நியூஸ் பைட்ஸ்
இந்தியாவின் உசேன் போல்ட்! இந்தியாவின் வேகமான மனிதன் என்று அனிமேஷை பலரும் புகழ்கின்றனர். இத்தனைக்கும் அவரது வயது 22. 6 அடி, 2 அங்குலம் உயரம் கொண்ட அனிமேஷ்- 100 மீட்டர் தூரத்தை 10.18 நொடிகளிலும், 200 மீட்டர் தூரத்தை 20.32 நொடிகளிலும், 4x100 மீட்டர் தொடரோட்டத்தை 38.69 நொடிகளிலும் கடந்து சாதனை படைத்துள்ளார். உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தகுதியைப் பெற்ற முதல் இந்திய ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார் அனிமேஷ்.
 உலகளாவிய தலைசிறந்த தடகள வீரர்களின் பட்டியலில் 41-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மொனாக்கோவில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட முதல் இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் அனிமேஷ். இதில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், நான்காம் இடத்தைப் பிடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். உலகளாவிய 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இந்திய முகத்தையே பார்க்க முடியாது என்று பல வருடங்களாக தொடந்து வருகின்ற ஓர் அவலப் பார்வையை நீக்கியிருக்கிறார் அனிமேஷ். ஸ்கேட்டிங்கில் கலக்கும் தமிழ்ப் பையன்
சீனாவில் நடந்த இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார், ஆனந்த்குமார் வேல்குமார். இந்தியாவைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர் ஒருவர் உலக சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை.
அதுவும் தமிழ்ப் பையனான ஆனந்த்குமார் சாதித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை. இத்தனைக்கும் அவரது வயது 22தான். இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர், 500 மீட்டர், 1000 மீட்டர் என பலவிதமான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன.
இதில் சீனியருக்கான 1000 மீட்டர் இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கத்தையும், சீனியருக்கான 500 மீட்டர் இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனைப் படைத்திருக்கிறார் ஆனந்த்குமார். மட்டுமல்ல, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் ‘வேர்ல்டு கேம்ஸ்’ என்ற பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் 118 நாடுகளைச் சேர்ந்த, 3,693 தடகள விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த வேர்ல்டு கேம்ஸில் டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங் என்ற போட்டியும் இருந்தது. 1000 மீட்டருக்கான டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் கலந்துகொண்ட ஆனந்த்குமார், வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைப் பெண்கள்
சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், 48 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் பங்கேற்று, உலகின் முன்னணி வீராங்கனைகள், ஒலிம்பிக் சாம்பியன்களை எல்லாம் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார் மீனாட்சி ஹூடா.
இந்த சாம்பியன்ஷிப்பில், 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ஜெய்ஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார். இந்த சாம்பியன்ஷிப்பில், 80 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட பூஜா ராணி, வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
மட்டுமல்ல, இந்த சாம்பியன்ஷிப்பில், 80 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவில் போட்டியிட்ட நுபுர் ஷியோரன், வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்த நான்கு பேரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்டஸ்ட் கிட்
சமூக வலைத்தளங்களில் ‘இந்தியாவின் ஸ்மார்ட்டஸ்ட் கிட்’ என்று புகழப்படுகிறான், அக்னிவ். இச்சிறுவனின் வயது 6. ரோபோடிக்ஸ், குவாண்டம் பிசிக்ஸ், டைம் டிராவல், கம்ப்யூட்டர் கோடுகள் என அனைத்திலும் பெரியவர்களைவிட திறமை வாய்ந்தவனாக இருக்கிறான் இச்சிறுவன். ‘இஸ்ரோ’வில் வேலை செய்ய வேண்டும் என்பதும், ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் அவனது கனவுகளில் சில.
மகிழ்ச்சியான நகரங்கள்
இந்த வருடத்துக்கான உலகின் மகிழ்ச்சியான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இப்பட்டியலில் டென்மார்க்கின் தலைநகரமான கோபன்கேஹன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ரோட்டர்டாம், முனிச், சியோல், ஸ்டாக்ஹோம் ஆகிய உலகின் முக்கிய நகரங்களும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
த.சக்திவேல்
வாசகர் பகுதி
 முத்தான வீட்டுக் குறிப்புகள்...
1.கொய்யாப்பழம் தினம் ஒன்று வீதம் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.
2.வாழைப்பூவை சாறெடுத்து பனங்கற்கண்டோடு சேர்த்துக் குடித்தால் உதிரப்போக்கு, வெள்ளைப் படுதல் சரியாகும்.
3. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட்டுக் காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும்.
4.ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கும் முன் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலையை பொடி செய்து தூவினால் மணமாக இருக்கும்.
5.முட்டையை அரிசி தவிடு அல்லது கோதுமை தவிட்டில் வைத்தால் ஒரு மாதமானாலும் கெடாது.
6.வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது தோசை மாவில் 2 ஸ்பூன் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.
7.மாங்காய் துண்டுகளில் புளிப்பு அதிகமாக இருந்தால் சுண்ணாம்பு கலந்த தண்ணீரில் கழுவினால் புளிப்பு குறைந்து விடும்.
8.புதினா சட்னி செய்யும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலும் சிறிது வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
9.பக்கோடா கரகரப்பாக இருக்க வேண்டுமென்றால் மாவுடன் சிறிதளவு புளித்த தயிரும், நெய்யும் சேர்த்து பிசைய வேண்டும்.
10.ரவா உப்புமாவில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் ஒரு தக்காளியை அரைத்து கொதிக்கும் நீரில் கலந்து செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
11.பருப்பு வேகும்போது அதில் கொஞ்சம் பட்டையை சேர்த்தால் பருப்பு வெகுநேரம் கெடாது.
- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.
|