ஃபினி ஸ்டிராபிங்கர்



ஜெர்மனியின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஃபினி ஸ்டிராபிங்கர். அவர் குழந்தையாக  இருந்தபோது வீட்டின் மாடிப்படி களில் இருந்து கீழே தவறி விழுந்து விடுகிறார். விழுந்ததில் தலைப்பகுதியிலும், கழுத்திலும், உடலின் பின்பகுதியிலும் பலத்த அடி விழுகிறது. சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் ஃபினியின் கண்பார்வை பறிபோகிறது. பார்வை பறிபோன சில வருடங்களில் காதும் கேட் காமல் போய்விடுகிறது.

ஃபினியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. அதனால் முப்பது வருடங்கள் தன்னந்தனியே, யாரையும் சந்திக்காமல், யாருடனும் அதிகமாகப் பேசாமல் வீட்டிலேயே இருக்க நேரிடுகிறது. அம்மா மட்டுமே அவ ருக்கு ஆதரவாக இருக்கிறார். இந்தக் குரூரமான தனிமை  யிலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஃபினி இழக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாழ்க்கை அர்த்தமுள்ளது எனபதை அவர் அறிந்திருந்தார்.

முப்பது வருடங்களுக்குப்பிறகு படுக்கையை விட்டு வெளியே வரும் அவர் தன்னைப்போலவே பார்வையில்லாத, காது கேட்காத மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.

இந்தத் தருணங்களில் மட்டும்  ‘‘தான் தனிமையை உணருவதில்லை...’’ என்கிறார்.ஃபினி ஒரு இடத்தில் சொல்கிறார், ‘‘யாராவது என் கைகளைப் பிடித்து தொடு மொழியில் என் மனதோடு உரையாடும்போது மட்டுமே அவர்கள் எனக்கு அருகில் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறேன்.

அவர்கள் என் கையை விட்டு விலகிச் சென்று, எவ்வளவு அருகில் நின்றாலும் அவர்கள் ஆயிரம் மைல்களைத் தாண்டி இருப்பதைப் போன்ற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது. நான் சிகிச்சைக்காக படுக்கையில் இருந்தபோது நிறையப் பேர் என்னைப் பார்க்க வருகிறேன் என்று சொன்னார்கள். யாருமே வரவில்லை.

இந்த வாழ்க்கை தரும் மகிழ்ச்சியும் ,துயரமும் என்னைப் பெரிதாக பாதிப்பதில்லை. என்னைப் போன்ற மனிதர்களுக்கு உதவியாக இருப்பதிலும், சந்திப்பதிலும் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர்கிறேன்...’’ என்கிறார்.ஃபினி முப்பது வருடங்கள் தனிமையில் இருந்தபோதுதான் விரும்பிய, வேண்டிய வாழ்க்கையைத்தான் தன்னைப் போன்றவர்களும் வேண்டியிருப்பார்கள் என்று நினைத்து தன்னுடைய குறையை, நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல், பெற்றோர்களால்,

உறவினர்களால், சமூகத்தால் கைவிடப்பட்ட தன்னைப் போன்ற பலரைச் சந்தித்து அவர்களுடன் பேசி, அவர்களுடன் பயணம் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து, அவர்களின் வாழ்க்கையில் சில தருணங்களையாவது மகிழ்ச்சிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், நமக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் நேசத்தையும் கொடுக்கிறார். உண்மையில் ஃபினியின் வாழ்க்கை மகத்தான, ஆழமான போற்றதலுக்குரிய ஒன்று.