கிச்சன் டிப்ஸ்



* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் அரை மூடி துருவிய தேங்காயுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து பர்ஃபி செய்து துண்டுகள் போட்டால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

* கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும் போது பதம் தவறி நீர்த்து விட்டால் சிறிது சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால் அல்வா கெட்டிப்படும். 

* மைதா மாவு, சிரோட்டி ரவை இரண்டையும் சம அளவில் கலந்து சர்க்கரை பொடி, நெய் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, அதை பிடித்த வடிவத்தில் நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் புதுவிதமான ஸ்வீட் தயார்.

* இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாசிப்பருப்பு 2 கப், கடலை பருப்பு 1 கப் அரைத்து மைசூர் பாகு செய்தால் சாப்ட் அண்ட் டேஸ்ட்டாக இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*தேங்காய் பர்ஃபி செய்யும்போது முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப் விட்டுக் கிளறினால் மிருதுவாகவும், மைசூர்பாகு போன்ற அபார 
ருசியுடன் இருக்கும்.

*தேன்குழல், முறுக்கு, சீடை போன்றவற்றைச்செய்யும்போது மாவை வாணலியில் வறுத்துக்கொண்டு பிறகு சூடான வெந்நீர் விட்டுப் பிசைந்து செய்தால் மொறுமொறுவென்று வரும்.

*பட்சணம் நீண்ட நாட்கள் மொறு மொறுப்பாக இருக்க ஒரு துணியில் உப்பை வைத்துக்கட்டி பட்சண டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடினால் பட்சணம் மொறு மொறுப்பாக இருக்கும். 

*காராபூந்தி முத்து முத்தாக இருக்க கடலை மாவுடன் ஒரு கரண்டி அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூந்தி கரண்டியில் ஊற்றி தேய்க்க வேண்டும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*முறுக்கு, தட்டை  செய்யும்போது மாவுடன் தேங்காய் எண்ணெய் விட்டுப் பிசைந்து செய்தால் வேறு எண்ணெயில் சுட்டாலும் தேங்காய் எண்ணெயில் செய்தது போல 
வாசனையாக இருக்கும்.

*மெதுவடை  செய்யும் போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊறவைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். 
வடை  வித்தியாசமான  சுவையுடன் இருக்கும்.

*பலகாரங்கள் செய்யும்போது முந்திரிப்பருப்புக்கு பதில் முற்றிய தேங்காயைத் துண்டாக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் முந்திரிப் பருப்பு போட்டது போலவே இருக்கும்.

- கீதா ஹரிஹரன், கேரளா.

*புழுங்கல் அரிசியை களைந்து உலர வைத்து, மாவாக்கி தட்டை செய்தால் சுவை கூடும். கரகரப்பாகவும் இருக்கும்.

*முறுக்கு மாவில் தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்தால், சுவையும், மணமும் கூடும்.

*வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களிலும் முறுக்கு, தட்டை செய்யலாம். சத்து நிறைய கிடைக்கும்.

*பட்சணம் செய்யும் போது அதில் சுக்குப் பொடி சிறிது கலந்து கொண்டால் வாசனையாகவும் இருக்கும். ஜீரணமும் ஆகும்.

- ஆர்.பத்மப்ரியா, ரங்கம்.

* பாதுஷா மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு செய்து சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக வரும்.

* ஜாங்கிரி செய்வதற்கு உளுந்தை கிரைண்டரில் அரைப்பதைவிட ஆட்டுக்கல்லில் அரைத்தால் நல்லது. 

* மைசூர்பாகை வெறும் நெய் மட்டும் சேர்த்துச் செய்யாமல் சிறிதளவு ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துச் செய்தால், மைசூர்பாக் நன்கு பூத்து வரும்.

* லட்டு, அல்வா, பாதுஷா முதலிய இனிப்பு வகைகள் செய்யும்போது ஜீரா இனிப்புகளில் பூக்காமல் இருக்க பாகு வைக்கும்போதே அரை மூடி எலுமிச்சைப் பழம் பிழிந்துவிடவும்.

- எம்.நிர்மலா, புதுச்சேரி.

* தேங்காய் பர்ஃபி தூளாக உதிர்ந்து விட்டால் அதனுடன் வறுத்த ரவை சேர்த்து, மிக்ஸியில் பொடித்து, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்த்து உருண்டைகளாக பிடித்தால் சூப்பர் சுவையில் ரவா லாடு தயார்.

* மைசூர்பாகு உதிர்ந்து தூளாகிவிட்டால், அதனுடன் நெய்யில் வறுத்த கோதுமை மாவு சேர்த்து உருண்டைகளாக பிடிக்கலாம்.

- சங்கரி வெங்கட், சென்னை.

வேர்க்கடலை ஸ்டஃப்டு சாக்லேட் பால்ஸ்!

தேவையானவை : வேர்க்கடலை - அரை கப், கிரீம் பிஸ்கெட் - 4, உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு. 

செய்முறை: முதலில் வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். பிடித்த உருண்டைகளை ஃபிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும். இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக நனைத்து ஒரு தட்டில் வைத்து, மீண்டும் ஒரு மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும். 

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.