மூடப்படும் கடற்கரை‘டைட்டானிக்’ நாயகன் லியோனர்டோ டிகாப்ரியா நடித்த ‘தி பீச்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் 2000-இல் வெளியானது. படத்தின் கதை மற்றும் அதில் நடித்தவர்களைவிட படமாக்கப்பட்ட கடற்கரையைத்தான் பெருதும் மக்கள் ரசித்தார்கள். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கடற்கரைக்குப் போக வேண்டும் என்ற கனவு நிச்சயமாக இருக்கும்.

அந்தளவுக்கு அழகானது அக்கடற்கரை. தாய்லாந்தின் பி பி லே என்கிற தீவில் வீற்றிருக்கும் ‘மாயா பே’ தான் அந்தக் கடற்கரை. சின்னச் சின்னக் குன்றுகள், பாறை களில் படர்ந்திருக்கும் மரங்கள், பவளப்பாறைகள் கடற்கரையை அலங்கரித்து அரணாக அமைந்திருக்கின்றன. படகு அல்லது கப்பல் வழியாக இங்கே வர முடியாது. பாறைகளின் மீது ஏறித்தான் கடற்கரைக்குள் நுழைய முடியும்.

‘தி பீச்’ படத்துக்குப் பிறகு மாயா பே உலகப் பிரபலமானதும் அதை நோக்கி எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். தினமும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேராவது கடற்கரைக்கு வந்து நேரத்தைக் கழித் தனர். இந்த 5 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்கரையின் நீளமும் அகலமும் சிறியது.

மக்கள் நெருக்கடியின் காரணமாக கடற்கரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் அதன் சூழலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் தட்பவெப்ப நிலையும், அழகும் சீர்குலைந்தது. குறிப்பாக மாயா பேவில் மட்டுமே காணப்படும் அரிய வகை பவளப்பாறைகளும் சேதமடைந்தன. இதனால் கடந்த வருடம் மாயா பே கடற் கரையைத் தற்காலிகமாக மூடினார்கள்.

மாயா பேவின் சூழலையும் அழகையும் மேம்படுத்தும் பொருட்டு 2021 வரை கடற்கரையை மூடப்போவதாக கடந்த வாரம் அறிவித்துள்ளார்கள். இது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.மாயா பேவின் புகழ், பிரபலமே அதன் சீர்குலைவிற்கும் காரணமாகிவிட்டதுதான் இதில் ஹைலைட். ஆம்; ‘தி பீச்’ படத்துக்கு முன் தினமும் 500 பேர் கூட மாயா பேவிற்கு வந்ததில்லை.