நர்சிங் ஸ்டிரைக் பற்றி தெரியுமா?



பிள்ளை வளர்ப்பு என்றாலே நம்மைச் சுற்றி ஆயிரம் கட்டுக் கதைகள் இருக்கும். ஆயிரம் விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு நமக்கிருக்கும் ஒரே ஒரு உண்மையான வழி அனுபவம் மட்டும்தான். ஆறு மாத மகன் திடீரென ஒருநாள் தாய்ப்பால் அருந்த மறுத்துவிட்டான். 
அவனுக்கு இன்னும் முழுமையாக ஆறு மாதம் முடியவில்லை என்பதால், வேறு எந்த உணவும் கொடுக்கவில்லை. ஏன் அவன் திடீரென தாய்ப்பாலை குடிக்க மறுத்தான், பின்பு எப்படி குடித்தான், இதற்கான விழிப்புணர்வு என்ன, இதில் உள்ள கட்டுக் கதைகள் என்ன என்பதை பெண்களும், தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

நர்சிங் ஸ்டிரைக்...

தாய்ப்பாலை குடிக்க திடீரென மறுப்பதற்கு மருத்துவத்தில் ‘நர்சிங் ஸ்டிரைக்’ (Nursing Strike) எனச் சொல்லப்படுகிறது. ஸ்டிரைக் என்றால் செய்யும் வேலையை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது மறுப்பது. அப்படி குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை தற்காலிகமாக மறுப்பதே நர்சிங் ஸ்டிரைக்.

இது ஆண் குழந்தை, பெண் குழந்தை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி, மற்ற பாலும் உடன் வேறு உணவுகளும் கூடவே தாய்ப்பாலும் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மேலும், இது ஆறு மாதத்தில் இருந்து மூன்று வயது வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

 எதனால் வருகிறது...?

*தாய்ப்பால் குடிப்பது என்பது அம்மாவின் உடலும் மனமும் மற்றும் குழந்தையின் உடலும் மனமும் சார்ந்தது. இதில் எங்கே பிரச்னை நிகழ்ந்தாலும் நர்சிங் ஸ்டிரைக் வருகிறது. அதாவது, தாய்ப்பால் அருந்தும் போது குழந்தைக்கு ஏதேனும் பயம், பதட்டம் ஏற்பட்டாலோ உதாரணமாக, அம்மா தாய்ப்பால் அருந்தும் போது திடீரென தும்முவது, அதிகமாக உரத்துப் பேசுவது, கோபப்பட்டு குழந்தையை குலுக்குவது, அடிப்பது போன்ற விஷயங்கள்.

*மேலும், அதிகமான சத்தத்தில் திட்டுவது. 

*தாய் புதிதான சோப்பு, வாசனை திரவியம் போன்ற விஷயங்களை உபயோகிக்கும் போது அந்த வாசனை பிடிக்காமல் குழந்தைக்கு மாற்றம் நிகழலாம்.

*சில தாய்மார்களின் தினசரி வாழ்க்கை முறையில் வேறு மாற்றங்கள் நிகழலாம். அதாவது, திடீரென வேலைக்கு செல்வது அல்லது வீட்டில் இருந்தே வேலை செய்யத் துவங்குவது போன்ற நேரத்தில் குழந்தையை சரியாக கவனிக்காமல் இருப்பது. இதனால் மற்றவர்கள் குழந்தையை அதிகம் தூக்குவது, கவனித்துக் கொள்வது. 

*சில நேரம் குழந்தைகளுக்கு பாலில் உள்ள சுவை பிடிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, தாய் திடீரென ஒருநாள் கசப்பான ஒரு உணவையோ அல்லது வேறு ஏதேனும் புளிப்பாகவோ, காரமாகவோ அதிகமான அளவில் உண்ணும்போது அது தாய்ப்பாலில் கலக்கும். 

சுவை மாறுபாட்டால் குழந்தைக்கு பிடிக்காமல் போகலாம். இப்படி தாயிடமும் அல்லது தாயை சார்ந்த விஷயங்களிலோ சிக்கல்கள் இருக்கும் போது அந்தக் குழந்தை திடீரென பாலை குடிக்க மறுத்து விடுகிறது.

வந்தால் என்ன செய்வது..?

*குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லை என்பதால் நாம் பாசத்தில் பயப்படுகிறோம். சிலர் பயத்தினை கோபமாக வெளிப்படுத்துகிறோம். இதனால் குழந்தையை சில நேரம் அடிக்கிறோம் அல்லது திட்டுகிறோம். ஏன் பால் குடிக்க மறுக்கிறாய் என்று கோவத்தை குழந்தையிடம் காட்டுகிறோம். 

இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொறுமையை கையாள்வது மிகவும் அவசியம். குழந்தை திடீரென எப்படி மாறியது, எந்த இடத்தில் மாற்றம் நிகழ்ந்தது என்பதை பொறுமையாக உணர வேண்டும். அதன் பின் அதனை சரி செய்ய முயல வேண்டும்.

*தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு நாம் தண்ணீர், இளநீர், வேறு ஏதேனும் பழச்சாறு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு வாய் வறட்சி இல்லாமல் இருக்கும். மேலும், ஊட்டச்சத்திற்கு உணவுகளை, பவுடர் பாலினை அறிமுகம் செய்யலாம். ஆனால், இதனை நம் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவருடன் ஆலோசித்து தர வேண்டும்.

*வேறு உணவு உண்ணும் அல்லது வேறு பால் அருந்தும் குழந்தைகளுக்கு அந்த மாதிரியான பிடித்த உணவுகளை தந்து அவர்களை சமாதானம் செய்யலாம்.

*சிலர் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவை தாய்ப்பால் கொடுப்பார்கள். அப்படி நாம் கொடுக்கும் போது குழந்தை மறுக்கும். இதனால் அவர்களை நாம் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ கூடாது. அப்படி குடிக்காதபோது நாம் அவர்களை அரவணைத்து, சமாளித்து எப்படியாவது குடிக்க வைக்கலாம். அல்லது அந்த நேரம் கொடுப்பதை தவிர்க்கலாம்.

 மூடநம்பிக்கைகள்...

* இது அறிவியல் பூர்வமான ஒரு விஷயம் என்பதை உணராமல் நம் வீட்டில் உள்ள பெரியோர்களோ அல்லது வேறு யாரோ நமக்கு தாய்ப்பால் இல்லை அதனால்தான் குழந்தை குடிக்க மறுக்கிறது. தாய்ப்பால் சுரக்க வேறு சில வழிகளை செய்ய வேண்டும் என பயமுறுத்துவார்கள்.

*தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு வேறு உணவுகள் பிடித்திருப்பதால்தான் வேறு உணவுகளை உண்ண விருப்பப்படுவதால்தான் தாய்ப்பாலை குடிக்க மறுக்கிறது என நினைப்பார்கள்.

* பாட்டில் பால் அருந்தும் குழந்தைகள் அது அச்சுவை பிடித்ததால் தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது என நினைத்து அந்தப் பாலை குடிக்க வைப்பார்கள்.

* தாய்மார்கள் தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய நேரம் வந்ததால்தான் குழந்தை இப்படி செய்கிறது, அதனால் தாய்ப்பாலை நிறுத்த வேண்டும் என்றும் சொல்வார்கள்.

* இவையெல்லாம் மூடநம்பிக்கைகளே. குழந்தையின் எந்தப் பிரச்னை சிக்கலாக இருக்கிறதோ, அந்தப் பிரச்னையை நாம் சரி செய்ய வேண்டும். பின்பு நாம் பொறுமையாக இருக்க வேண்டும். குழந்தை தாமாக திரும்பி பால் குடிக்கும் வரை நாம் மிகவும் வற்புறுத்தாமல் குழந்தைக்கு தெரியாதவாறு மென்மையாக கையாண்டு இதனை சரி செய்ய வேண்டும். பின்பு இயல்பாக குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்.

மொத்தத்தில் தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு என்பதால் மேலே சொன்ன மூடநம்பிக்கைகளை தவிர்த்து பயப்படாமல் இருப்பது அவசியம். பொறுமையாக காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும். இரண்டு வயது வரை தாய்ப்பால் மிகவும் முக்கியமான உணவு என்பதால் தாய்ப்பாலுக்கு முன்னுரிமை அளிப்பதே நல்லது.

பவுடர் பால் வேண்டாம்!

மற்றவர்களைப் போல முதலில் பயந்து, குழந்தையை வற்புறுத்தி பால் குடிக்க வைக்கக்கூடாது. பால் குடிக்கும் நேரம் மட்டும் அழுது கொண்டே இருப்பார்கள். குழந்தைக்கு ஐந்து மாதம்தான் என்பதால் வேறு உணவுகள் கொடுக்க முடியாது. 

பசியினால் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பார்கள். அதற்கான சில யுக்திகளை பயன்படுத்தலாம். முதலில் குழந்தையை மிகப் பொறுமையாகக் கையாள வேண்டும். அமர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து நடந்து கொண்டோ அல்லது நின்று கொண்டு கையில் வைத்து தாலாட்டியவாறு கொடுக்கலாம். 

ஆரம்பத்தில் பகல் நேரங்களில் மறுக்கும் குழந்தை, தூங்கும் நேரம் வரும்போது வேறு வழியில்லாமல் குடிக்கத் துவங்குவார்கள். பகல் நேரங்களில் தாய்ப்பாலுக்கு ஈடாக இளநீர், 
தண்ணீர் கொடுக்கலாம். இரண்டு நாட்களில் குழந்தை இயல்பு நிலைக்கு மாறத் துவங்கி முற்றிலும் பழையபடி பால் குடிக்கத் துவங்க ஆரம்பிப்பார்கள். 

நீங்களும் இதையேதான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் மருத்துவரை அணுகலாம். பயப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண விஷயம். மேலும், தாய்ப்பால் என்பது முக்கியமான ஒரு உணவு என்பதால் இதைத் தவிர்த்து நாம் வேறு முறைகளை செய்வது தவறு என்பதுதான்.

குழந்தை தூங்கிக் கொண்டே பாலினை குடிக்கும் போது, எதிர்பாராத விதமாக நாம் தும்மும் போது, சில சமயம் குழந்தை பயந்துவிடுவார்கள். அந்த பயத்தினை நீக்க, விளையாடும் போது நாம் தும்முவதை விளையாட்டாக செய்துகாட்டி சிரிக்க வைக்கலாம். அவர்கள் பயம் மறந்து எப்போது தும்மினாலும் வேடிக்கையான ஒன்றாக நினைத்து சிரிப்பார்கள். 

இந்தப் பிரச்னை நிகழ்ந்தால், சிலர் தாய்ப்பாலை முற்றிலும் தவிர்த்துவிட்டு பவுடர் பாலுக்கு மாறுகிறார்கள். இதனால் குழந்தை தாய்ப்பாலினை பிறகு கேட்கவே மாட்டார்கள். அவ்வாறு செய்வது தவறு. குழந்தைக்கு ஒரு வருடம் வரை தாய்ப்பால் முக்கியம். 

சிலர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களின் தினசரி முறையில் மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாகவும் குழந்தை பால் குடிக்க மறுப்பார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடலாம். பால் குடிக்கவில்லை என்றால் வற்புறுத்த வேண்டாம். குழந்தைகள் தானாகவே தாயின் வழக்கத்திற்கு பழகிவிடுவார்கள். 

நந்தினி சேகர்

வாசகர் பகுதி

தீபாவளியின் ஐதீகங்கள்!

தீபாவளி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘விளக்குகளின் வரிசை’ என்று பொருள். அன்றைய தினம் பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதன்மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும். தீபாவளி அன்று, மாலை வீட்டின் முன் குறைந்தபட்சம் இரண்டு அகல் விளக்குகளாவது ஏற்ற வேண்டும். 

அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்மிடமுள்ள தீய விஷயங்கள் அனைத்தும் அழிந்து நல்ல விஷயங்கள் நடக்கும். அதில் சிறிதளவு பசும்பால் கலந்து குளித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெறும். 

வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். இந்த பூஜையில் ஐந்து பழங்கள் மற்றும் மூன்று பூக்கள் படைக்க வேண்டும். குறிப்பாக செவ்வாழை, பெருநெல்லி மற்றும் மாதுளையும், பூக்களில் மல்லிகை, தாமரை மற்றும் வாழைப்பூ கட்டாயம் இடம் பெற வேண்டும். புத்தாடைகள் அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெற சகல செளபாக்கியமும் நிலைத்திருக்கும். 

அன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது முக்கியமானது. அன்று செய்யப்படும் பூஜையும், படையல்களும் நம் முன்னோர்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள். அட்சய திரிதியை சமயத்தில் வீட்டிற்கு நகைகள் வாங்கி வந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். 

ஆனால், வடநாட்டில் தீபாவளி அன்றுதான் நகைகள் வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் சிறு வெள்ளியாவது வாங்குவார்கள். எதையும் வாங்க முடியாதவர்கள் கல் உப்பை வாங்கி வீட்டில் வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். 

வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வரும். சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். சங்கு பூஜை செய்தும் வழிபடலாம். 

தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நல்ல பலன்கள் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகும்.வீட்டை மலர்கள் கொண்டு குறிப்பாக சாமந்திப் பூக்களை கொண்டு அலங்கரித்தால் வீட்டில் அதிர்ஷ்டம் தங்கும். 

- கோவீ.ராஜேந்திரன், மதுரை.