உன்னத உறவுகள்-அன்பின் ஆழம்!
‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று பெரியவர்கள் சொல்லுவதைக் கேட்டிருப்போம். அப்படியானால் வழி வழியாக வருவது என்று அர்த்தம். உறவுகளும் அப்படித்தான். தேடிப்போய் பெறமுடியாது. கடவுள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உறவுகளை ஏற்படுத்தித்தந்து பாசபந்தம் என்னும் வலையில் நம்மையெல்லாம் கட்டிப்போட்டு, சுக-துக்கங்களில் நமக்குத் துணைபுரியவே படைத்துள்ளார்.
பாச வலையில் சிக்காதவர்கள் மட்டுமே தனித்து துன்பங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வசதிகள் கூடிவிட்ட இக்காலத்தில், யாரைப் பார்த்தாலும் மன உளைச்சல் என்கிறார்கள்.
தன்னிறைவோடு வேலைகளை பகிர்ந்து செய்த காலத்தில் எதையுமே மனம் பாதிக்கும் அளவுக்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால், இன்று வேலைகளில் கூட கணக்குப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். ‘இதுதான் என் பணி, இதற்கு மேல் அடுத்தவர் பணி’ என்னும் பாவனையாகிவிட்டது.
சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து என்ன படிக்க வேண்டும், எதில் சாதனை புரிய வேண்டும், எப்படியெல்லாம் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று நிறையவே கற்றுத்தருகிறோம்.
ஆனால், வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும், பாச-பந்தம் என்றால் என்ன, எப்படி விட்டுக் கொடுத்து பழகுவது, முகம் சுளிக்காமல் வேலைகளை பகிர்வது, மனம் திறந்து பிறரைப் பாராட்டுவது, உறவுகளை அரவணைத்துச் செல்வது, உறவு முறை நீடித்து வைத்துக் கொள்வது போன்றவற்றை உணர்த்த பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை. வீடுதான் பல்கலைக்கழகம்.
‘இதைச் செய், அதை செய்யாதே’ என்று சொல்லிக் கொடுப்பதற்கு பதில், செயல் முறையில் நடந்து காட்டி, முன் உதாரணமாகத் திகழ வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். பல சிரமங்கள், துன்பங்கள் கண்டறிந்தவர்கள்.
அன்பின் அடித்தளம், உறவுகளின் பலத்தை நமக்கு உணரச் செய்கிறது. வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது முக்கியமில்லை. அத்தனை பேர்கள் ஒன்றாக வாழ முடிகிறதென்றால், அங்குள்ளவர்கள் அன்பால் ஒன்றிணைந்தவர்களாகத்தான் இருக்க முடியும். அன்பில்லாதவர்களோடு அதிக நாள் பயணிப்பது கடினம்.
கூட்டுக் குடும்பமாக வளர்ந்தவர்கள் எல்லோருமே, சமுதாயத்தில் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்கிறார்கள். அனைவரையும் சமமாகவும், ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் தராமல் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உடல் நிலைக்கும் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவாறு பெரியவர்கள் சாப்பாட்டு முறையை கையாண்டார்கள்.
“இரவு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு படுக்கப் போகாதே, காலாற கொஞ்சம் நட, சாப்பிட்டது செரிமானம் ஆனதும் போய் படு” என்பார்கள். இன்று டாக்டர்கள் நமக்குக் கூறும் அறிவுரை, ‘இரவு உணவை நேரத்தோடு சாப்பிட வேண்டும்’ என்பது. இப்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் வெறும் வயிறுடன் செல்கிறார்கள்.
இதையெல்லாம் அறிந்துதானோ என்னவோ, அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவோடு, சுவையான சிற்றுண்டியும் தரப்பட்டு வருகிறது. அன்பு கண்டிப்பான அன்பாகவும் இருந்தது. அக்கறை காட்டுவதாகவும் இருந்தது. தாயின் அன்பும், ரத்த பந்த உறவின் அன்பும் நமக்குக் கட்டளையிடுவது போன்று தோன்றினாலும், நம் மீதுள்ள அளவுக்கதிகமான பாசம் தான் அவை.
வீட்டிற்கு வருபவரை ‘வாங்க வாங்க’ என்று எல்லோரும் வரவேற்று உட்காரவைப்பர். வந்தவருக்கு தண்ணீர் குடிக்க கொடுத்து மரியாதை காட்டினர். அன்போடு உபசரிப்பது என்பது நம் தமிழர் பரம்பரையில் வழி வழியாக வந்த முறைதான். இப்போது ‘வரலாமா’ என்று கேட்காமல் யார் வீட்டிற்கும் சென்று விட முடியாது.
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவரவர் வீட்டுக் குழந்தைகளுடன் கூட நேரம் செலவிட முடியவில்லை. பொறுமையும் நிதானமும் இருந்தால் மட்டுமே வருபவரையும் கவனித்து மலர்ந்த முகத்துடன் வரவேற்க முடியும். நேரமும் காலமும் ஒருமுறை தவற விட்டோமானால், மீண்டும் திரும்பக் கிடைக்காது.
காலத்தின் கட்டாயம், அன்பின் நெருக்கத்தைக் கூட வெளிக்காட்ட முடியவில்லை. தூரத்து உறவுகளாகயிருப்பினும் நெருக்கம் காட்டும் பொழுது, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். திருமணமாகி, வெளிநாட்டிற்கு சென்ற பெண் தாய் வீட்டுக்கு வரும் போது, உறவினர்களுக்கு ஏற்ற பரிசுப் பொருட்களை வாங்கி வருவாள்.
மிகச் சிறிய சாவிக் கொத்தாக இருந்தாலும், நகப்பூச்சாக இருந்தாலும் அவர்களை நினைத்து அவர்களுக்காகவே வாங்கி வரும் போது அனைவர் மனதிலும் ஒரு சந்தோஷம் ஊற்றெடுக்கும். பொருளின் மதிப்பு கணக்கிடப்படாமல், அன்பின் ஆழம் மட்டுமே வெளிப்பட்டது. பெண்ணுக்குப் பிடித்ததையெல்லாம் உறவுகள் போட்டி போட்டுக் கொண்டு செய்தார்கள். அன்பின் விலை எல்லையில்லாதது.
உறவுகள் நிறைய பேர் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. அன்பு என்னும் ஆயுதம் அனைத்தையும் அடக்கி விடும். பணம் கூட சம்பாதித்து விடலாம். ஆனால், அன்பு இருந்தால் மட்டுமே நல்ல மனிதர்களை உறவாக்கிக் கொள்ள முடியும். சொந்த உறவுகளுக்குள்ளேயே இப்பொழுது ‘நான் பெரியவன்’, ‘வசதி உள்ளவன்’ என்கிற பாவனை தலை தூக்கி விடுவதால், மனதிலிருந்து ஆழமான அன்பு வெளிப்பட மறுக்கிறது.
எவ்வளவு அன்பு, பாசம் காட்டுகிறோமோ, அத்தனையும் பல மடங்காக திரும்பக் கிட்டும். ‘எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாய்’ என்பதை விட்டு ‘எத்தனை மனிதர்களை உறவாக்கிக் கொண்டாய்’ என்று நாம் கேட்க ஆரம்பித்துவிட்டால், ‘அன்பு’ என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பது நமக்கே புரியும். பொருட்களாலோ, பணத்தை தந்தோ அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்பும் பாசமும் நம் உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. பிறர் மனதில் நம் அன்பின் விதையை விதைத்து விட்டால் போதும். அது நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி என்றும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது உறுதி. மனதார அன்பைப் பரிமாறிக் கொண்டவர்கள் நம் பெரியவர்கள். நாமும் கொஞ்சமாவது அன்பான உறவுகளை சம்பாதிக்க முயற்சிக்கலாமே!
வாசகர் பகுதி
தீபாவளி பண்டிகை சிறப்பு தகவல்கள்!
 தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா ஆகும். இது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. மக்கள் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, குடும்பத்துடன் இந்த மகிழ்ச்சியான நாளைக் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்...
* இருளின் மீதான ஒளியின் வெற்றியைக் காண்கின்றனர்.
* தீய சக்திகள் அழிந்து, நன்மைகள் அடைகின்றனர்.
* அறியாமையின் இருள் நீங்கி, அறிவின் ஒளி பரவுவதை குறிக்கிறது.
* புதிய ஆடைகளை உடுத்துவது, புதிய தொடக்கத்தையும், புத்துணர்ச்சியையும் குறிக்கிறது.
* உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடி இனிப்புகள் மற்றும் பரிசுகளை பகிர்வது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.
தென்னிந்தியாவில் கிருஷ்ணர்நரகாசுரனை வதம் செய்ததன் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முன் அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்வது எதிர்மறை ஆற்றலை நீக்கி, ஆன்மீக சுத்திகரிப்பை அளிப்பதாக நம்பப்படுகிறது.
செல்வம் மற்றும் வெற்றியை குறிக்கும் லட்சுமி தேவியை இந்த நாளில் மக்கள் வழிபடுகிறார்கள்.மொத்தத்தில் தீபாவளி என்பது குடும்பங்கள் ஒன்றாகக் கூடி, தீமையை அழித்து, நன்மையை வரவேற்று, செழுமையைக் கொண்டாடும் ஒரு முக்கியமான ஒளிமயமான பண்டிகையாகும்.
- வாசுகி, சென்னை.
|