், ஃபாஸ்பரஸ், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃபிளேவின், நியாசின், சிட்ரிக் அமிலம் உள்ளிட்ட கனிம மற்றும் வைட்டமின் சத்துகளும், செம்பருத்தியின் மருத்துவ குணத்திற்குக் காரணமாய் இருக்கின்றன.
செம்பருத்தி என்றால் அலங்காரச் செடி, முடி உதிர்வைத் தடுக்கும் தைலம் அல்லது ஷாம்பூவில் உள்ள இயற்கைப் பொருளாகவே அறிவோம். ஆனால், இதன் மருத்துவ குணங்கள் உண்மையிலே நம்மை வியக்க வைக்கிறது.
அதிக நீர்த்தன்மை, நார்ச்சத்து மற்றும் ம்யூசிலாஜ் (mucilage) எனும் பிசின் தன்மை நிறைந்திருப்பதால், நீர் வறட்சியை போக்கி, உடல் சோர்வை அகற்றி, உற்சாகம் அளிப்பதுடன், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உணவு செரிமானத்தையும், உணவு மண்டல ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது. இதிலுள்ள ஆக்சிஜனேற்ற எதிர்பொருட்கள், செல்களின் அழற்சி எதிர்ப்புத் திறனையும் நோயெதிர்ப்பு ஆற்றலையும் கூட்டி, வாழ்க்கை முறை நோய்கள் பலவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், கொலஸ்ட்ரால், சிறுநீரக நோய்கள், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களின் தீவிரத்தைக் குறைப்பதுடன், கருப்பை சுருங்கி விரியவும், இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவை சமச்சீராக வைத்திருக்கவும், மாதவிடாய் வலி, உதிரப்போக்குப் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் உள்ள அதேசமயம் கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
செம்பருத்திப்பூ சேர்த்து காய்ச்சிய எண்ணெய் தலைமுடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்அளிப்பது போல, காயங்கள் மற்றும் தழும்புகளில் வெளிப்பூச்சாகவும் பயன்படுகிறது.
பூக்கள் மட்டுமன்றி, இலைகளின் மருத்துவப் பயன்பாடுகளும் அறிவியல்ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செம்பருத்தி இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, புறஊதாக் கதிர்களைத் தடுத்து, தோலில் உண்டாகும் சுருக்கங்களை அகற்றவல்லதாக சீன மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாக இதன் இலைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்பருத்தி இதழ்களை நேரடியாகப் பயன்படுத்தலாம் என்றாலும், ஜோபோ எனும் சாப்டாரிஃபா செம்பருத்தி இதழ்களை உலர்த்தியே பயன்படுத்துகின்றனர். இதன் தேநீர், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக, USFDA ஆய்வறிக்கை கூறுகிறது.
வாய்ப்புண், வயிற்று அழற்சி, மலச்சிக்கல், சளி, அலர்ஜி, மன அழுத்தம், தூக்கமின்மைக்கு ஜோபோ பானம் பெரிதும் உதவுகிறது. மற்ற எந்தவொரு இயற்கை படைப்பைப் போலவே, ஒவ்வாமையும் அதுசார்ந்த பாதிப்புகளும் செம்பருத்தியிலும் ஏற்படக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காணப்படும் செம்பருத்தி, ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து உலகம் முழுவதும் பயணித்துள்ளதையும், வெப்ப மண்டல பூமியில், பதியன்கள் மூலம், மண் வளம், நீர் வளம் மற்றும் சூரிய ஒளியில் வருடம் முழுவதும் வளரும் இயல்புகொண்டதாய், வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கென இடம்பெறுகின்றன.
நம் நாட்டில், காளிக்கு காணிக்கையாய் செம்பருத்தி பூ செலுத்தப்படுகிறது. சீன மக்கள் காதலியை ஈர்க்கவும், பாலுணர்வைத் தூண்டவும், நல்ல கனவுகள் வரவும் பயன்படுத்துகின்றனர். தென்-கொரியா, மலேசியா, ஹைட்டி குடியரசு நாடுகளின் தேசிய மலராய் செம்பருத்திபூ கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரில் ‘Bunga Raya’ என்ற செம்பருத்தி, விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தீய சக்திகளைப் போக்கவும், தெய்வீக ஆற்றலைப் பெருக்கவும் மேற்கு பசிபிக் தீவினர் செம்பருத்தியை பயன்படுத்துகின்றனர். பழங்குடி அமெரிக்கர்களில், மணப்பெண்ணின் அலங்காரம் செம்பருத்தி சூடிய பிறகுதான் நடைபெறுகிறது. செம்பருத்தி பருகும் பானமாக மட்டுமின்றி, ஜாம், ஜெல்லி, ஜூஸ், சாஸ், சாலட் மற்றும் சிற்றுண்டிகளை அலங்கரிக்கவும் பூக்களும் காம்புகளும் பயன்படுகின்றன. மேலும், கண்டிஷனர், ஷாம்பூ, மஸ்காரா, ஹேர் டை, ஷூ பாலீஷ் தயாரிக்க இதன் இலை மற்றும் பூக்கள் பயன்படுவதுடன், ஷூ ஃப்ளவர் என்ற பெயரே, இதன் ஷூ பாலீஷ் பயன்பாட்டினால்தான் என்றும் சொல்லப்படுகிறது.மருத்துவ குணங்கள் செறிந்த, பக்கவிளைவுகள் இல்லாத, இயற்கையின் கொடையாக, மனம் கவரும் நிறங்களுடன், நிறமியுடன் கூடிய செம்பருத்திப் பூக்களுடன் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
(இயற்கைப் பயணம் நீள்கிறது...)
வாசகர் பகுதி
ரத்த சோகையை தீர்க்கும் அத்திப்பழம்!
உலர்ந்த அத்திப்பழம் நாட்டு மருந்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டது.
 *இரவில் மூன்று முதல் ஐந்து அத்திப் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ேசாகை பிரச்னைகள் சரியாகும். புதிய ரத்தமும் உற்பத்தியாகும்.
*உடலில் அதிக பித்தம் உள்ளவர்கள் தினமும் இரண்டு, மூன்று அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் வியர்வை வழியாக வெளியாகி விடும். பித்த உபாதைகள் நீங்கி விடும்.
*இரவில் தண்ணீரில் ஊறவைத்த இரண்டு அத்திப் பழங்களை சாப்பிட்டு வந்தால் தலை முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*இந்தப் பழத்தில் அதிக நார்ச் சத்து இருப்பதால் உடம்பில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.
*எடை அதிகம் உள்ளவர்கள் எடையை குறைக்க தினமும் இதை சாப்பிட்டு வரலாம்.அத்திப்பழம் சாப்பிடுவோம், நன்மைகள் பெற்று நலமுடன் வாழ்வோம்.
- எஸ்.உஷாராணி, கோவை.
|