வைரல் சம்பவம்கடந்த சில நாட்களாக இந்தியா- பாகிஸ்தான் பிரச்னைதான் ஹாட் நியூஸாக இருந்தது. இப்போதும் பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம்தான் வைரலாகி யிருக்கிறது. ஹடியா ஹஷ்மி என்ற 8 வயது பாகிஸ்தானிய சிறுமிதான் இந்த வைரலுக்குக் காரணம். கடந்த வாரம் நெஸ்லே பேஸ்மென்ட் என்ற இசை விழா பாகிஸ்தானில் உள்ள இசைக் கலைஞர்களை அடையாளம் காண்பதற்காக நடந்தது.

ஆயிரக்கணக்கான பாடகர்கள், பாடகிகள் கலந்துகொண்ட நிகழ்வில் ஹடியாவின் குரல் எல்லோரையும் வசீகரித்து மெய் மறக்கச் செய்திருக்கிறது. மருத்துவராகவும் பாடகியாகவும் வேண்டுமென்பது ஹடியாவின் கனவு. இசை விழாவில் அவர் பாடிய பாடலை வீடியோவாக்கி இணையத்தில் வெளியிட, மூன்று மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவைப் பார்த்து வைரலாக்கிவிட்டனர். இந்த வயதில் இப்படி அழகாக எப்படி பாட முடிகிறது என்று ஹடியாவிடம் கேட்டால், ‘‘கடவுளின் பரிசு...’’ என்று புன்னகையுடன் சொல்கிறார் ஹடியா.