அதிசயக் குழந்தைகடந்த வருடத்தின் டிசம்பர் மாதம். இன்னும் நான்கு மாதங்களில் அம்மா ஆகிவிடுவோம் என்று கனவில் இருந்தாள் அந்தக் கர்ப்பிணிப் பெண். உடல் நிலை சரியில்லை என்று அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள ஷார்ப் மேரி பிர்ச் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்படுகிறாள்.

இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என எல்லா வகையான பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. அவளுக்கிருக்கும் பிரச் சனையை வாயில் நுழைய முடியாத பெயரைக் கொண்டு மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தவிர, உயர் ரத்த அழுத்தம் வேறு அவளை பாடாய் படுத்துகிறது. வயிற்றில் இருக்கும் 23 வாரமே ஆன குழந்தையை வெளியில் எடுத்தால் மட்டுமே அவள் உயிர் பிழைக்க முடியும். அறுவை சிகிச்சைக்கு அவளும் கணவனும் சம்மதிக்கிறார்கள்.

அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு அறுவை சிகிச்சை முடிகிறது. ஒரு குட்டியூண்டு பெண் குழந்தை அவர்களுக்குப் பிறக்கிறது. ஓர் ஆப்பிளின் எடையளவே அந்தக் குழந்தையிருக்கிறது. அதாவது 245 கிராம். உலகின் மிகச் சிறிய குழந்தை என்று அக்குழந்தை இணையத்தில் வைரலானது. படுக்கையில் குழந்தையிருப்பதே தெரியாது. அருகில் போய்ப் பார்த்தால் மட்டுமே தெரியும். அந்தளவுக்கு சிறிய குழந்தை அது. சேபி என்று செவிலியர்கள் அக்குழந்தையைச் செல்லமாக அழைக்கின்றனர்.

இப்படி எடை குறைவாகவும் சிறிய அளவிலும் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரத்திலேயே இறந்துவிடும். அதனால் மருத்துவர்கள் சேபியின் தந்தையிடம், ‘‘இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் மகள் இறந்துவிடுவாள்...’’ என்கின்றனர். துவண்டு போகும் அவர் ஒரு மணி நேரம் மகளின் அருகிலேயே கண்ணீருடன் காத்திருக்கிறார். ஆனால், மகள் மரணிக்கவில்லை.

ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஆகிறது. இரண்டு நாள் ஆகிறது. இரண்டு மாதங்கள் ஆகிறது. குழந்தை அப்படியே இருக்கிறது. தவிர, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் குழந்தையின் எடையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.இப்போது அந்தக் குழந்தை 2.2 கிலோ எடையுடன் ஆரோக்கி யமாக உள்ளது. ‘அதிசயக் குழந்தை’ என்று மருத்துவ உலகமே சேபியைக் கொண்டாடுகிறது.