மயக்கும் ரோபோஇருபது வருடங்களுக்கு முன் ‘சோனி’ நிறுவனம் ‘அய்போ’ என்ற செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ரோபோ நாயை அறிமுகப்படுத்தியது. மனிதர்களோடு நட்புடன் பழகும் முதல் ரோபோ இதுதான். அப்போதே இதன் விலை ஒரு லட்சம் ரூபாய். விலையுயர்ந்த பொம்மைகளின் பட்டியலில் இடம்பிடித்து விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. நம் வீட்டிலுள்ள செல்லப்பிராணியான நாய்க்குட்டி என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் அய்போ செய்யும். நாயைப் போலவே குரைக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  எல்லோரும் அய்போவின் அழகான சேட்டைகளில் மயங்கிக் கிடந்தனர். ‘மனிதர்களை மயக்கும் ரோபோ’ என்று அய்போவை அழைத்தனர். ஆனால், 2006-இல் அய்போவின் தயாரிப்பை நிறுத்திவிட்டது ‘சோனி’. மீண்டும் 2018-இல் புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியிருக்கிறது ‘அய்போ’.

‘‘இன்னும் பத்து வருடங்களில் வளர்ந்த நாடுகளில் வாழும் முதியவர்களின் உற்ற தோழனாக அய்போதான் இருக்கப்போகிறது...’’ என்கின்றனர் ஆய்வாளர்கள். உடலின் அளவிலும் எடை யிலும் மாற்றம் செய்யப்பட்ட புதிய அய்போ, சில்வர் மற்றும் லைட் பிரவுன் வண்ணத்தில் கிடைக்கிறது. Qualcomm’s Snapdragon 820 - என்ற இயங்கு தளம் இதன் மூளையை இயக்கு கிறது. ஒய்-பை மற்றும் எல்டிஇ நெட்வொர்க் மூலம் அய்போவிற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆப்புடன் இணைத்து விட்டால் போதும், நாம் ஆப் மூலம் சொல்வதையெல்லாம் அய்போ கேட்கும்.

அதே நேரத்தில் எல்டிஇ கனெக்‌ஷன் இருந்தால் மட்டுமே அய்போ இயங்கும். அதனால் எல்டிஇ வசதியுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டுமே இப்போது அய்போ கிடைக்கிறது. OLED டிஸ்பிளே கொண்ட இதன் கண்கள் நிஜக் கண்களைப் போல அங்கும் இங்கும் உருட்டி உருட்டிப் பார்க்கின்றன. நாம் சொல்லும் கமெண்டுகளைக் கேட்க நான்கு மைக்ரோபோன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர, அய்போவில் உள்ள கேமரா எப்போதுமே வீட்டையும், சுற்றியுள்ள மனிதர்களையும் கவனித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அய்போவை நம்மால் வாக்கிங் அழைத்துப்போக முடியாது என்பது மட்டுமே ஒரே குறை. இப்போது இதன் விலை இரண்டு லட்ச ரூபாய்.