கொரோனா வாரியர் பீலா வெங்கடேசனுக்கு அஞ்சலி!



தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை எப்படி நம்மால் மறக்க முடியாதோ, அதேபோல்  கொரோனா பேரிடர் காலத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பதவிக்கு வந்து, முன்களப் பணியாளராய் ஊடகங்கள் முன் தோன்றி, பொது மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தகவல்களை  பீலா வெங்கடேசன் தெரிவித்ததை அத்தனை எளிதில் யாராலும் மறக்க முடியாது.

தூத்துக்குடி மாவட்டம், வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன். இவரின் தந்தை எல்.என். வெங்கடேசன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குநர். 

இவரின் தாயார் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், மூத்த காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பீலா வெங்கடேசன், பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று, 1997ல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 

இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித் துறைகளிலும், பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியவர். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியராகவும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவரை காதலித்து கரம் பற்றிய பீலா வெங்கடேசன, தன் பெயருக்கு பின் கணவரின் பெயரை இணைத்து பீலா ராஜேஷ் என போட ஆரம்பித்தார். 

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் பாலியல் சர்ச்சையில் சிக்க, அவரைப் பிரிந்து வாழ்ந்த பீலா ராஜேஷ், தனது பெயருக்குப் பின்னால் இருந்த ராஜேஷ் என்ற பெயரை நீக்கிவிட்டு, பீலா வெங்கடேசன் என தனது தந்தையின் பெயரை போட ஆரம்பித்ததுடன், ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ் தாஸ் மீது விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார்.

2019ல் கொரோனா பெருந்தொற்று நம்மை தாக்கிய நிலையில், என்ன நடக்கிறது என்ற தெளிவே இல்லாமல் மக்கள் பீதியில் உறைய, கொரோனா பரவல், தனிமைப்படுத்துதல், மரணம் என பெருந்தொற்று மக்களை ஒரு வழி செய்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் அச்சமும் குழப்பமும் நீடிக்க, கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா வெங்கடேசன் பணி பலரது கவனத்தை ஈர்த்து, மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.

மக்கள் முழுக்க முழுக்க பீதியிலும் குழப்பத்திலும் இருந்த நிலையில், கொரோனா பரவ ஆரம்பித்த ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்தவர், மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்த நிலையை விரிவாக பொதுமக்களுக்கு விளக்கினார்.

 தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாய் பகிர்ந்ததுடன், தெளிவான விளக்கங்களையும் கொடுத்து வந்தார். இது மக்களுக்கு அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை கொடுத்து வந்தது. செய்தியாளர்களை தினசரி மாலைசந்தித்து விளக்கம் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா வெங்கடேசனின் செயல் அந்தக் காலக்கட்டத்தில் பெரிதாகப் பாராட்டப்பட்டது.

இதனால் தமிழகம் அறிந்த நபராய் கொரோனா காலகட்டத்தில் பீலா வெங்கடேசன் இருந்து வந்தார். தினமும் மாலையில் ஊடகத்தை சந்திக்க வரும்போது, நேர்த்தியுடன், அவர் உடுத்தி வரும் சேலைகளும் பொதுமக்கள் கவனம் ஈர்த்தன. இது சமூக வலைத்தளங்களில் அப்போதைய பேசு பொருளானது.

தமிழ்நாட்டில் அப்போது வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு 40,000 ஐ தாண்ட, பீலா வெங்கடேசன் சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளராய் நியமிக்கப்பட்டார். 2021 ஆட்சி மாற்றத்திலும், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார். 

இறுதியாக எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணமடைந்தார்.எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு, தமிழக முதல்வர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த நிலையில், கொரோனா வாரியரான பீலா வெங்கடேசனுக்கு எமது அஞ்சலி.

தோழி டீம்