புளூ மூன்உலகின் பெரு நிறுவன முதலாளிகளின் முக்கிய திட்டமே மக்களை விண்வெளிச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான். இதற்காக திட்டங்கள் தீட்டி தீவிரமாக இயங்கிவருகிறார்கள்.

பல பில்லியன் டாலர்களை ஜீவானம்சமாக கொடுத்து விவாக ரத்து, தொழிலாளர்களின் எதிர்ப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவிலும் ‘அமேசான்’ நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளிச் சுற்றுலாவில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பிரத்யேகமாக  ‘புளூ ஆரிஜின்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மிகக் குறைந்த செலவில், அதிகளவில் மக்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்வதே பெஸோஸின் முக்கிய நோக்கம். 2005-ம் வருடத்திலிருந்து 15 முறைக்கு மேல் சோதனை ஓட்டங்களை  நிகழ்த்தியிருந்தாலும், இன்னும் ஆறு சோதனை ஓட்டங்களைச் செய்து பார்த்தபிறகே  மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது ‘புளூ ஆரிஜின்’. மணிக்கு  3,675 கி.மீ. வேகத்தில் செல்கின்ற இவர்களின் விண்கலம் சோதனை ஓட்டத்தில் விண்வெளி நிலையத்துக்குச் சென்று வர 11 நிமிடங்களே ஆகியிருக்கிறது.

இந்த சோதனை வெற்றியடைந்த பிறகு டுவிட்டரில், ‘‘நாம் எல்லோரும் நிலவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட வேண்டும்...’’ என்று வேடிக்கையாகச் சொல்லியிருந்தார் ஜெஃப் பெஸோஸ். ஆனால், அது வேடிக்கை அல்ல. ஆம்; 2024-இல் மக்களை நிலவின் தென் துருவத்துக்கு அழைத்துச் செல்கிறார். இதற்காக பிரத்யேகமாக ‘புளூ மூன்’ என்ற புராஜெக்ட்டை ஆரம்பித்து சொற்பொழி வாற்றியிருக்கிறார் பெஸோஸ்.

‘‘நிச்சயமாக புளூ மூன் நிலவை அடையும். மக்களை மட்டுமல்லாமல் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான சாதனங்களையும் எடுத்துச் செல்வோம்...’’ என்று பகிரங்கமாக அறிவித் திருக்கிறார் ஜெஃப். ‘‘ஓ... நையாண்டி செய்வதைக் கொஞ்சம் நிறுத்துங்கள் ஜெஃப்...’’ என டுவிட்டரில் ‘புளூ மூன்’ திட்டத்தைக் கேலி செய்திருக்கிறார் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனர் எலன் மஸ்க்.ஆனால், மக்களை நிலவுக்கு அழைத்துப் போவதில் உறுதியாகவே இருக்கிறார் ஜெஃப் பெஸோஸ்.