பொதுவெளி எங்கும் பெண்கள்!
‘‘பெண் என்ற அடைமொழியில், 25 பெண்களுடன் 2019ல் தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழு. தற்போது தமிழகம் முழுக்க சுமார் 2000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்’’ எனப் பேச ஆரம்பித்த ‘பெண்’ அமைப்பின் நிறுவனர் நர்மதா அம்மா சென்னை வடபழனியில் வசிப்பவர். ‘‘பொதுவெளிகள் ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்க, அடுக்களை தாண்டி அனைத்துமாய் பெண் இருந்தும், பொதுவெளிகள் பெண்ணுக்கானதாய் இல்லையே’’ என்கிற கேள்வியை முன்வைக்கிற நர்மதா அம்மா, ‘‘பெண்கள் பெருமளவில் பொதுவெளிக்கு வருவதுதான், அவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் வழி’’ என்கிறார் நம்பிக்கையுடன். பெண்களை வெளியில் வர வைப்பதற்காகவே, “பொதுவெளி எங்கும் பெண்கள்” நிகழ்வை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டவரை நேரில் சந்தித்ததில்...  ‘‘பெண்கள் பெரும்பாலும் வெளியில் வரத் தயங்குபவர்கள். அவர்களை அமைப்பாய் திரட்டி, அவர்களுக்காகப் பேசவும்... அவர்களுக்காக செய்யவும் உருவான அமைப்பு இது. இதில் ஆண்களுக்கு இடமில்லை’’ எனப் புன்னகைத்த நர்மதா அம்மா ஒரு கவிஞர், எழுத்தாளர்.
‘நல்ல பெண்மணி’ என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். இதுவரை அவர் கைப்பட 10 கவிதை நூல்களையும், ‘பெண் அரசியல்’ என்ற கட்டுரை நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சன்பீம்’ என்ற பெயரில், சென்னை போரூரில் இயங்கி வரும் ஆங்கிலப் பள்ளியின் தாளாளராகவும் செயல்பட்டு வருகிறார். ‘‘பொதுவெளியில் சமத்துவம் பேசும் ஆண்கள், வீட்டில் தன் சகோதரியை, மனைவியை, மகளை எப்படியாக நடத்துகிறார்கள் என்ற கேள்வியில் தொடங்கிய பயணம் இது. வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு சுதந்திரம் இல்லையெனில், மேடையில் பேசி, புத்தகத்தில் எழுதி, பொது வெளிகளில் இந்த ஆண்கள் செய்வதுதான் என்ன?’’ என்ற கேள்வியை முன் வைத்தவராய், ‘‘இது எனக்கு முரண்பாடாய் இருந்தது. பெண் என்பதால் மட்டுமே, பெண்கள் ஏன் இப்படி நடத்தப்படுகிறோம் என்ற கேள்வி வெகுநாட்களாய் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், எப்படி வெளியில் வர வேண்டும் எனத் தெரியாமலே இருக்கின்ற பெண்களை கை தூக்கிவிடும் நோக்கில் உருவானதே ‘பெண்’ அமைப்பு. அலுவலகத்தில் வேலை செய்கிற பெண்களும், அரசியல் தளத்தில் இயங்கும் பெண்களும் குழுவாகவோ, தனித்தோ வெளியில் செல்வது அவர்களால் முடிகிறது.
ஆனால், பின்தங்கிய சூழலில், கல்வி அறிவு குறைவான, விளிம்பு நிலைப் பெண்கள், குழுவாய் தங்களை இணைத்துக் கொள்வதோ, தங்களுக்கென ஒருசில மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தை விட்டு நகர்வதோ இயலாத காரியம் என்பதால், இவர்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே “பொதுவெளி எங்கும் பெண்கள்” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சாமானியப் பெண்களும் தாங்களாக முன்வந்து பங்கேற்கிறார்கள், வெளியில் வருகிறார்கள் என்பதே மகிழ்ச்சிதான்’’ என்கிறார் நர்மதா. ‘‘ பெண்களை “வெளியில் வாங்க” என அழைப்பதும் அமைப்பில் இருக்கும் பெண்கள்தான். அழைப்பை ஏற்று தானாக வெளியில் வந்து, தங்களை அமைப்பில் இணைத்துக் கொள்வதும் பெண்கள்தான்’’ என்றவர், ‘‘வீட்டைவிட்டு வெளியில் வரும் பெண்கள், இங்கே வித்தியாசமான பெண்களைக் களத்தில் பார்க்கிறார்கள். தான் வாழுகிற வாழ்க்கைக்கும், இங்கே அவர்கள் பார்க்கும் பெண்களுக்கும் வித்தியாசத்தை உணர்கிறார்கள்.
‘பெண்’ அமைப்பில் தற்போது மாவட்ட வாரியாக 10 குழுக்கள் இருக்கிறது. வருடத்திற்கு இரண்டு கூடுகை என இதுவரை சென்னை, புதுச்சேரி, கடலூர், கோவை, பூம்புகார், மீண்டும் சென்னை என 3, 6 கூடுகைகளை நடத்தியிருக்கிறோம். வருடம் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறோம்.பல்வேறு அடுக்குகளில் உள்ள எல்லாத் தரப்பு பெண்களும் குழுவில் இருந்தாலும், அனைவரும் ஒன்றே.
யாரும் யாரையும் எடை போடுவது, மதிப்பீடு செய்வது போன்ற வேலைகளைச் செய்வதில்லை. நினைத்ததைப் பேசவும், சுதந்திரமாய் செயல்படவும், திறமைகளை வெளிப்படுத்தவும் முடியும். இதில் சென்னை மற்றும் புதுச்சேரி குழுக்களில் பல்வேறு பெண் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உறுப்பினர்களாய் இருக்கிறார்கள்.
பெண்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு, தேதி குறிப்பிட்டு ஓரிடத்தில் ஒன்றாய் இணைவோம். அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகபட்சம் 300 முதல் 500 பெண்கள் பங்கேற்பார்கள். பேட்ஜ் அணிந்து, நானும் ‘பெண்’ அமைப்பில் இருக்கிறேன் என வெளிக்காட்டுவதில், எளிய பெண்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தென்படும்.
பெண்கள் ஒன்றிணையும் இந்த நிகழ்வில் உற்சாகம் பொங்கும். கடந்த முறை பூம்புகாரில் நிகழ்ச்சி நடந்தபோது, பெண்களின் மிகப்பெரும் எழுச்சியினை பார்க்க முடிந்தது. அவர்களில் பலர், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வண்டி கட்டி, வேன் பிடித்து என தன்னெழுச்சியோடு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
உலகின் சரி பாதி பெண்களில் பலருக்கும், தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. காரணம், அனைத்துமே இங்கு ஆண்களால் உருவாக்கப்பட்டது என்பதால், ஆண் முகமே எல்லாவற்றிலும் தெரிகிறது.
அந்த முகம் வன்முறை சார்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலும் குழுவில் உள்ள பெண்கள் ஏதோ ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்களாய் தென்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் உன்னத அரசியலாக பெண் அரசியலைக் கையில் வைத்திருக்கிறோம்’’ என்றவர், ‘‘இந்தப் பெண்கள் எல்லாம் அரசியலுக்குள் வரும்போதுதான் புதிய திருப்புனைகள் ஏற்படும். இது விதை விதைப்பது மாதிரியான செயல்.
இப்போது ஆரம்பகட்ட நிலையில் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் மிகப்பெரிய மாற்றத்திற்கு இது வழிவகுக்கும். அதற்கு பெண்கள் முதலில் தயங்காமல் வெளியில் வரவேண்டும். அப்படி வர வைக்கும் முயற்சியே “பொதுவெளி எங்கும் பெண்கள் நிகழ்வு.’’வாங்க!
முதலில் சந்தோஷமாய் கூடிக் களிக்கலாம் என்கிற ரீதியில் தொடங்கும் இந்த நிகழ்வில், பெண்கள் கூடுகைக்கான அனுமதி, பாதுகாப்பு என எல்லாவற்றையும், முறையாக அரசிடம் அனுமதி பெற்றே ஒருங்கிணைக்கிறோம். நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் வசிக்கின்ற அமைப்பைச் சேர்ந்த பெண்களில் சிலர், அன்று தேவைப்படும் களப் பணிகளை முன்னெடுப்பார்கள்.
மேலும், அமைப்பில் உள்ள பெண்கள் எங்கு சென்றாலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருப்பதுடன் சட்ட ஆலோசனை, மருத்துவ உதவி, தங்குமிடம் என எல்லாமும் அமைப்பில் உள்ள பெண்கள் மூலமே கிடைத்துவிடுகிறது.
இதை ஒரு நல்ல மாற்றமாகவே பார்க்கிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், போதையற்ற சமூகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 100 பெண்கள் களத்தில் இறங்கி, 30 ஆயிரம் பெண்களை சந்தித்து, கையெழுத்து பெற்றோம்.
முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிக்க இருக்கிறோம். புதுச்சேரி முதல்வரிடத்திலும் கையெழுத்துப் பிரதிகளை கொடுத்தும் இருக்கிறோம்’’ என்றவர், பெண்ணின் வெற்றி மானுடத்தின் வெற்றி என்றவாறு புன்னகைக்கிறார்.
‘‘பொழுதுபோக்கு என்பது எளிய பெண்களுக்குமானது என்பதை வலியுறுத்தும் விதமாக, விளிம்புநிலைப் பெண்கள் 50 பேரை தேர்ந்தெடுத்து, பெண் அமைப்பைச் சேர்ந்த 20 பெண்கள் செய்த நிதி உதவியில், வடபழனி விஜயா ஃபோரம் மாலுக்கு ‘கூலி’ திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றோம்.
இது அமைப்பு மூலம் நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சியான சின்ன நினைவு’’ என பகிர்ந்தவர், ‘‘எங்களின் அடுத்த “பொதுவெளி எங்கும் பெண்கள்” கூடுகை ராமேஸ்வரத்தில். பெண்களை கூட்டமாகச் சந்திக்கப் போகும் அந்த நாளை எதிர்பார்த்து முகமெல்லாம் புன்னகைத்து விடை கொடுத்தார் நர்மதா அம்மா.
மகேஸ்வரி நாகராஜன்
|