ஆடை விற்பனையில் கிராமத்துப் பெண்களும் ஜெயிக்கலாம்!
ஆள் பாதி... ஆடை பாதி என்பார்கள். அதாவது, நாம் உடுத்தும் ஆடைகளே நமக்கான அடையாளம். ஆடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவதற்கான காரணமும் இதுதான் என்று கூறலாம். பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்கள் மட்டுமில்லை, ஆண்களின் மதிப்பினை நிர்ணயிப்பது அவர்கள் அணிந்து வரும் உடைகள்தான். குறிப்பாக வீட்டில் நைட்டியோடு வலம் வரும் பெண்கள்... வெளியே கிளம்பும் போது அவர்கள் அணியும் ஆடையும் அணிகலன்களும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஒவ்வொரு பெண்களின் ஆடை, ஆபரணங்களின் தேடலுக்கு ஏற்ப இன்று சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான செய்திகள் குவிந்துள்ளன. ஆனால், என்னதான் வீடியோக்கள் மற்றும் செய்திகள் இணையத்தில் இருந்தாலும் டிசைன்கள் மற்றும் தரத்தைப் பார்த்துதான் பெண்கள் அந்த உடையினை தேர்வு செய்வார்கள். அதில் தரம் மட்டுமில்லாமல், அழகான டிசைன்களில் புடவைகள் மற்றும் சல்வார் உடைகளை விற்பனை செய்து வருகிறார் டி.எஸ்.ஆர் சேரிஸ் நிறுவனர் மைதிலி சண்முகராஜன்.
‘‘எனக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உள்ள ஒண்ணுபுரம். பிளஸ் டூ வரை அங்குதான் படிச்சேன். +2வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்வானேன். அதன் பிறகு பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிச்சேன்.
என் பெற்றோர் இருவருமே நெசவாளர்கள் தான். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போது அம்மா தறியோட்டும் சத்தம் தான் என்னுடைய தாலாட்டாக இருந்தது. எங்க ஊரில் நெசவு தொழில்தான் பிரதானம். இங்கிருந்துதான் ஹாண்ட்லூம் புடவைகள் காஞ்சிபுரத்துக்கும் மற்ற நகரங்களுக்கும் நெசவாகி செல்கிறது’’ என்று தன் பால்ய நினைவுகளை பகிர்ந்தார் மைதிலி.
‘‘படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தவுடன் வீட்டில் திருமணம் செய்து வைத்தாங்க. என் கணவர் கார் கம்பெனியில் வேலை பார்த்தார். படிச்சதுக்கு சம்பந்தமே இல்லாமல் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். மகன் பிறந்த போது, மூன்று மாதம்தான் விடுமுறை எடுக்க முடிந்தது. அம்மாவிடம் குழந்தையை விட்டு விட்டு வேலைக்கு சேர்ந்தேன். குழந்தை வளர்வதை என்னால் பார்க்க முடியவில்லை.
அவனை உடன் இருந்து வளர்க்க முடியவில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த சமயத்தில் வெளிநாட்டிற்கு வேலை காரணமாக செல்ல வாய்ப்பு வந்தது. இப்படியே இருந்தால் என்னுடைய இரண்டாவது மகனுக்கும் அன்பும், அரவணைப்பும் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்து யாரிடமும் சொல்லாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
அதன் பிறகு கணவர் வேலை பார்க்கும் ஊரில் குழந்தைகளுடன் குடியேறினேன். இந்தக் காலத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை சமாளிக்க முடியும். பசங்க வளர வளர பொருளாதார ரீதியாக எப்படி சமாளிப்பது என்று யோசனை ஏற்பட்டது. அதனால் தனியாக தொழில் செய்ய முடிவு செய்தேன்.
வீடு, குழந்தைகள், தொழில் மூன்றையும் கவனித்துக் கொள்ளலாம் என்று அழகுக்கலை, குல்லிங் ஜூவல்லரி, டெரகோட்டா போன்றவற்றை கற்றுக் கொண்டேன். ஆனால், அதைக் கொண்டு எதுவும் செய்ய முடியல. வேறு என்ன செய்வது என்றும் புரியவில்லை.
எனக்கு புடவை கட்டுவதில் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. புது டிசைன்கள் என பார்த்துப் பார்த்து வாங்குவேன். எங்க குடியிருப்பில் இருப்பவர்களும் என் புடவை கலெக்ஷன் குறித்து கேட்பார்கள். அப்போதுதான் இதையே ஏன் தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. உடனே எங்க ஊர் மற்றும் ஆரணி சுற்று வட்டாரங்களிலிருந்து பட்ஜெட் கைத்தறி புடவைகள் வாங்கி என் அப்பார்மென்ட்டில் உள்ளவர்களிடம் விற்பனை செய்தேன்.
அங்கிருந்துதான் என் பிசினஸ் ஆரம்பமானது. ஆனால், ஒரு மாதம் வாங்குவாங்க. அடுத்த மாதமும் அவர்கள் வாங்குவார்கள்னு நினைக்க முடியாது. மேலும், குழந்தைகள் இருந்ததால் என்னால் அப்பார்மென்ட்டை தாண்டி வெளியே சென்று விற்கவும் முடியல. இந்த நம்பிக்கையும் உடைந்து போனது’’ என்றவர் இணையத்தின் மூலம் தன் விற்பனையை துவங்கியுள்ளார். ‘‘2016ல்தான் சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வியாபாரம் செய்யும் டிரெண்ட் ஆரம்பமானது. டி.எஸ்.ஆர் சேரிஸ் என்ற பெயரில் இணையத்தில் பக்கம் ஒன்றை ஆரம்பித்தேன். 5000 ரூபாய் முதலீடா வெச்சு 10 செட்டிநாடு காட்டன் புடவைகளை வாங்கி இணையத்தில் போட்டோ போட்டேன். புடவையின் தரம் மற்றும் டிசைன்கள் வித்தியாசமா இருந்ததால், பதிவு செய்த பத்து புடவைகளும் விற்பனையாயின.
அதனைத் தொடர்ந்து ரீசெல்லர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதன் மூலம் நிறைய தொடர்புகள் கிடைத்தது. 2021 வரை வாட்ஸப் மட்டுமே என்னுடைய வியாபார தளமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பிரபல துணிக் கடைகளுக்கும் நான் உடைகளை சப்ளை செய்ய ஆரம்பிச்சேன்.
நான்கு வருடத்தில் ஆன்லைன் மூலம் என் பிசினஸ் ரீச்சானது. என்னைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தினால் கண்டிப்பாக ஜொலிக்க முடியும்’’ என்று புன்னகையுடன் மேலும் தொடர்ந்தார்.
‘‘ஏற்கனவே நான் இணையம் மூலமாக பிசினஸ் செய்து வந்ததால், கொரோனோ காலகட்டமும் எனக்கு கைக்கொடுத்தது. கடைகள் மூடி இருந்ததால் ஆன்லைன் வியாபாரம் பெருகினாலும், அதற்கு ஏற்ப புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ், லைவ் வீடியோ என டிரெண்டும் மாறிடுச்சு.
குடும்பத்தலைவிகள் முதல் எல்லோரும் வீட்டில் உள்ள பாட்டிகள் உட்பட ரீல்ஸ் போட ஆரம்பிச்சாங்க. நானும் அதை பின்பற்றினேன். என் புடவைகளை நானே கட்டி அதைப் பற்றி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்தேன். பிராண்ட் வேல்யூ அதிகரித்தது. ஒண்ணுபுரத்தில் ரீடைல் ஷோரூம் ஒன்றை மூன்று வருடம் முன்பு திறந்தேன். என்னிடம் உள்ள புடவைகளின் கலர் காம்பினேஷன்ஸ் மற்றும் டிசைன்ஸுக்குதான் ஃபேன்ஸ் அதிகம். ஹாண்ட்லூம் சப்ளையர்களிடம் குறிப்பிட்ட கலர் காம்பினேஷனில் டிசைன்கள் வேண்டும் என்று ஆர்டர் கொடுப்பேன். புடவைகள், சுடிதார்கள், சுடிதார் மெட்டீரியல்கள் என அனைத்தும் என்னுடைய டிசைன்கள் தான். மேலும், உடைகளுக்கு ஏற்ப ஆபரணங்களும் விற்பனைக்கு உள்ளது.
ஆரம்பத்தில் தனியாகத்தான் செய்தேன். பிசினஸ் டெவலப் ஆனதும் என் கணவரும் என்னுடன் இணைந்து பிசினஸை பார்த்துக் கொள்கிறார். மேலும் 30க்கும் மேற்பட்ட பெண்கள் என்னிடம் வேலை பார்க்கிறார்கள். கணினி பயிற்சி அளித்திருப்பதால், ஆன்லைன் வியாபாரமும் அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். பெண்கள் தனித்துவமாக இருக்கணும். கிராமம், நகரம் எங்கிருந்தாலும், ஜெயிக்க முடியும்’’ என்றார் மைதிலி சண்முகராஜன்.
கலைச்செல்வி
|