சிறுகதை-கணவன் அமைவதெல்லாம்!
பால்கனியிலிருந்து சாய்ந்து நின்று கீழே ரோட்டில் நடந்து போவோரையும், பைக்கில் பறப்போரையும், பேருந்தில் நெருக்கியடித்து நிற்போரையும் காணமுடிந்தது.பரபரப்பான சாலையின் காலை நேர காட்சிகளை பார்க்க வசதியாக அமைந்திருந்தது சந்தியாவின் வீடு. காலையில் திக்காக காய்ச்சப்பட்ட புதுப்பாலில் முதல் டிகாக் ஷனை கலந்து கலக்கிய காபியை ருசித்து ரசித்து ஒவ்வொரு சிப்பாக தொண்டையில் இறக்கினாள். சந்தியாவிற்கு அடுப்பிலிருந்து இறக்கும் போதே தொண்டைக்குள் இறக்கி விடவேண்டும். எதையும் சுடச்சுட ரசித்து சாப்பிட்டு விட வேண்டும்.
ஆனால், சரவணனுக்கும் மகள் ரேஷ்மிக்கும் ஆறிய உணவுகளே பிடித்தமானது. ‘‘ஏங்க... காபி ஆறுது.” ‘‘கொதிக்க கொதிக்க எப்படி தொண்டையில ஊத்திக்கறது... அங்க எங்கயாவது வையேன்... ஆறட்டும் அப்புறம் குடிச்சிக்கிறேன்.’’ டேபிள் மேல் வைத்த காபி ஆறி சில்லென ஆனதும் அப்படியே தொண்டையில் கடகடவென தண்ணீரை போல் ஊற்றிக் கொள்வான்.
திருமணமான புதிதில் அது ஆச்சர்யமாக இருக்கும். இப்போதோ அது பழகிவிட்டது. அவரவர் விருப்பம் அவரவருக்கு என்ற ஞானம் பிறந்துவிட்டது. சுடச்சுட தோசையோ, பொங்கலோ எதுவுமே ரசித்து சாப்பிட பிடிக்காது. ஆறிய பிறகு கப கபவென்று வாயில் போட்டதை தொண்டையில் விழுங்குவதே சரவணனின் பாணி.. சாப்பிடும் போது ‘‘ஏங்க! டேபிள் மேல அப்படியே துப்பாதீங்க... சாப்பிட்டதும் தட்டுலையும் வழிச்சு வைக்காதீங்க... வேஸ்டுகளை தனியா ஒரு ப்ளேட்ல வையுங்க... டஸ்பின்ல போட்டுடலாம். வேலைக்காரம்மாவும் நம்மள மாதிரி தானேங்க”.... ‘‘ஏன்? மாசமானா சொளையா மூணாயிரம் ரூபா வாங்குறா இல்லை... அப்புறம் என்ன எச்சிலை கழுவ கசக்குதா அவளுக்கு? ஏன் நீ என்ன பண்ற...சும்மாதானே இருக்க... வழிச்சு போடு...சும்மா நொய் நொய்னு ஏதாவது சொல்லிகிட்டு”... எதுவும் பேசாமல் குப்பைகளை டஸ்பின்னில் கொட்டி தட்டை சிங்கில் போட்டாள்.
‘‘ஏங்க!.... எனக்கு காலையில பீச்சுல வாக்கிங் போகணும்னு ரொம்ப நாளா ஆசைங்க...ரேஷ்மியும் ரொம்ப ஆசைப்படுறா... இந்த சண்டே
போகலாமா?’’ ‘‘ஏன்?.... ஊதக்காத்துல சளி பிடிக்கவா? மணல்ல வாக்கிங் போறாளாமில்ல... உனக்கென்ன பைத்தியமா?’’
அமைதியாக வாயை மூடிக்கொள்வாள் சந்தியா... எதிர்த்து ஏதேனும் பேசினால் ‘‘இஷ்டமாயிருந்தா இரு... இல்லைன்னா உன் புள்ளைய தூக்கினு கெளம்பு உங்கம்மா வீட்டுக்கு” என கத்த தொடங்குவான்.
கல்யாணத்திற்கு முன் கசின் சௌமியாவுடன் கடற்கரை மணலில் கால் புதைய நடந்தது நினைவுக்கு வந்தது. ஆரஞ்சு நிற பந்தை போல எழும்பும் காலைச் சூரியனை காண கண்கோடி வேண்டும் என அடிக்கடி சொல்வாள் சந்தியா. அங்கே நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், ஜாக்கிங் ஓடுபவர்கள், ஒரு ஓரமாக கும்பலாக உலகை மறந்து சிரிப்பு யோகா செய்து கொண்டிருப்பவர்கள் என வேடிக்கை பார்த்தபடி நடப்பது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.
சரவணனுக்கு அந்த அனுபவமோ ரசனை பற்றியோ ஏதும் அறியாமல் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவளை பைத்தியம் என்று சொல்வது சற்று வருத்தமாக இருந்தது.
சரவணனுக்கும் சந்தியாவிற்கும் திருமணமாகி பத்து வருடமாகிறது. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் தான். சரவணனுக்கு பல வருடங்களாக பொண்ணு தேடியலைந்த போதும் கிடைத்தபாடில்லை. சரவணனின் ஜாதகம் அப்படியாம். கடைசியாக சந்தியாவின் ஜாதகம்தான் பத்துக்கு ஒன்பது பொருத்தமாக இருந்தது என்று காரைக்குடி ஜோசியர் சொன்ன ஒரே காரணத்திற்காகவே திருமணம் நிச்சயமானது.
சரவணனின் அம்மா சந்தியாவை பொண்ணு பார்க்க வந்தபோது.... ‘‘இதோபார்றா பொண்ணுகிட்ட பார்த்து பதமா பேசு. எதை சொன்னாலும் சரின்னு தலையாட்டி வை... பார்த்தா நல்ல விவரமான பொண்ணா தெரியுறா... நல்ல பசையுள்ள குடும்பம் ... பொண்ணு அழகா இருக்கா...ஜாதகமும் அமோகமா இருக்கு...இதைவிட நல்ல சம்பந்தம் உனக்கு அமையாது... புரிஞ்சி நடந்துக்க” என காதில் ஓதினாள்.
தனியாக பேச வந்த சந்தியாவிடம்... ‘‘என்னை பிடிச்சிருக்கா? என்ற சம்பிரதாய கேள்வியுடன் உனக்கு என்ன பிடிக்கும்” என கேட்டு வைத்தான். சந்தியாவோ சுஜாதா முதல் ரமணி சந்திரன் வரை...டைரக்டர் பீம்சிங் முதல் ஷங்கர் வரை தனது ரசனைகள் குறித்து விரிவாக சொல்லிக்கொண்டிருந்தாள்.
டூர் போவது, காலை கதிரவன் அந்தி மந்தாரை...நெல், புல் என தனது ஆழ்ந்த ரசனைகள் குறித்து ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். சரவணனும் அனைத்தும் அறிந்தவன் போல இதையெல்லாம் தானும் ரசித்ததுபோல சிரித்துக்கொண்டே தலையாட்டிக் கொண்டிருந்தான். மனதுக்குள் அம்மாவின் வார்த்தைகள் ஓடிக்கொண்டிருந்தது... சந்தியாவிற்கு லேசாக தோன்றிய சந்தேகங்களை அப்பாவிடம் சொல்ல... ‘‘இங்க பாரு சந்தியா! இப்பவே உனக்கு வயசு இருபத்தாறாகுது... உன் தங்கச்சிக்கும் வயசாகிட்டே போகுது... நான் ரிடையராகறதுக்குள்ள என் கடமைகளை முடிச்சாகணும். இதெல்லாம் ஒரு விஷயமா...பையனுக்கு நல்ல வேலை, கை நிறைய சம்பளம்... கல்யாணத்துக்குப் பிறகு நீ மணிரத்னத்தை பத்தியோ தி.ஜானகிராமனை பத்தியோ சொல்லி குடுத்துக்கோ” என தனது அப்பாவால் வாயடைக்கப்பட்டாள்.
நடுத்தரகுடும்பங்களில் எந்த விஷயங்களிலும் எப்போதும் ஜெயிப்பது யதார்த்தங்களே... ஆசைகளும் விருப்பங்களுமல்ல என்பது சந்தியாவிற்கு புரிந்து போனது. சரவணன் எப்படியோ சமாளித்து சந்தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சென்னும் மூக்கணாங்கயிறை போட்டு விட்டான். இந்த பத்து வருடத்தில் சந்தியா அந்த ஜோசியரை நினைக்காத நாளேயில்லை. இரவு டின்னருக்கு பிறகு...‘‘ஏங்க சாப்பிட்ட பாத்திரமெல்லாம் கூட கழுவி வைச்சாச்சு.
வாங்களேன் மொட்டை மாடியில ஒரு வாக் போய்ட்டு வரலாம்...ஒரே புழுக்கமா இருக்கு”... ‘‘புழுக்கமா இருந்தா ஏசி போட்டுக்கோ.... சாப்பிட்டதும் யாராவது நடப்பாங்களா? மாடியில ஒரே கொசு வேற... ஆளையே தூக்கி வெளியே போட்ரும். நான் வரலை”....என இருக்கின்ற செய்தி சேனல்களை மாற்றி மாற்றி ரிமோட்டுடன் போராடிக் கொள்வதில் பிஸியானான்.
சரவணன் கல்யாணம் ஆன நாளிலிருந்து அப்படித்தான்...வேலைக்கு போவான் பணத்தை சம்பாதித்து மனைவியிடம் கொடுப்பதோடு அவன் கடமை முடிந்துவிடும்...சோபாவில் படுத்துக்கொண்டு டிவி ரிமோட்டை மாற்றி அதிலேயே மூழ்கிப் போவான்...வேறு எதிலும் ஈடுபாடோ, ரசனையோ கூட கிடையாது.
டிவியில் பாடலோ, நல்ல திரைப்படங்களையோ பார்க்கும் பழக்கம் கூட கிடையாது. செய்தி சேனல்களிலும் வெட்டு, குத்து, கொலை என இதையே திருப்பி திருப்பி பார்ப்பதை தவிர வேறு எந்தப் பொழுது போக்கும் கிடையாது. குழந்தையை பார்த்துக் கொள்வதோ, வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வதும் கூட அவனுக்கு இயலாத காரியமாகவே இருந்தது. ‘‘ஏங்க! இப்பதான் ரேஷ்மி வளர்ந்துட்டாளே...நான் ஏதாவது வேலைக்குப் போகவா?’’ ‘‘அதான் நான் நல்லா சம்பாதிக்கிறேனே... நீ கொண்டுவர காசை வைச்சு தான் குடும்பம் நடத்தப் போறோமா? குழந்தை மூணு மணிக்கெல்லாம் வந்துருவா? நீ ஆபீஸ் போனா வர்றதுக்கே ஏழு மணியாகும்... அதுவரை யார் அவளை பாத்துக்குறது”... அன்றோடு வேலைக்கு போகும் ஆசையை குழி தோண்டி புதைத்து விட்டு...வழக்கம் போல அமைதியாக கடந்து விட்டாள்.. ஆனால், சந்தியாவின் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டதை அவளால் உணரமுடிந்தது.
நேற்று கீழ்வீட்டு சதாசிவம் மாமா, ‘‘என்ன சந்தியா பாத்து நாளாச்சு,சரவணன் எப்படியிருக்காரு..?’’ என்றார். ‘‘நல்லாயிருக்கார்... வேலைக்குப் போயிருக்கார் மாமா” என சொல்லியவளிடம்...
‘‘சந்தியா தங்கமான புருஷன் உனக்கு... அவருண்டு அவர் வேலை உண்டுன்னு வர்றதும் தெரியாம போறதும் தெரியாம...நீ கொடுத்து வச்சவ” என்றார். சந்தியா மையமாக தலையை ஆட்டி வைத்தாள் அமைதியாக.... போன வாரம் ரேஷ்மியை கூட்டிக் கொண்டு அம்மா வீட்டுக்கு போயிருந்தாள்.
‘‘ஏம்மா... மாப்பிள்ளை வரலையா?’’ ‘‘இல்லைப்பா அவருக்கு ஆபீஸ்ல ஏதோ வேலை இருக்குன்னாரு...”
சாப்பிட்டதும், சந்தியா ரேஷ்மியுடன் பெட்ரூமில் படுத்திருக்க, ஹாலில் உட்கார்ந்திருந்த அம்மாவிடம் பக்கத்து வீட்டு செண்பகம் மாமி பேசியது தெளிவாக கேட்டது...
செண்பகம் மாமி தனது மாப்பிள்ளை களை பற்றி ஏதோ அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். ‘‘ஆனா, எங்க மாப்பிள்ளை தங்கமானவர் செண்பகம்... நீங்க போடுறதை போடுங்கன்னு என் பொண்ணை கட்டிக்கிட்டு போனவரு.
இதோ பத்து வருஷமாச்சு அதை கொண்டா இதை கொண்டான்னு ஏதும் கேக்குறதுமில்லை... இருக்குற இடம் தெரியாம இருப்பாரு...எங்க மக சந்தியா கொடுத்து வச்சவ தெரியுமா?’’ என பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அம்மாவிடம் ஏதோ சொல்ல வந்த சந்தியா எதுவும் பேசாமலே கிளம்பிவிட்டாள். ஏதாவது சொன்னாலும் ‘‘வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்... நீ தான் அட்ஐஸ்ட் பண்ணிப் போகணும்...பொம்பள புள்ளையை வச்சிருக்க... புரிஞ்சி நடந்துக்கோ” என நீட்டி முழக்குவது சந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல...
இப்படியே இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது...ரேஷ்மி திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாள். தற்போது சரவணனும் சந்தியாவும் தனிகுடித்தனமாக.... ‘‘சந்தியா ஒரு டம்ளர் காபி தர்றீயா?’’
‘‘என்னது காபியெல்லாம் கிடையாது... டீதான் இருக்கு... வேணும்னா குடிங்க...இல்லைன்னா போங்க”... ‘‘சந்தியா! டாக்டர் சுகர் குறைய தினமும் ஒரு மணி நேரம் நடக்கணும்னு சொல்றார்... பார்க்ல நடக்கலாமா?’’
‘‘நான் வரலை நீங்க வேணும்னா நடங்க... உங்களுக்கு தானே சுகர்...’’ ‘‘சாப்பிட்டது ஜீரணமாகல... காலாற நடக்கலாம் வர்றீயா?’’
‘‘ராத்திரியில கொஞ்சமா தின்னா தானே.... ஏகப்பட்டதை உள்ளே தள்ளுனா அப்படித்தான். சோடா குடிங்க...இல்லைன்னா மூடிகிட்டு தூங்குங்க...சும்மா நொய் நொய்ன்னு”... ‘‘ஏம்மா!.... சூடா இரண்டு தோசை சுடுறியா... பசிக்குது”...
‘‘தோசையா? அதெல்லாம் என்னால சுட முடியாது... காலையில் எழுந்ததும் இட்லி சுட்டு மூடி வைச்சிருக்கேன்... வேணும்னா எடுத்துப் போட்டு சாப்டுங்க...நான் துணியை காயவச்சிட்டு வரேன்”... சரவணன் ஏதேனும் கேட்டால் ‘‘இஷ்டமிருந்தா இருங்க... இல்லாட்டா உங்களுக்கு எங்க சவுரியமோ அங்க போங்க” என விட்டேத்தியாக சொன்னவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
சரவணன் தன்னை பார்க்க வந்த நண்பனிடம் சந்தியாவை குறித்த தனது மன வருத்தங்களை பகிர... ‘‘ஆம்பள நீதான் கொஞ்சம் விட்டுக் குடுத்து போகணும்...இத்தனை வயசுக்கப்புறம் எங்க போய் இருப்ப... வயசான காலத்துல தனியா இருந்து கஷ்டப்பட உன்னால முடியுமா?
ஆம்பள நீதான் கொஞ்சம் பொறுத்து போகணும்... பொண்டாட்டின்னா அப்படித்தான் இருப்பா... உன் பொண்டாட்டியாவது இட்லி சுட்டு வைக்குறா... என் பொண்டாட்டி என்னயவே சுட்டுத்தர சொல்றா...எல்லாம் தலைவிதி... கர்மா பூமராங்” என்றபடி செல்பவனை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.
தனுஜா ஜெயராமன்
|