விளையாட்டில் ஒழுக்கம் அவசியம்!
“பெண்கள் விளையாடி என்ன சாதிக்கப் போகிறார்கள்..?” இந்த வார்த்தைகள், பெரிய கனவுகளைக் காண முயற்சிக்கும் எண்ணற்ற இளம் பெண்களின் இறக்கைகளை முறிப்பதற்குப் போதுமான அளவு கூர்மை படைத்தவை. சென்ற வாரம் அமெரிக்காவின் லிவர்பூலில், 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்திற்கான போட்டியின் இறுதி நாளில், 48 கிலோ பிரிவில், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் நசிம் கைசைபேயை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார் 24 வயதான மீனாட்சி ஹூடா.  ‘‘முந்தைய தினத்தில் ஜெய்ஸ்மின் லம்போரியா இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது பதக்க தர வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. நானும் தங்கம் வென்றால் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அனைவருக்கும் என் மீது நம்பிக்கை இருந்தது. நான் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் மீனாட்சி ஹூடா.
ஹரியானாவின் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள ரூர்கி, மீனாட்சியின் சொந்த ஊர். சாதாரண குடும்பம். மீனாட்சியின் தந்தை ஸ்ரீகிருஷ்ணன், நான்கு குழந்தைகளுடன் குடும்பத்தை நடத்த ஆட்டோ ரிக் ஷாவை நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். மீனாட்சி கடைசி மகள். ‘‘சிறந்த விளையாட்டு வீராங்கனையாக பயிற்சி மட்டுமே போதாது.
சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகள்.... முக்கியமாக விளையாட்டு உபகரணங்களும் தேவை. அதற்கான பண வசதி குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், நாங்க சாதாரண குடும்பம்தான். அப்பா ஆட்டோ ஓட்டித்தான் எனக்கு அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். பாதாம், பிஸ்தா எல்லாம் எங்களால் வாங்க முடியாது என்பதால், வீட்டில் இருக்கும் ரொட்டி, பால், தயிர் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தேன்.
குத்துச்சண்டை பயிற்சியில் நான் தற்செயலாகத்தான் சேர்ந்தேன். எங்க ஊரில் ஸ்டேடியம் உண்டு. அங்கு குத்துச்சண்டைக்கு பயிற்சி நடக்கும். அதைப் பார்க்க செல்வேன். அந்த விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது.
நானும் குத்துச்சண்டை பயிற்சியில் சேர பெற்றோர்களிடம் கேட்ட போது அவர்களும் சம்மதித்தார்கள். ஆனால், கிராம மக்களின் மனநிலையை மாற்றுவது கடினமாக இருந்தது. தொடக்கத்திலேயே, ‘பெண்கள் விளையாடி என்ன சாதிக்கப் போகிறார்கள். பதக்கங்கள் கிடைக்க நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகும்.
நல்லா படிக்கச் சொல்லுங்கள். பெண்களுக்கு ஏற்ற விளையாட்டு இது இல்லை’ என்று அக்கம் பக்கத்தினர் சொல்லத் தொடங்கினர். ஆனால், நான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
அதற்கு முக்கிய காரணம் என் சீனியர்கள் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப் பெற்று பதக்கங்கள் வென்று அரசு வேலைகளில் அமர்ந்த போதுதான் எங்க ஊர் மக்களின் மனநிலை மாறியது. இப்போது எங்க ஊரில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துச் சண்டை பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த விளையாட்டாக இருந்தாலும், தோல்வியும் சந்திக்க வேண்டும். நானும் தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். அது ஒரு வித வலியினை கொடுக்கும். அதை எவ்வாறு வெற்றிக் கனியாக மாற்ற வேண்டும் என்று யோசித்து தீவிர பயிற்சி எடுத்தேன். குறைகளை சரி செய்ய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அதுதான் என்னுடைய முதல் உலக சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் பெற வழிவகுத்தது.
2016ல் நடைப்பெற்ற தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முதல் தங்கம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து 2021ல் ஹிசாரில் நடந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இளைஞர் உலக சாம்பியன் ஜோதி குலியாவை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் பெற்றதுதான் என்னுடைய விளையாட்டு துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையில் எனக்கு வேலை கிடைத்தது. அதில் கிடைத்த ஊதியம் என் குடும்பத்திற்கு பெரிய உதவியாக அமைந்தது. அப்பாவிற்கு சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொடுத்தேன்.
எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுங்கினை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக நினைக்கும் நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியாது. உணவு, ஓய்வு உட்பட அனைத்தையும் கவனமாக திட்டமிட வேண்டும். உடல் நலம் கெட்டுவிட்டால், பயிற்சி செய்ய முடியாது. விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற முடியாமல் போகும்.
இப்படி பல விஷயங்களை நாம் கருத்தில் கொண்டால்தான் விளையாட்டில் ஜெயிக்க முடியும்’’ என்று கூறும் மீனாட்சி, பெண்கள் விளையாடி என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று கேலி பேசியவர்களுக்கு உலக சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தக்க பதிலை கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
|