புகைப்படம் எடுக்க டிப்ஸ்



‘‘கடந்த மூன்று வருடங் களில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது ஸ்மார்ட்போன் கேமரா...’’ என்று ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகிய ஒரு கட்டுரை சொல்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வந்தவுடன் ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைவிட அதிலிருக்கும் கேமராதான் மக்களை கவர்ந்திழுக்கிறது. கேமராவின் தரத்தைப் பார்த்துதான் அதிகளவில் ஸ்மார்ட்போனை வாங்குகிறார்கள்.

அதனால் தான் ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனத்தைச் செலுத்துகின்றன. மக்களும் தூங்குவது, சாப்பிடுவது, விளையாடுவது, ஷாப்பிங் போவது என தங்களின் ஒவ்வொரு தருணங்களையும் புகைப்படமாக்கி அழகுபார்க்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஸ்மார்ட்போன். ஆனால், அந்தப் புகைப்படங்கள் அவ்வளவு நேர்த்தியாக இருப்பதில்லை.

இந்நிலையில் ஸ்மார்ட்போனில் நல்ல புகைப்படங்களை எடுக்க சில டிப்ஸ்கள் இதோ-முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் முதலில் கையில் எடுப்பது ஸ்மார்ட்போனைத்தான். அப்படி வெளியே எடுக்கும்போது தூசிகள் கேமராவில் படலாம். அப்படியே புகைப்படம் எடுக்கும்போது அது தெளிவாக இருக்காது.

ஸ்மார்ட்போனை கையில் எடுத்தோம், உடனே முன் இருப்பதை க்ளிக் செய்தோம் என்றில்லாமல் ஃப்ரேம் வைக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களின் புகைப்படமெடுக்கும் திறனை வளர்ப்பதோடு இல்லாமல் படைப்பாற்றலையும் மெருகேற்றுகிறது. அடுத்து கேமராவில் இருக்கும் ஜூமை பயன்படுத்துங்கள். இது நீங்கள் எதை புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்களோ அதை துல்லியப்படுத்தும்.

ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஜூம் வசதியைப் பயன்படுத்துவதே இல்லை. வெளிச்சத்தைக் கவனியுங்கள். புகைப்படம் சிறப்பாக வர ஒளிதான் மிக முக்கியமானது. தேவை என்றால் டிரைபாடை உபயோகியுங்கள். தனி நபர்களை புகைப்படம் எடுக்கும் போது போர்ட்ரெயிட் மோடை பயன்படுத்துங்கள். புகைப்படம் கச்சிதமாக இருக்கும்.