பிக்ஸல் போன்



ஆறு வருடங்களுக்கு முன்பு ‘கூகுள்’ நிறுவனம் ‘பிக்ஸல்’ என்ற ஸ்மார்ட்போன் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன் தரத்துக்குத் தகுந்த மாதிரி விலையும் அதிகம். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஐபோனை விட பிக்ஸலை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். ஆனால், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இணையான ஒரு சந்தையைக் கூட கூகுளால் பிடிக்க முடியவில்லை.

இருந்தபோதிலும் சற்றும் தளராத  ‘கூகுள்’, கடந்த வருடத்தின் இறுதியில் ‘பிக்ஸல் 3’ என்ற புதிய மாடலை களமிறக்கியது. இந்த மாடல் போன்களின் ஆரம்ப விலையே 60 ஆயிரம் என்பதால் பெரிய அளவில் இங்கே விற்பனை யாகவில்லை. அதனால் இப்போது முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ‘பிக்ஸல் 3a’, ‘பிக்ஸல் 3a XL’ என்ற இரண்டு மாடல்களை மே 7- ம் தேதி அன்று விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ‘கூகுள்’.

துல்லியமான காட்சி பிம்பங்களுக்காக 5.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் gOLED டிஸ்பிளே, நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் 3000mAh பேட்டரி திறன், 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், மெமரியை நீட்டித்துக்கொள்ளும் வசதி, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரவில் கூட துல்லியமாக படம் பிடிக்க 12.2 எம்பியில் பின்புற கேமரா என அசத்துகிறது ‘பிக்ஸல் 3a’. விலை ரூ 39,900. ‘பிக்ஸல் 3a’-யில் இருக்கும் வசதிகள் எல்லாம் ‘பிக்ஸல் 3a XL’ லிலும் இருக்கிறது.

அத்துடன் 6 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் gOLED டிஸ்பிளே, 3700 MAH பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது ‘பிக்ஸல் 3a XL’. விலை ரூ.44,999.இந்த இரு மாடல்களும் குவால்காம் 670 பிராசஸரால் இயங்குகிறது. உயர்ரக பிளாஸ்டிக்கால் இதன் மேற்பகுதிகளை கவர்ச்சியாக வடிமைத்திருக்கிறார்கள். எடை குறைவு என்பதால் உங்களின் பாக்கெட்டில் போன் இருப்ப தான உணர்வே இருக்காது.