உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைஇப்போது கூகுளில் ‘S’ என்று தட்டினால் முதலில் வந்து நிற்பது ஹாலிவுட் நடிகை  ஸ்கார்லட்  ஜொஹான்ஸனின் பெயர்தான். காரணம், சமீபத்தில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை ‘உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை’ என்ற பட்டத்தை இவருக்கே கொடுத்திருக்கிறது! 2018-ம் வருடம் திரைப் படங்களில் நடித்ததற்காக ஸ்கார்லட் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?  சுமார் 286 கோடி ரூபாய்!

இதுதவிர விளம்பரம், மாடலிங், பிசினஸ், வசூல் லாபத்தில் பங்கீடு எல்லாம் தனிக் கணக்கு. கோடிகளில் கொழிக்கும் ஜெனிபர் லாரன்ஸ்,  ஏஞ் சலினா ஜூலி, ஜெனிபர் அனிஸ்டன், மிலா குனிஸ் எல்லாம் சம்பள விஷயத்தில் இவருக்குப் பின்னால்தான் நிற்கிறார்கள்.  கடந்த  வருடம் முதல் இடம் பிடித்த எம்மா ஸ்டோன் இந்த வருட பட்டி யலில் முதல் பத்து இடத்துக்குள்கூட வரவில்லை! ‘மார்வெல்’ காமிக்ஸின்  சூப்பர் ஹீரோயினான ‘பிளேக் விடோ’ பாத்திரத்தில் அதிரடியாக  நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஸ்கார்லட்டின் காட்டில் பண  வெள்ளம் தான்.

அழகு, கவர்ச்சியைத் தாண்டி நடிப்பிலும் அசத்தும் ஸ்கார்லட், ‘அண்டர் த ஸ்கின்’ படத்தில் ஏலியனாகவும், ‘த ஜங்கிள் புக்’ கில் பாம்பாகவும், ‘ஹோஸ்ட் இன் த ஷெல்’ படத்தில் ரோபோவாகவும் நடித்து விருதுகளைஅள்ளியிருக்கிறார். ஏலியன், பாம்பு, ரோபோ என மனிதன் அல்லாத வெவ்வேறு பாத்திரங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான்! ஏழுவயதிலேயே நடிக்க ஆரம்பித்த ஸ்கார்லட்டிற்கு  இப்போது வயது 34.

இதற்குள் இரண்டு முறை திருமணம் செய்து, ஒரு மகளுக்குத் தாயாகி, விவாகரத்தும் பெற்றுவிட்டார். அப்பாவும்  அம்மாவும் பிரிந்தபின், 13 வயதிலிருந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்த ஸ்கார்லட், தனது மகளுக்கு பாட்டியின் பெயரைச் சூட்டியிருப்பது  நெகிழ்வு.