புதிய பூச்சிகள்



அமெரிக்காவைச் சேர்ந்த இருபது பூச்சியியல் நிபுணர்கள் இந்தோனேஷியா காடுகளில் தங்கி பூச்சிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 103 வகையிலான புதிய பூச்சி இனங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பூச்சிகள் அனைத்தும் அறிவியலுக்குப் புதியவை என்பதுதான் இதில் ஹைலைட்.‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம் மற்றும் ‘மார்வல்’ காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையும், டார்வின் போன்ற விஞ்ஞானிகளின் பெயர்களையும் இந்தப் பூச்சிகளுக்குச் சூட்டியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிகளில் பெரும்பாலானவை 2 மி.மீட்டருக்கும் குறைவான உயரமும், நீளமும் உடையவை.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிகளில் சிலவற்றை 1885-இல்தான் கடைசியாக விஞ்ஞானிகள் பார்த்திருப்பதாக ஆய்வுத் தகவல் சொல்கிறது. 103 வகையிலான பூச்சிகளையும் அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து மியூசியத்தில் வைக்கப்போகின்றனர். அத்துடன் அவற்றின் இனப்பெருக்கத்துக்கான வேலைகளும் துரிதமாக நடக்கின்றன.இன்னும் என்னென்ன பூச்சிகளை, மர்மங்களை இந்தோனேஷியா காடுகள் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறதோ!