ஃப்ளையிங் டாக்ஸி!இதோ வந்துவிட்டது ஃப்ளையிங் டாக்ஸி.  இனி அந்தரத்தில் பறந்து அலுவலகத்துக்குச் செல்லலாம்.  ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் எலெக்ட்ரிக் காரும், ராட்சத ட்ரோனும் இணைந்த வடிவில் காட்சியளிக்கும் ஃபிளையிங் டாக்ஸி மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கிறது. 400 கி.மீ வரை வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். லண்டன், நியூயார்க் போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஃபிளையிங் டாக்ஸியை உருவாக்கியிருப்பதாக தயாரிப்பாளர்கள் சொல்கின்றனர்.

ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஆடி’யும், ஐரோப்பியன் ஏர்கிராஃப்ட் தயாரிப்பு நிறுவனமான ‘ஏர்பஸ்’ஸும் கூட்டு சேர்ந்து இதைத் தயாரித்துள்ளது. இத்தாலியன் பொறியாளர்கள் இதனை டிசைன் செய்துள்ளனர். இரண்டு, மூன்று தோல்விகளுக்குப் பின் கடந்த வாரம் ஃப்ளையிங் டாக்ஸியின் சோதனை ஓட்டம் ஆம்ஸ்டர்டாமில் வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது. 2020-இல் ஃப்ளையிங் டாக்ஸி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.