கர்ப்பிணிகளுக்கு மட்டும் 50%



‘இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என்ற சினிமா பாடலை தெரியாத உணவுப் பிரியர்களே இல்லை. இப்பாடல் வரிக்கேற்ப ருசியான சாப்பாட்டினை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஊருக்கு பயணம் செல்லும் போதும், அங்கு கேட்கும் முதல் கேள்வி, ‘இங்க எங்க சாப்பாடு நல்லா இருக்கும்?’ என்பதுதான். சிலருக்கு முழு மீல்ஸ் வாழை இலைப் போட்டு சாப்பிட பிடிக்கும். 

ஒரு சிலர் அசைவ உணவினை தேடிப் போய் சாப்பிட விரும்புவார்கள். ஆனால், வெரைட்டி சாப்பாடு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் பள்ளி நாட்கள்தான் நினைவிற்கு வரும். தேங்காய் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் என நித்தம் ஒரு சாப்பாட்டினை அம்மாக்கள் கட்டித் தருவது வழக்கமாக இருந்தது. 
நம் பள்ளிப்பருவ காலத்திற்கு அழைத்து சென்று, நம் மனதில் பழங்கால நினைவுகளை உணவு மூலமாக மீண்டும் மலரச் செய்து வருகிறார் ‘வளைகாப்பு’ உணவகத்தின் உரிமையாளரும் யோகா-இயற்கை மருத்துவருமான பிரியதர்ஷினி ராஜசெல்வம். 

‘‘எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி. திருமணமானது திண்டுக்கல். நான் சென்னையில் அரசு கல்லூரியில் யோகா-இயற்கை மருத்துவம் படிச்சேன். சென்னையில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயிற்சியாளராக இருந்தேன். 

கணவர் பேக்கரி தொழில் செய்து வந்தார். ஒரு கட்டத்துல கணவரின் பேக்கரி வியாபாரம் நான் படிச்ச இயற்கை மருத்துவத்திற்கு மாறா இருந்ததால லாபமே கிடைச்சாலும் அந்தத் தொழில் வேண்டாம் என்று விட்டுட்டோம். எல்லோரும் இதைப் போல் யோசித்தாலே பாதி உடல்நல பிரச்னைகள் குறையும்’’ என்று சமூக அக்கறையுடன் தொடர்ந்தார் பிரியதர்ஷினி. 

‘‘2020ல் கொரோனா பாதிப்பினால் நாங்க மீண்டும் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கே போயிட்டோம். அந்த சமயம் பலருக்கு வேலை இல்லை. சாலையோரத்தில் வசிப்பவர்கள் சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஊரடங்கு காரணமாக யாராலும் வெளியே வர முடியாத நிலை. அப்போது ஒருவர் குடிக்க தண்ணீர் கூட இல்லைன்னு சொல்லி அழுதிட்டார். அவரைப் பார்த்து எனக்கு ரொம்பவே கஷ்டமாயிடுச்சு.

மறுநாளில் இருந்தே இவர்களை போல் சுமார் 25 பேருக்கு வீட்லயே சாப்பாடு செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம். மூன்று வருடம் கொடுத்தோம். பசிக்கு சாப்பாடு கொடுத்ததால், எல்லோரும் மனசார வாழ்த்தினாங்க. நாம போகும் போது என்ன கொண்டு போகப் போறோம். மனுசங்களா வாழ்ந்தாலே போதும்...’’ உணர்ச்சிப் பொங்க பேச்சைத் தொடர்ந்தார் பிரியதர்ஷினி.

‘‘இந்த மூன்றாண்டு காலம், கலவை சாப்பாடுதான். விதவிதமா செய்து கொடுத்தோம். எங்களால் கொடுக்க முடியாத போது, வேறு இடத்தில் வாங்கிக் கொடுத்தோம். அவ்வாறு வாங்கித் தரும் போது, எதுவும் சரியாக இருக்கவில்லை. 

எண்ணெய் அதிகமாகவும், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டும் இருந்தது. அப்பதான் இதையே ஏன் ஒரு பிசினஸா செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு எண்ணம் ஏற்பட்டது. நானும் என் கணவரும் சேர்ந்து பேசி முடிவு செய்தோம். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த உணவகத்தை ஆரம்பித்தோம். 

கலவை சாப்பாடுகள் பெரிய ஹோட்டல் முதல் கையேந்தி பவன் வரை கிடைச்சாலும், அனைத்து வகையான கலவை சாதமும் ஒரே இடத்தில் கிடைச்சா நல்லா இருக்கும்ணு யோசிச்சப்பதான் ‘வளைகாப்பு’ உருவாச்சு. 

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலவை சாதத்திற்குதான் முக்கியத்துவம் என்பதால், அதையே எங்க உணவகத்தின் பெயராக வைத்தோம். நாங்க ஏற்கனவே மூன்றாண்டு காலம் உணவினை வழங்கி வந்ததால், பலருக்கு எங்களை தெரிந்திருந்தது. 

அதனால் நாங்க பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்யல. மக்களும் தங்களின் ஆதரவினை கொடுத்தார்கள். ஒன்பது மாசமா நல்லாவே பிசினஸ் போகுது. எங்களின் இலவச சாப்பாடு சேவையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

‘‘எங்க மாமியார் சமையலுக்கான முழு பொறுப்பை பார்த்துப்பாங்க. கணவர் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வருவார். நான் எல்லாத்தையும் நிர்வாகம் செய்கிறேன். சமையல் முழுக்க முழுக்க இங்கு பெண்கள்தான் செய்றாங்க. பெண்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். ஆறு பெண்கள் எங்களிடம் வேலை பார்க்கிறார்கள். கடை அருகில் மதுபானக் கடை இருப்பதால், பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள இரண்டு ஆண்களும் உடன் வேலை பார்க்கிறார்கள். 

பொதுவாக, உணவகம் என்றால் மீதமான காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது. இங்கு அப்படி கிடையாது. அன்று வாங்கும் காய்கறிகளை அன்றே சமைத்திடுவோம். தினமும் புது காய்கறிகளை வாங்கித்தான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். செயற்கை நிறமிகள், சுவைக்காக மற்றும் மணத்துக்காக கலர்  எசன்ஸ், சுவையூட்டிகள் என ரசாயனம் கலந்த மசாலாக்களை பயன்படுத்துவதில்லை.

தற்போது 11 வகையான சாதங்களை செய்கிறோம். தேங்காய், புளி, தயிர் சாதங்கள் மட்டுமில்லாமல் கீரை, ரசம், வத்தக்குழம்பு, புதினா, கறிவேப்பிலை, வெஜ் புலாவ், காளான் பிரியாணி என பலவிதமான சாதங்களை வழங்கி வருகிறோம். சாதத்துடன் சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி என ஒரு இனிப்பும் உண்டு’’ என்றவர் வளைகாப்பு நிகழ்வுக்கும் ஆர்டர் மூலம் செய்து தருகிறார்.

‘‘எங்க கடையின் பெயர் கர்ப்பிணிகளுக்கானது என்பதால், அவர்கள் கடைக்கு சாப்பிட வந்தால் அவர்களுக்கு 50% டிஸ்கவுன்ட் தருகிறோம். மேலும், வளைகாப்பு போன்ற நிகழ்வுகளுக்கும் ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம்.  மசாலாக்களை வெளியே வாங்காமல், நாங்களே தயாரிப்பதால், தரம் மட்டும் சுவையில் நாங்க காம்பிரமைஸ் செய்வதில்லை. 

கலவை சாதம் பொறுத்தவரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைதான் கொடுக்கிறோம். ஆனால், வெஜ்புலாவ், காளான் பிரியாணி போன்ற பிரியாணி வகை உணவுகள் இரவு ஒன்பது மணி வரை கிடைக்கும். எப்போது வந்தாலும், எங்களிடம் சாப்பாடு இருக்கும் என்று மக்கள் நம்பி வராங்க’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் பிரியதர்ஷினி.

‘‘எங்க உணவினை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள் என்பதால், தரத்தில் நோ காம்பிரமைஸ். ஓட்டல் பிசினஸ் பெண்களுக்கு சரியா வராது. அவர்களால் அந்த துறையில் அதிக நாட்கள் நீடிக்க முடியாதுன்னு சொன்னாங்க. நாங்க அந்தத் தடை எல்லாம் கடந்து வந்திருக்கிறோம். 

எங்க உணவகத்திற்கு வர்றவங்க சாப்பிட்டு திருப்தியா போகணும். அதற்காக நாங்க எல்லோரும் கடுமையா உழைக்கிறோம். மகளிர் தினத்தில் எனக்கு விருது தந்து கவுரவிச்சாங்க. பெருமையாக இருந்தது. மேலும், பல வெரைட்டியினை அறிமுகம் செய்யணும். பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரணும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரியதர்ஷினி.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: சங்கர் சபரி