சர்ஃபிங் விளையாட்டில் சாதிக்கும் பார்வையற்ற பெண்!



‘‘கடல் எப்படியிருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், அதன் அருகில் இருந்தாலே ஒருவித விடுதலை உணர்வையும் மன அமைதியையும் உணர்கிறேன். உண்மையிலுமே இப்போது முழு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்...’’ என்று அக மலர்ச்சியுடன் சொல்கின்ற கார்மன் லோபஸ் கார்சியாவால் கடலை கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். ஜெனிடிக்கல் பிரச்சனையில் பிறந்த சில நாட்களிலேயே அவரின் கண்பார்வை பறிபோய்விட்டது. 

கடல் அலைகளின் மீது சறுக்கி விளையாடும் சாகச விளையாட்டான சர்ஃபிங்கில் கார்மன் ஒரு கில்லி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களே திணறும் ஒரு விளையாட்டில் ஸ்பெயினின் தலைசிறந்த ஃசர்பிங் வீராங்கனையாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கார்மனின் இலக்கு, 2024-இல் நடைபெறும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்கில் நாட்டுக்காக தங்கத்தைத் தட்டி வரவேண்டும் என்பதே.

‘‘சர்ஃபிங் மட்டுமல்ல, குதிரை ஏற்றத்திலும் கார்மன் கெட்டிக்காரியாக இருக்கிறாள்...’’ என சர்ட்டிபிகேட் தருகிறார் சர்ஃபிங் பயிற்சியாளர். இத்தனைக்கும் கார்மனின் வயது 21 தான்.