பொக்கிஷமான நினைவுகளை மீட்டெடுக்கிறோம்!
கருப்புச் சட்டை... வெள்ளை பேன்ட்... காலை 7 மணி என்ற குறிப்புகளுடன் நம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், நாம் கேட்கும் தோற்றத்தில் புகைப்படத்தை வடிவமைத்து தருகிறது ஏ.ஐ(AI). செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நாம் விரும்பிய தோற்றங்களில் புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்வதுதான் இன்றைய டிரெண்ட்.
 நம்முடைய கற்பனை தோற்றங்களையும் தருணங்களையும் செயற்கையாக உருவாக்கி பார்க்கும் போது அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், குரல் பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகளும் எடுப்பதே அரிதாக இருந்த காலத்தில் கேசட், ஃப்ளாப்பி டிஸ்க், 8 mm பிலிம் ரீல் போன்றவற்றில் பதிவாக்கம் செய்யப்பட்ட நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அவர்களின் திருமண நிகழ்வுகளை பார்க்கும் போதும், நம் மழலை குரலை பதிவு செய்திருந்த ஆடியோக்களை கேட்கும்போதும் மனதில் இனம் புரியாத சந்தோஷங்கள் பிறக்கும் தானே..!
 60 முதல் 90களில் பதிவாக்கப்பட்ட காணொளிகளில் நம் சிறுவயது தோற்றத்தையும், நாம் இழந்தவர்களை காணும்போது உணர்வுப்பூர்வமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்பாராத பலவற்றை நம்மை கவரும்படி செய்யும் செயற்கை நுண்ணறிவினாலும் நேரடியாக செய்ய முடியாத வேலையான ஃப்ளாப்பி டிஸ்க், 8 mm பிலிம் ரீல் போன்றவற்றின் தரவுகளை பத்திரமாக மீட்டு அவற்றை டிஜிட்டல் தரவுகளாக மாற்றி நாம் காணக்கிடைக்காத பொக்கிஷங்களை நம் கண்முன்னே காட்டுகின்றனர் ரவிசங்கர் மற்றும் ஷர்மிளா தம்பதியினர்.
“இன்றைக்கு தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதனால், எளிதாக புகைப்படங்களையும் காணொளிகளையும் விதவிதமாக எடுத்துவிடுகிறோம். ஆனால், போட்டோகிராப், வீடியோகிராப் என்பதெல்லாம் ஒரு காலத்தில் வசதிப் படைத்தவர்களால் மட்டுமே அணுகக்கூடியவையாக இருந்தன.
காலங்கள் கடந்து செல்ல மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஃப்ளாப்பி டிஸ்க், 8 mm பிலிம் ரீல், வீடியோ கேசட், ஆடியோ கேசட், போனோகிராஃப் போன்றவற்றில் பதிவு செய்திருப்பார்கள். அதனை இயக்கவும் தனிப்பட்ட பிளேயர்கள் இருக்கும். விஹச்எஸ் டேப்ஸ்களிலிருந்து டிவிடி பிளேயர்கள் வந்தன. எல்லோரும் தங்கள் பழைய ரெக்கார்ட் தரவுகளை புதிய வடிவங்களுக்கு மாற்றி வந்தனர். என் தாத்தா பழைய ரெக்கார்ட் பதிவுகளை புதிய வடிவங்களுக்கு மாற்றித் தரும் தொழிலை செய்து வந்தார். அவர்களை தொடர்ந்து இப்போது நான்காவது தலைமுறையாக நான் இப்பணியை செய்து வருகிறேன்.
பழைய வடிவங்களில் உள்ள பதிவுகளை இயக்க தேவையான பிளேயர்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டன. பழைய வடிவங்கள் புதிய தொழில்நுட்பங்களில் பொருந்துவதில்லை. அதனால் பழைய வடிவங்களை டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற்றுவது அவசியமாகிறது.
ஆனால், அவை அனைத்தும் 50 வருடங்களுக்கு மேலாக பழமையானவை என்பதால், கேசட்டுகள், டிஸ்க்குகள், ரீல்கள் எல்லாம் பழுதடைந்தும் போயிருக்கும். அப்படி இருக்கும் ஆடியோ, வீடியோ பதிவுகளை மீட்டெடுத்து டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற்றுவது சவால் நிறைந்த வேலை. ஃப்ளாப்பி ரெக்கார்டர்களுக்குப் பிறகு சிப் ரெக்கார்டர்கள் வந்தன.
விஹச்எஸ் கேசட்டுகளுக்கு பின்னர் டிவிடிக்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ப்ளூ-ரே வடிவமும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அடுத்த எளிய வடிவமாக எல்லா தரவுகளையும் பென் டிரைவில் பதிவு செய்துகொள்ளும் வசதி வந்தது. எங்களிடம் பழைய ரெக்கார்டர்களை இயக்குவதற்கான பிளேயர்கள் உள்ளன.
எனவே, வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் கேசட்டுகள், டிஸ்க்குகள், ரீல்களை பிளேயர்களில் இயக்கி அதனை டிஜிட்டல் தரவுகளாக மாற்றி பென் டிரைவில் பதிவு செய்து தருகிறோம். என் மனைவியும் இந்தப் பணியில் ஆர்வம் காட்டியதால், நாங்க இருவரும் இணைந்து செய்துவருகிறோம்” என்ற ரவிசங்கரை தொடர்ந்தார் ஷர்மிளா.
“வீட்டுடன் இணைந்து கடை செயல்பட்டதால், என் கணவர் செய்யும் வேலையை நான் பார்த்துக் கொண்டு இருப்பேன். இவர் போட்டோகிராபர் என்பதால் வெளி வேலை வந்ததும் சென்றுவிடுவார். கடையிலும் வேலை இருக்கும்.
அந்த வேலையை நான் செய்ய ஆரம்பித்தேன். சந்தேகம் வந்தால் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். டிஜிட்டல், இணையம் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. இப்போதுள்ள இளைஞர்கள் இது போன்ற பழமையான பொருட்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மிகவும் அரிதாக வெகு சிலரே இந்தப் பணியை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பழைய ஆடியோக்களையும் வீடியோக்களையும் மீட்டுத் தருமாறு எங்களிடம் வருவார்கள். முடிந்தவரை முயற்சி செய்து தரவுகளை மீட்டுத் தருவதிலேயே என் முழு கவனமும் இருக்கும். பெரும்பாலும் அவற்றில் தாத்தா, பாட்டி அல்லது பெற்றோர்களின் திருமண நிகழ்வுகளும், வீட்டில் நடந்த பிற நிகழ்வுகளும், அவர்களின் சிறுவயது பிறந்தநாள் காணொளிகளும், அவர்கள் குழந்தையாக இருக்கும்போது பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகளும் இருக்கும். கேசட்டுகள், டிஸ்க்குகள், ரீல்கள் எல்லாம் பழமையானதாக இருப்பதால் அவற்றை கையாளுவது சவாலானது.
பழமையானவை என்பதால் ரீல்கள் கீறலுற்று அறுந்துவிடுகின்ற நிலையில் இருக்கும். விடுபட்ட ரீல்களை மீண்டும் ஒட்டி இணைத்து ஃபிலிம் டிஜிட்டைசர் கன்வெர்ட்டர் மெஷினில் வைத்து இயக்குவோம். அது ரீலில் உள்ள ஒவ்வொரு படத்தையும் பதிவு செய்து கொள்ளும். பின்னர் அந்தத் தரவுகளை கம்ப்யூட்டரில் சில சாஃப்ட்வேர்களை கொண்டு இயக்கும்போது வீடியோவாக பிளே ஆகும். அதை டிஜிட்டல் வடிவமாக மாற்றி பென் ட்ரைவில் பதிவு செய்து தருவோம். உதாரணமாக 3 மணி நேரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யவேண்டும் என்றால் அந்த வீடியோ முழுமையாக பிளேயாக வேண்டும்.
இடையில் நின்றுவிட்டாலோ வேறு ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ தரவுகள் பதிவாகாது. மீண்டும் வீடியோவை இயக்கி பதிவு செய்ய வேண்டும். எனவேதான் இந்தப் பணிக்கு அதிக கவனமும், பொறுமையும் தேவைப்படும் என்றேன்.
வாடிக்கையாளர்களின் தரவுகளை மீட்டெடுக்கும் செயல்முறையில் எத்தனை தோல்வி வந்தாலும் மீண்டும் முயற்சி செய்து அவற்றை எப்படியாவது மீட்டு டிஜிட்டலாக மாற்றி கொடுத்துவிடுவோம். அவர்கள் அதனை பொக்கிஷமாக பார்க்கிறார்கள். அதை மீட்டுக் கொடுக்கும் போது மனதுக்கு நிறைவைத் தரும்” என்றார்.
வாடிக்கையாளர்களின் பழமையான நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்கும் இந்த அரிதான பணியில் நிறைய சவால்களும் இலக்குகளும் நிறைந்திருக்கும் என்கிறார் ரவிசங்கர். “நாங்க இந்தப் பணியை செய்வது தெரிந்த வாடிக்கையாளர்கள் நேரடியாக எங்களிடம் வருவார்கள். தெரியாதவர்கள் ஸ்டூடியோ, போட்டோ லேப்களில் கொடுத்துவிடுவார்கள்.
அவர்கள் எங்களிடம் கொண்டுவந்து தருவார்கள். நாங்க மீட்டுக் கொடுப்போம். பழுதடைந்த கேசட், டிஸ்க், ரீல் போன்றவற்றை இயக்குவது சற்று சிரமம். சிரமத்தை தாண்டி தரவுகளை மீட்டுத் தருகையில் வாடிக்கையாளர்களின் சந்தோஷத்திற்கு அளவேயிருக்காது.
89 வயதான ஒருவரின் சிறுவயது உபநயம் காணொளியை மீட்டு டிஜிட்டலாக மாற்றிக் கொடுத்தோம். அவர் நெகிழ்ந்து போனார். சிலர் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் வெளிநாட்டில் இருப்பார்கள்.
அவர்களின் சிறுவயது வீடியோக்கள், ஆடியோக்களை மீண்டும் பார்க்க விரும்புவார்கள். அதில் அவர்களின் ஆழமான உணர்வுகள் அடங்கியுள்ளன. இது போன்ற பல நினைவுகளை சுமந்த ரெக்கார்டர்களை பொக்கிஷங்களாக கருதும் வாடிக்கையாளர்களுக்கு அதை மீட்டுக் கொடுப்பதில் சந்தோஷமும் மன நிறைவும் கிடைக்கிறது. தரவுகளை டிஜிட்டலாக மாற்றிய பின்னர் அவற்றை இயக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் கையாள வேண்டும். ஏதேனும் பிழை ஏற்பட்டாலோ, அழிந்துவிட்டாலோ மீண்டும் தரவுகளை மீட்கும் செயல்முறையை செய்ய வேண்டியிருக்கும். எனவே, அவற்றை நிறைய காப்பிகளை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. கூகுள் டிரைவ் போன்ற ஆன்லைன் ஸ்டோரேஜ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வைக்கும்போது தொலையாமல் இருக்க உதவும்.
பழைய ரெக்கார்ட் தரவுகளை மீட்பது மட்டுமின்றி இப்போதுள்ள போட்டோகிராபர்களுக்கும் எங்கள் பணி உதவுகிறது. ஒரே நேரத்தில் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்று படம் பிடிப்பதால் சிப்களை மாற்றும்போது ஏதேனும் குளறுபடி ஆகிவிடும் அல்லது தரவுகள் அழிந்துவிடும்.
அவற்றை மீட்கவும் எங்களிடம் வருவார்கள். பழைய ரீல்களை மீட்டெடுக்கும் பணிகளில் செயற்கை நுண்ணறிவு நேரடியாக பயன்படுவதில்லை. ஃபிலிம் ரீலில் உள்ளவற்றை AI படிக்காது. எனவே, இதில் கைமுறை வேலை அதிகம் உள்ளது. பழைய புகைப்படத்தில் உள்ள புள்ளிகளை நீக்குவதை ஸ்கேனர் மற்றும் சாஃப்ட்வேர் பயன்படுத்தி சரிசெய்யலாம். AI தொழில்நுட்பத்திடம் இதனை செய்ய சொல்லும் போது புள்ளிகளை நீக்குவதுடன் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை மாற்றிவிடுகிறது. ‘ஓல்ட் இஸ் கோல்ட்’தான்” என்றவர், ‘கீர்த்தி வீடியோஸ்’ பெயரில் ஸ்டூடியோ ஒன்றினை சென்னை எல்லிஸ் சாலையில் இயக்கி வருகிறார்.
செய்தி: ரம்யா ரங்கநாதன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|