ஹினா ஜெய்ஸ்வால்



இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் ஹினா ஜெய்ஸ்வால். இந்திய விமானப்படை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விமானப் பொறியியல் துறை ஆண்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் போர் மற்றும் ஜெட் விமானங்களின் சிக்கலான கருவிகளைக் கையாளும் பணியை ஹினாதான் மேற்கொள்ளப் போகிறார்.
 
சண்டிகரில் பிறந்து வளர்ந்த ஹினா ஜெய்ஸ்வால், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். போர் வீராங்கனை அல்லது விமான ஓட்டியாக வேண்டும் என்பது ஹினாவின் குழந்தைப்பருவ லட்சியம். ‘‘நான் கண்ட கனவை அடைந்துவிட்டேன். இனிமேல்தான் சுவாரஸ்யங்கள் காத்திருக்கிறது...’’ என்று பரவசத்துடன் சொல்கிறார் ஹினா.

இந்தப் பணி ஹினாவுக்குச் சுலபமாகக் கிடைக்கவில்லை. பல ஆண்களுடன் போட்டி போட்டு விமானக் கருவிகளை இயக்கி, தேர்வு எழுதி,  திறமைகளை நிரூபித்தபிறகுதான் விமானப் பொறியாளராக ஹினாவைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்திய விமானப் படை.