உலகின் எளிய அதிபர்!



கொரில்லா போராளியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து உருகுவேயின் அதிபராக உயர்ந்தவர் ஜோஸ் முஜிகா. இவர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகள் (2010-2015) உருகுவேயின் பொற்காலம். வயது மூப்பு காரணமாக இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார் முஜிகா. இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சாதாரணமானது அல்ல.

எழுபதுகளில் உருகுவேயின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி போராளிகளை சிறையில் அடைத்தது. முஜிகா போன்ற முக்கியமானவர்களுக்குக் கடுமையான தண்டனை. அதாவது அவர்களின் சிந்தனைத் திறனை முடக்கி மனதின் சமநிலையைக் குலைத்து பைத்தியம் பிடிக்க வைப்பது தான் அந்த தண்டனை.

1973-85 வரை இந்தக் கொடிய தண்டனையை அனுபவித்த முஜிகா, கொஞ்சமும் குலைந்து போகாமல் மன உறுதியுடன் மக்களுக்காகப் போராடி உருகு வேயின் அதிபரானார்.  தான் வாங்கிய சம்பளத்தில் 90 சத வீதத்தை தன் நாட்டு மக்களுக்கே கொடுத்துவிட்டார். இன்று முஜிகாவை ‘உலகின் எளிய தேசத் தலைவன்’ என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.