வசூல் சாதனை!‘அவெஞ்ஜர்ஸ் : எண்ட் கேம்’ திரைப்படம் வெளியான 11 நாட்களிலேயே 230,32,35,585 டாலர்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட்டது. கடந்த 22 வருடங்களாக அந்த இரண்டாம் இடத்தில் இருந்த படம் ‘டைட்டானிக்’. பத்து வருடங்களாக யாராலும் அசைக்க முடியாத முதல் இடத்தில் ‘அவதார்’ இருந்து வருகிறது. ‘அவதாரி’ன் சாதனையையும் ‘அவெஞ்ஜர்ஸ்: எண்ட் கேம்’ உடைத்துவிடும் என்கிறார்கள்.

இந்த நிலையில் ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரான், ‘‘பனிப்பாறைகளில் மோதி டைட்டானிக் மூழ்கியது. என் டைட்டானிக்கை அவெஞ்ஜர்ஸ் மூழ்கடித்துவிட்டது...’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘‘இந்த வசூல் சாதனை திரைப்படத்துறை இன்னும் உயிர்ப்போடு இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது...’’ என்று மேலும் தெரிவித்துள்ளார் கேமரோன். இவரின் ‘அவதார் 2’ 2021-இல் வெளிவரப்போகிறது. அது வசூலில் உலக சாதனை படைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.