காஃபி மூலம் அன்பை பரிமாறிக் கொள்ளலாம்!



விடியற்காலை எழுந்தவுடன் ஆவிப் பறக்க காஃபி டிகாக்‌ஷனை கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு வாய் சுவைக்கும் போது ஏற்படும் அந்த 1000 வால்ட்ஸ் புத்துணர்ச்சிக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு நாளையும் உற்சாகமாக மாற்றும் திறன் காஃபிக்கு உண்டு. 

டிகாக்‌ஷன் கொதிக்கும் போதே அதில் வரும் வாசனை நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் திறன் உள்ளது. அப்படிப்பட்ட காஃபியினை மூன்று தலைமுறையாக வழங்கி வருகின்றனர் பெங்களூரின் பிரபல ‘கோத்தாஸ்’ காபி நிறுவனத்தினர்.‘‘தெலுங்கில் கொத்தவாலு என்றால் புதியவர்கள் என்று அர்த்தம். என் அப்பா பெங்களூரில் காஃபி பிசினஸ் ஆரம்பித்த போது, கொத்தவாலு என்றுதான் அவரை அழைத்தார்கள். 

அதுவே கோத்தாஸ் என்று எங்களின் பிராண்டின் பெயராக மாறியது’’ என்று பேச ஆரம்பித்தார் நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீநாதன். 1969ம் ஆண்டு நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவிற்கு நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அவர் ஆரம்பித்த இந்தக் காஃபி நிறுவனத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், நான் படித்து முடித்து வருவதற்குள் அப்பா தவறிட்டார். 

அவருடைய கனவினை நானும் என் மகனும் பூர்த்தி செய்து வருகிறோம். படிப்பை முடித்துவிட்டு 1973ல் நான் பிசினசை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். படிப்படியாக அதனை விரிவாக்கம் செய்தேன். இப்போது கோத்தாஸ் பில்டர் காஃபி உலகில் ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்க்க அப்பா இல்லை என்றாலும் அவரின் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு இருக்கு.

என் தாத்தா நகை பிசினஸ்தான் செய்து வந்தார். அதை தன் சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதால், அப்பா சுயமாக இந்தத் தொழிலை ஆரம்பித்தார். ஒருவரின் விடியல் பில்டர் காஃபி இல்லாமல் இருக்காது. என்றும் நிலைத்திருக்கும் தொழில் என்பதால் அப்பா இந்த பிசினஸில் இறங்கினார்.

முதலில் சிறிய கடையாக காஃபி கொட்டைகளை வறுத்து அரைத்து பில்டர் காஃபிப் பொடியை விற்பனை செய்தார். நாளடைவில் ஒரு கடை மூன்றாக உயர்ந்தது. நான்காவது கிளையை திறக்கும் முன் அப்பா தவறிட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு கடையின் நிர்வாகத்தினை முழுக்க நான் ஏற்றுக் கொண்டேன்’’ என்றவர் பில்டர் காஃபி பொடிகளின் சுவையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து விவரித்தார்.

‘‘எங்களின் மூன்று கிளைகளில் காஃபி கொட்டைகள் ஒரே ரகமாக இருந்தாலும் அதனை அரைக்கும் இயந்திரம் வெவ்வேறாக இருந்தது. அது சுவையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்கள் இதை சுட்டிக் காட்டிய போதுதான் எங்களுக்கு புரிந்தது. அதனால் அனைத்து கிளையிலும் ஒரே சுவையில் பில்டர் காஃபிப் பொடியினை அளிக்க வேண்டும் என்றால் இதனை சென்ட்ரலைஸ் செய்ய வேண்டும். 

ஒரே இடத்தில் காபிக் கொட்டைகள் வறுக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொடுக்க ஆரம்பித்தோம். முதலில் பெங்களூர் முழுதும் விற்பனை செய்தோம். அடுத்து சென்னை மற்றும் ஆந்திராவிலும் விற்பனையை துவங்கினோம். 

இதன் மூலம் எங்களின் அனைத்து கிளைகளிலும் பில்டர் காஃபியின் சுவை ஒரே சீராக கொடுக்க முடிந்தது. தொடர்ந்து 2014ல் ஜிகினியில் பெரிய அளவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, எங்களின் நேரடிக் கண்காணிப்பில் செயல்பட துவங்கியது. 

இது எங்களின் பில்டர் காஃபியின் தரத்தினை அதிகரிக்க செய்தது மட்டுமில்லாமல் பல புதிய யுக்திகளை பிசினஸில் அறிமுகம் செய்யவும் உதவியது. எங்க தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் ஆட்டோமெட்டிக் முறையில் இயங்கக்கூடியது. இதன் மூலம் காஃபிக் கொட்டைகள் சரியான பதத்திற்கு வறுக்கப்பட்டு, சீராக கலக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது. இதுவும் எங்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது’’ என்றவரை தொடர்ந்தார் நிறுவனத்தின் இயக்குனரான அவரின் மகன் நித்தின்.

‘‘75 வருடங்களுக்கு முன் என் தாத்தாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் எக்ஸ்போர்ட் செய்து வருகிறோம். பில்டர் காஃபி பிரியர்களின் தேவையை அறிந்து இந்த 75 வருடத்தில் பல புதிய ரக காஃபித் தூள்கள், வறுக்கப்பட்ட காஃபிக் கொட்டைகள், இன்ஸ்டன்ட் காஃபித் தூள், ேகால்ட் காஃபி என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்து வருகிறோம்.

மேலும், 60ல் இருந்து 100 ஆக எங்களின் நேரடி விற்பனை கடையினை அதிகரித்து இருக்கிறோம். துபாயில் எங்களின் முதல் கடையினை தொடர்ந்து சென்னை, ஐதராபாத்திலும் துவங்கி உள்ளோம். பில்டர் காஃபித் தூள்கள் மட்டுமில்லாமல் காஃபி வெண்டிங் இயந்திரங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் அளித்து வருகிறோம். அதைத் தொடர்ந்து கோல்ட் காஃபியும் உள்ளது.

2013ல் நான் இந்த பிசினஸில் இணைந்தேன். மூன்று வருடத்தில் பில்டர் காஃபிப் பொடி விற்பனை மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக எங்களை அறிமுகம் செய்ய விரும்பினோம். 

அதன் அடிப்படையில் பில்டர் காஃபி அவுட்லெட்களை திறந்தோம். காஃபிப் பிரியர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தரமான பில்டர் காஃபியினை குடிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்குத் தரமான காஃபிகளை கொடுக்க விரும்பி வெண்டிங் இயந்திரங்களை அறிமுகம் செய்தோம். 

தற்போது 3000 இயந்திரங்கள் இயக்கத்தில் இருந்தாலும் வரும் ஐந்தாண்டு காலத்தில் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறோம். பில்டர் காஃபிப் பிரியர்களை லைட், மீடியம், ஸ்ட்ராங் என மூன்று ரகமாக பிரிக்கலாம். அதற்கேற்ப நாங்களும் நார்மல், பிரிமியம், சிக்னேச்சர் என பாரம்பரிய சுவை மாறாமல்கொடுத்து வருகிறோம்’’ என்றவர் கைவசம் பல திட்டங்கள் இருப்பதாகவும் அதனை ஒன்றின் பின் ஒன்றாக செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

கணேஷ் ஸ்ரீநிவாஸ், தலைமை நிர்வாக அதிகாரி

இந்த பிராண்ட் 75 வருஷம் பழமையானது. காஃபிக் கொட்டைகளை வறுத்து அரைத்து அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துதான் இந்தத் தொழிலை ஆரம்பித்தார் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீகிருஷ்ணய்யா செட்டி அவர்கள். காலை ஒரு கப் காஃபியுடன்தான் அனைவரின் விடியலும் துவங்கும். 

அதன் பிறகு அலுவலகத்திலும் இந்த பந்தம் தொடரும். இன்றைய இளைய தலைமுறையினரிடமும் காஃபி குடிக்கும் கல்ச்சர் பெருகி வருகிறது. குறிப்பாக கஃபேயில் ஒரு கப் காஃபியை சுவைத்தபடி தங்களின் அன்பினை பரிமாறிக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே சிறிய அளவில் மார்டனாக கஃபேக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பெரும்பாலான டீக்கடைகளில் டீதான் அதிகம் விற்பனையாகும். காஃபியும் இன்ஸ்டன்ட் பவுடர் என்பதால், பில்டர் காஃபிக்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அந்த தாக்கத்தை தீர்த்துக் கொள்ள பெரிய உணவகங்கள் பில்டர் காஃபியினை கொடுக்க ஆரம்பித்தார்கள். 

ஒரு நல்ல பில்டர் காஃபிக்காக ஓட்டலுக்கு செல்பவர்களும் உள்ளனர். அவர்களின் தேவையை புரிந்து கொண்டு தான் டீக்கடை போல் காஃபிக்காக மட்டுமே கடையினை ஆரம்பித்தோம். அதில் பில்டர் காஃபி வெண்டிங் மெஷினை அறிமுகம் செய்தது மட்டுமில்லாமல் அதனை எக்ஸ்போர்ட்டும் செய்கிறோம்.

பில்டர் காஃபிப் பொடி மட்டுமில்லாமல் அதனை மதிப்புக்கூட்டும் பொருளாக அறிமுகம் செய்ய நினைத்தோம். அதன் முதல் கட்டம் டிகாக்‌ஷன், இன்ஸ்டன்ட் காஃபி பவுடர் மற்றும் கோல்ட் காஃபி. எங்களின் பிராண்டினை சர்வதேச மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும், கிளைகளை அதிகிரிக்க வேண்டும் என எதிர்கால திட்டங்கள் பல உள்ளது’’ என்றார்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: வெங்கடேஷ்